க்ளாசிக் சினிமாவில் காமெடியில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர் நாகேஷ். மனமுள்ள மறுதாரம் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். காமெடி வசனங்கள் மட்டுமல்லாமல் தனது உடல்மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த நாகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். அவரை போல் யாரும் நடிக்க முடியாது, அவர் ஒரு நடிப்பு பல்கலைகழகம், அவரை தான் இன்றைய நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். சிவாஜி நாகேஷ் கூட்டணியில் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் திருவிளையாடல் படத்தில் அந்த தருமி கேரக்டரில் நாகேஷ் தான் நடிக்க வேண்டும் என்று சிவாஜி விரும்பியதாகவும் தகவல்கள் உள்ளது.
இப்படி இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்து வந்த நிலையில், சிவாஜி குறித்து நாகேஷ் பேசியது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. இதில், நான் பிஸியாக நடித்து வந்த நேரம். ஒருநாள் கால்ஷீட்டை பல படங்களுக்கு பிரித்து கொடுத்து நடித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் சிவாஜி சாருடன் 9 மணிக்கு கால்ஷீட். ஆனால் வேறொரு படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் சிவாஜி படத்திற்கு வருவதற்கு 11 மணி ஆகிவிட்டது.
நல்ல வெயிலில் இருந்து செட்டுக்கு உள்ளே சென்றதால் யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் நான் உள்ளே சென்றதும் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். செட்டே எனக்காக காத்திருக்கு. ஆனால் அது தெரியாமல், அனைவரும் அமைதியாக இருக்க கேமரா வொர்க் நடக்காமல் இருப்பதை பார்த்து ஏன் இன்னும் சிவாஜி வரவில்லையா என்று கேட்டேன். ஆனால் இந்த கேள்விக்கு பதில் வரவில்லை.
அதன்பிறகு என்னயா முழிக்கிறீங்க அதாய்யா இன்னும் திருடன் வரலையா என்று கேட்டேன். நான் இப்படி பேசுவதை பார்த்து எனக்கு சிலர் ஜாடை காட்டுகிறார்கள். ஆனால் அது எனக்கு புரியவில்லை. நான் நாற்காலியில் கை வைத்துக்கொண்டு திருடன் வரலையா என்று கேட்டபோது அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவரை பார்த்து எனக்கு தூக்கி வாரி போட்டது. அந்த நாற்காலியில் சிவாஜி தான் மேக்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். உடனே நான் சுதாரித்துக்கொண்டு தெய்வமகன் வந்தாச்சா என்று சொன்னேன்.
அதை சொல்லிவிட்டு அதே வேகத்தோடு ஓடி தப்பித்துக்கொள்ள பார்த்தேன். இப்போது சிவாஜி டேய் நில்றா என்று சொல்ல, நான் ரெண்டுமே நீங்க நடிச்ச படம் தானே அதனாலதான் நான் அப்படி சொன்னேன் என்று சமாளித்தேன். ஆனாலும் அவரது பார்வை கடுகடுனு இருந்ததால் இன்னைக்கு நாம தொலைஞ்சோம் என்று நினைத்தேன். ஆனால் சிவாஜி இன்னைக்கு என்ன சீன் என்று கேட்டு சகஜமாகிவிட்டார்.
எனக்கு ரொம்ப பிஸியாக இந்த மாதிரி நேரங்களில் சிவாஜியை பலமுறை காக்க வைத்திருக்கிறேன். அப்போதெல்லாம் இவனை இந்த படத்தில் இருந்து தூக்கி புத்தி புகட்ட வேண்டும் என்று நினைப்பாராம். அவர் அப்படி நினைக்கும்போது நான் அவரது முன் போய் நின்றுவிடுவேன். அப்போது அவர் நாகேஷ் சார் வாங்க என்று சொல்வார். அவர் சார் என்று கூப்பிட்டாலே கோபம் தான். அந்த கோபத்திலும் அவர் நயம் தவறாமல் கிண்டல் செய்வார்.
அவருக்குள் இருக்கும் தொழில் ஈடுபாட்டை வைத்து அந்த நேரத்தில் அவரை சமாளித்துவிடுவேன். அவர் கோபமாக சார் என்று சொல்லும்போதே நான் அதை கண்டுக்காம அவரது கவனத்தை தொழில் மீது திருப்பி விடுவேன். அப்படி ஒருமுறை அவர் என் மீது கோபத்தில் இருந்தபோது அண்ணே மேக்கப் போட்டதுல ரெண்டு புருவத்திற்கும் வித்தியாசம் இருக்கு என்று சொன்னேன். அப்போது அவர் கோபத்தை மறந்து அவரது மேக்கப் மேனை கூப்பிட்டுக் கேட்டார்.
அதன்பிறகு சரியாத்தானே வரைந்திருக்கிறான் என்று சொல்ல, சரிதான் ஆனால் ஒரு புருவத்தை விட மற்றொன்று கொஞ்சம் சின்னதா இருக்கு என்று சொன்னேன். அதன்பிறகு மேக்கப் மேனை கூப்பிட்டு மீண்டும் புருவத்தை வரைய சொல்லி இப்போது எப்படி இருக்குனு கேட்பார். அப்போ நான் ஓகே சொன்னால் தான் திருப்தியாக ஷாட்டுக்கு போவார். அதேபோல் திருவிளையாடல் படம் எனக்கு தருமி வேஷம் என்ற உடனே நான் அதில் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
அப்போது மைலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் ஒல்லியான ஒருவர் செய்ததை தான் நான் திருவிளையாடல் படத்தில் செய்தேன். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் கிடைத்த 2 மணி நேர இடைவெளியில் தான் அந்த காட்சியில் நடித்தேன். அந்த வருடத்தில் தான் நான் நடித்த 46 படங்கள் வெளியானது. அப்படி என்றால் நான் எவ்வளவு பிஸி என்று நினைத்துப்பாருங்கள். இந்த படத்தின் ஷூட்டிங்கில் சிவாஜிக்கு சிவன் வேஷம் போட லேட் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நான் என் காட்சிகளை முதலில் வசனம் பேசிவிடுகிறேன் என்று கேமராமேனிடம் சொன்னேன் அவரோ நீங்கள் வசனம் பேசும்போது சிவாஜி வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி நான் நடித்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் நான் நடிக்க தொடங்கிய உடனே சிவன் வேடத்தில் சிவாஜி செட்டுக்குள் வந்துவிட்டார். இதை பார்த்து கடுப்பான சிவாஜி இயக்குனரிடம் என்ன நாகேஷ் நடிச்சிட்டு இருக்கான் என்று கேட்டார். அதன்பிறகு இயக்குனர் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். நடித்து முடித்து அந்த காட்சியை பார்த்த சிவாஜி நாகேஷ் நல்ல நடிச்சிருக்கான். ஒரு சில இடங்களில் மட்டும் சரியாக வரல அந்த இடங்களில் மீண்டும் நடிக்க சொல்லுங்கள் என்று சிவாஜி சொன்னார்.
தீபம் படத்தில் ஒரு காட்சியில் ரஹீம்பாய் என்று அவர் என்னை கூப்பிட வேண்டும். அவர் கணீர்க் குரலில் கூப்பிட்டார் ஆனால் நான் ஒன்றுமே பேசவில்லை. கேமரா கட் ஆனதும் சிவாஜி என்னை அழைத்து என்னாச்சி உனக்கு என்று கேட்க, ஒரு வேலைக்காரன் துரோகம் செய்துவிட்டதால் இந்த வேலைக்காரனிடம் ஆதரங்கத்தை தீர்க்க பேசுகிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்கள் குரலில் கம்பீரம் இருக்க கூடாது கனிவு தான் இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
அதன்பிறகு நான் எப்படி நடிக்க வேண்டும் நீயே நடித்து காட்டு என்று சொன்னார். நான் தயங்கினேன். ஆனால் அவர் நடிக்க சொல்லி வற்புறுத்தியதால் நான் நடித்து காட்டினேன். அதை அவருக்கே உண்டான ஸ்டைலுடன் நடித்து முடித்தார். எனக்கே அழுகை வந்துவிட்டது. நடித்து முடித்தவுடன் எப்படிடா என்று என்னை பார்த்து கேட்டார் நான் கோடு தான் போட்டேன் நீங்கள் ரோடே போட்டுவிட்டீர்கள் என்று சொன்னேன் என நாகேஷ் கூறியுள்ளார்.
நன்றி: தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்