நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'குரங்கு பெடல்' பத்திரிக்கையாளர் சந்திப்பு

By News Room

மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

 

படத்தின் எழுத்தாளர் ராசி அழகப்பன், "இந்தப் படத்தின் கதை ஆறு வயதில் எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த ஒன்று. அதை படமாக்கிய இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நன்றி. சைக்கிள் கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் இதைப் பார்க்கலாம். எல்லோருமே சைக்கிள் ஓட்டியிருப்பீர்கள். அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார். 

 

வசனகர்த்தா பிரபாகரன், "சரியான நேரத்தில் சரியான நபர் இந்தப் படத்தை வெளியிடுகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். 'அந்த காலத்துல...' என கதை ஆரம்பிப்பவர்களை தேடிப்பிடித்தோம். ஏனெனில், அவர்களிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும் நினைவுகளும் இருக்கும். இந்தப் படத்தில் வேலை பார்த்தவர்களும் இது அவர்களுடைய படம் என்று நினைத்துதான் வேலை பார்த்தனர். நீங்களும் படம் பார்த்து ஆதரவு கொடுங்கள்".

 

ஒளிப்பதிவாளர் சுனில் பாஸ்கரன், "படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் ப்ரோ, 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். படத்தை பிரசண்ட் செய்ய சொன்னோம். அதை சரியாக செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி". 

 

இயக்குநர், பாடலாசிரியர் பிரம்மா, "சமீபகாலங்களில் குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வருவதில்லை. எல்லாம் வன்முறை படங்கள் தான். பல வருடங்கள் கழித்து குழந்தைகளுக்கான படமாக 'குரங்கு பெடல்' வந்துள்ளது. பெரிய நம்பிக்கையை இந்தப் படம் கொடுக்கும். எனக்குப் பிடித்த இந்தப் படம் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார். 

 

எடிட்டர் சிவநந்தீஸ்வரன், "குழந்தைகளுக்கான படம் இல்லை என்பது உண்மைதான். இப்போது வரும் படங்கள் நம்முடைய குழந்தைகளை நெருக்குதலுக்கு ஆளாக்குகின்றன. நம்முடைய பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்து இந்தப் படம் பார்க்கலாம். டிஜிட்டல் உலகம் குழந்தைகளை எப்படி மாற்றுகிறது என்பது பயமாக இருக்கிறது. அதனால் குழந்தைகள் என்ன பார்க்க வேண்டும், என்ன கேட்க வேண்டும் என்பதை பெற்றோராக தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதற்கான சிறு முயற்சி தான் இந்த படம். அதற்கான பிளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி".

நடிகர் ஜென்சன் திவாகர், "படத்தைப் போலவே படப்பிடிப்பும் ரிலாக்ஸாக இருந்தது. இயக்குநர் கமல் அண்ணா ரொம்ப பொறுமையாக எங்களை ஹேண்டில் செய்தார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்". 

 

தயாரிப்பாளர் சவிதா, " இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து படத்தை வெளியிட்டு கொடுக்கும் சிவகார்த்திகேயன் சார் வரைக்கும் அனைவருக்கும் நன்றி.  'குரங்கு பெடல்' கதை கேட்டதும் உடனே நான் கனெக்ட் ஆகிவிட்டேன். சைக்கிள் நம்முடைய முன்னேற்றத்தில் முக்கியமானது. குறிப்பாக, பெண்களுக்கு பல சுதந்திரம் கொடுத்தது". 

 

தயாரிப்பாளர் சஞ்சய், "எங்கள் எஸ்.ஆர்.ஜே. புரொடக்‌ஷன்ஸின் முதல் படம். படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி!".

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலை, " இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. இண்டர்நெட், மொபைல் இல்லாத காலக்கட்டத்தில் வாழ்க்கை எப்படி நிதானமாக இருந்தது என்பதை இதில் பார்க்கலாம். இந்தப் படத்தின் முக்கிய ஸ்ட்ரென்த் இயக்குநர் கமலக்கண்ணன், தயாரிப்பாளர் சவிதா. நிச்சயம் பலருக்கும் நினைவுகளைத் தூண்டி விடும்". 

 

நடிகர் காளி வெங்கட், "இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது. என் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களை இந்தப் படம் நினைவுப்படுத்தி இருக்கிறது. 'குரங்கு பாடல்' கோவா ஃபிலிம் பெஸ்டிவல் ஒன்றில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது. எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த நியாபகங்கள் எல்லாம் எனக்கு இந்தப் படத்தில் வந்தது. உங்களுக்கும் பிடிக்கும்". 

 

இசையமைப்பாளர் ஜிப்ரான், " இந்தப் படம் பார்த்ததும் எனக்கு கனெக்ட் ஆகிவிட்டது. நமக்கு மீசை முளைப்பதற்கு முன்னால், நாம் பெரிய பையனாகி விட்டோம் எனச் சொல்வது சைக்கிள்தான். 'வாகை சூடவா' படத்திற்குப் பிறகு கிராம சூழலில் இசை செய்ய இந்தப் படம் வாய்ப்புக் கொடுத்தது. படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி". 

இயக்குநர் கமலக்கண்ணன், "இந்தப் படம் மக்களிடம் போய் சேரக் காரணமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை அவர்களுடைய சொந்த படமாக நினைத்து உருவாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. சென்சிபிளான படம் எடுத்துள்ளோம். பார்த்துவிட்டு செல்லுங்கள்".

.
மேலும்