அமிதாப் பச்சன் தயாரித்த முதல் தமிழ்ப்படமும் இதுதான்.
1997 ஆம் ஆண்டு, இரட்டை இயக்குநர்களான ஜே.டி மற்றும் ஜெர்ரி ஆகியோரால் இயக்கப்பட்டு, வெளியான முக்கோண காதல் கதை, உல்லாசம். இப்படத்தில் அஜித் குமார், விக்ரம், மகேஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுவரன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
இப்படத்தை அமிதாப் பச்சன் தனது சொந்த பேனரில், தமிழில் முதன்முறையாக தயாரித்தார். இப்படத்துக்குண்டான ஒளிப்பதிவினை மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா செய்திருந்தார். வசனங்களை பாட்ஷா படத்துக்கு வசனங்கள் எழுதிய பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியிருந்தார். இசையினை கார்த்திக் ராஜா அமைத்திருந்தார்.
உல்லாசம் திரைப்படத்தின் கதை என்ன?
ஒரு தெருவில் அடுத்தடுத்து வீட்டுக்காரர்கள் ஜே.கே மற்றும் தங்கய்யா. ஜே.கே. ஆயுதக்கடத்தல் குற்றப்பின்னணியில் ஈடுபடும் குற்றவாளி, தங்கய்யா அரசுப் பேருந்து ஓட்டுநர்.
இதில் ஜே.கே.யின் மகன் தேவ். பேருந்து ஓட்டுநர் தங்கய்யாவின் மகன் குருமூர்த்தி என்கிற குரு. இதில் குரு, பக்கத்து வீட்டுக்காரரான ஜே.கே-யை சிறுவயதில் இருந்து பார்த்து பார்த்து, அவரைப்போல் ஆக நினைக்கிறார். ஆனால், ஜே.கே.யின் சொந்த மகனான தேவ், தனது தந்தையின் செயல்களை சிறுவயதில் இருந்து பார்த்து பார்த்து எரிச்சல் அடைந்து நல்ல மனிதராக வாழ ஆசைப்படுகிறார். தேவ் மற்றும் குரு இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இதில் தேவ், கல்லூரியில் சிறந்த பாடகராக இருக்கிறார்.இதனால் அவருக்கு கல்லூரியில் நிறையப் பெண் ரசிகைகள் இருந்தனர். குரு, அந்த கல்லூரியில் நல்ல டான்ஸராக இருக்கிறார். ஆனால், பிற்காலத்தில் ஜே.கேயுடன் இணைந்து ரவுடிசத்தில் ஈடுபடுகிறார்.
இதில் குருவும் தேவ்வும், அந்த கல்லூரியில் படிக்கும் மேகா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலிக்கின்றனர். ஆனால், மேகா, குருவை ஒரு தலையாக காதலிக்கிறார்.
தங்கய்யா, தேவ்வின் காதல் பற்றி அறிந்து, தனது மகன் குருவிடம் மேகாவை காதலிப்பதை விட்டுவிடுமாறும், அவன் ஒரு அமைதியான வாழ்க்கை விரும்புவதாகவும் கூறுகிறார். இதனால் மனம் மாறும் குரு, மேகாவை புறக்கணிக்க முயற்சிக்கிறார். ஆனால், தேவ், மேகா குருவைத் தான் காதலிக்கிறார் என்பதை உணர்கிறார். மேலும் தன் ஒரு தலைக் காதலை, தேவ் மறைத்துக் கொள்கிறார்.
இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்க வேண்டும் என்று கூறி, வாழ்த்துகிறார். பின் இருவரும் மேகாவும் குருவும் ஜோடி சேர்கின்றனர். படம் முடிகிறது. ஒரு அழகான முக்கோண காதல் கதையாக இந்தப் படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது.
நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் குருவாக அஜித் குமாரும், தேவ் ஆக விக்ரமும் நடித்துள்ளனர். மேகாவாக மகேஸ்வரி நடித்திருந்தார். ஜே.கே.வாக ரகுவரனும், தங்கய்யாவாக எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் நடித்து இருந்தனர். குருவின் அம்மாவாக ஸ்ரீவித்யா நடித்திருந்தார்.
உல்லாசம் திரைப்படத்தில் இசையின் பங்களிப்பு:
உல்லாசம் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். பின்னணி இசையும் பாடல்களும் கார்த்திக் ராஜாவின் இசையில் சூப்பர் ஹிட்டாகின. கார்த்திக் ராஜா யார் என்று கேட்டால், இப்படத்தின் பாடல்களை உதாரணத்திற்கு எடுத்துக் கூறலாம்.
’’சோ லாரே சோச்சோ லாரே.. காதல் செய்தால் மோட்சம் தானே, இளவெனில் காலத்தில் என் ஜீவன் எங்கெங்கும், கொஞ்சும் மஞ்சள் பூவே அழகே உன்னைச் சொல்லும்.. சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும், முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா, வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா, வாலிபம் வாழச்சொல்லும் சாலையோர ஊர்வலம், யாரோ யார்யாரோ’’ என அத்தனை பாட்டுக்களுமே ஹிட்டாகின.
இதில் முத்தே முத்தம்மா பாடலை, கமல்ஹாசன் பாடியிருப்பார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அவ்வளவு மோசமான படம் ஒன்றும் இல்லை. இப்போது டிவியில் போட்டாலும் அஜித், விக்ரம், மகேஸ்வரியின் நடிப்பினை ரசிக்கமுடியும்.
நன்றி: தேன்மொழி