கவர்ச்சி நடன நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை!

By Mini Cini

14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வயதில் சினிமாவின் உச்சத்திற்கு சென்று, சென்னையில் கார் பங்களா என வசதியுடன் வாழ்ந்த நடிகை ஒருவர் ஒரு சில ஆண்டுகளிலேயே தலைகீழாக ஏழ்மை நிலைக்கு திரும்பி, கடன் காரணமாக சிறைக்கும் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றால் அது நடிகை ஜெயக்குமாரியின் சோக கதைதான்.

நடிகை ஜெயக்குமாரி பெங்களூரை சேர்ந்தவர். இவர் சினிமாவில் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக சென்னை வந்த நிலையில் அவருக்கு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் கலெக்டர் மாலதி என்ற மலையாள திரைப்படத்தில் பிரேம் நசீர் ஜோடியாக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் பல மலையாள படங்களில் நடித்தார்.

தமிழில் எம்ஜிஆர் நடித்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் நம்பியாருக்கு தங்கையாக நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இருப்பினும் ஜெயக்குமாரிக்கு ஒரு பாடல் நடனமாட வாய்ப்புகள் கிடைத்தது.  சிஐடி சங்கர், அனாதை ஆனந்தன், மாணவன், மீண்டும் வாழ்வேன், நூற்றுக்கு நூறு, அருணோதயம், காசேதான் கடவுளடா, கௌரவம் உள்ளிட்ட பல படங்களில் அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அவரது நடனம் அந்த கால இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

கவர்ச்சி நடனம் ஆடுவதற்காக அவர் பெரிய தொகையை சம்பளமாக பெற்றதால் அவர் மிக குறுகிய காலத்தில் செல்வந்தர் ஆனார். சென்னையில் ஒரு மிகப்பெரிய மாளிகையை வாங்கினார் என்றும் அவரிடம் இரண்டு விலையுயர்ந்த கார்கள் இருந்தது என்றும் கூறப்பட்டது. அவருடைய வீட்டின் மாடியில் தான் நடிகை ராதிகாவும் அவருடைய அம்மாவும் வாடகைக்கு இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஜெயக்குமாரி சிங்கப்பூருக்கு கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது அப்துல்லா என்பவரை சந்தித்து அவரை காதலித்தார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். குழந்தைகள் பிறந்த பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் அவர் பட தயாரிப்பில் ஈடுபட்டார்.

ஏ.எஸ்.பிரகாசம் என்பவர் இயக்கத்தில் படம் தயாரித்துக் கொண்டிருந்தபோது அவருடைய கையில் இருந்த காசு எல்லாமே செலவாகிவிட்டது. அதன் பிறகு வட்டிக்கு வாங்கி படத்தை தயாரித்தார். ஆனாலும் அந்த படத்தை அவரால் முடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கடன்காரர்கள் நெருக்கிய நிலையில் வீடு, கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டார். அதன் பிறகும் அவரால் கடனை தீர்க்க முடியவில்லை என்பதால் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து சிறைக்குச் சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் மிகவும் சோகத்தில் இருந்த அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அன்றைய முதல்வரான கலைஞர் கருணாநிதியை சந்தித்ததாகவும் கருணாநிதி தான் காவல்துறை அதிகாரிகளிடம் கூறி அவருக்கு நீதி பெற்று தந்ததாகவும் கூறப்பட்டது.  ஒரு வழியாக வழக்கில் இருந்து விடுதலை பெற்றாலும் அவரை காப்பாற்றுவதற்காக ஒருவர் கூட முன்வரவில்லை என்பதுதான் பெரும் சோகம். கணவர் மற்றும் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் சென்னைக்கு ஒதுக்கு புறமான பெருங்குடி என்ற பகுதியில் அவர் ஒரு குடிசையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பத்திரிகையாளர் ஒருவர் அவரை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து பத்திரிகையில் வெளியானதும்தான் அன்றைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அவருக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.  இருப்பினும் தற்போது அவர் இரு சிறுநீரகங்களிலும் பிரச்சனை என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் கூட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அவரை நேரில் சந்தித்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

14 வயதில் சினிமாவுக்கு வந்து புகழின் உச்சம் சென்று, கார், பங்களா என வசதியாக வாழ்ந்து, ஒரே ஒரு சொந்த பாடம் எடுத்ததால் வாழ்க்கையே தலைகீழாக மாறிய சோகத்தை சந்தித்தவர் ஜெயக்குமாரி. இவர் மட்டுமின்றி ஏராளமான நடிகர்கள் தாங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை எல்லாம் சொந்த படம் எடுத்து தான் இழந்து உள்ளார்கள்.

.
மேலும்