பாலுமகேந்திராவும் இளையராஜாவும் 22 படங்களுக்கு சேர்ந்து பணியாற்றியுள்ளனர். இருவரும் சேர்ந்து படைத்தவையும் அவற்றின் பாடல்களும் இன்று வரை கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இளையராஜா குறித்தும் அவரின் இசை குறித்தும் இளையராஜாவுக்கும் தனக்குமான நட்பு குறித்தும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா, தெரிவித்ததாவது: ’‘மூடுபனி’ படத்தின் இசைச் சேர்க்கைக்கு முன், அதற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எண்ணங்களை இளையராஜாவுக்கு மிக நுணுக்கமாகத் தெரியப்படுத்தியிருந்தேன்.
இசைஞானியுடன் பணியாற்றத் தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களில் ஒருநாள் ராஜா என்னிடம் கேட்டார். “ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”
என்ன மன நிலையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை உடனடியாக நான் புரிந்துகொண்டேன். இசை அமைப்பதில் அதுவரை அவர் அனுபவித்து வந்த படைப்புச் சுதந்திரத்திற்குள் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கே தோன்ற ஆரம்பித்திருந்தது.
கொஞ்சம் யோசித்துவிட்டு நான் சொன்னேன்:
“ஒரு நதி அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக்கொண்டே இருக்கும். ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம்.
அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்துகொள்ள, அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது.
வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது.
அந்த நீர்த் தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ளக் கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடி தொடர்கிறது. இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய்விடுகிறது. இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும் வேகம்,
ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது? அதன் கீழேயுள்ள நிலப்படுகைதானே - நிலத்தின் அமைப்புதானே தீர்மானிக்கிறது!
நான் பேசப் பேச ராஜாவின் அகத்தில் ஏற்பட்ட தெளிவு அவர் முகத்தில் தெரிகிறது.
“இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை, அந்தப் படம்தான், அந்தப் படத்தின் திரைக்கதைதான் தீர்மானிக்கிறது. இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவையும், ஒலி அமைப்பையும், நடிப்பையும், படத் தொகுப்பையும், உடைகளையும் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதைதான்!”
கேட்டுக்கொண்டிருந்த ராஜாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. கைதட்டி ஆமோதிக்கிறார். அன்று முதல் இன்று வரை எனது படங்களுக்கான அவரது இசை அந்தந்தத் திரைக்கதைகளின் தேவையை ஒட்டியே இருந்துவந்திருக்கிறது.
எனது படங்களில் வரும் மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனது அர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசை கொண்டு அவர் கலைத்ததில்லை’’ என்று நெக்குருகிச் சொல்லியுள்ளார் பாலுமகேந்திரா.