ஹிட் அடித்த ஆவாரம்பூ

By Mini Cini

தமிழில் தேவர் மகன் படத்தின் மூலம் தான் கால் தடத்தை அழுத்தமாக பதித்த இயக்குனர் பரதன் அதற்கு முன்பே தன் கால் தடத்தை லேசாக பதித்து விட்டு சென்ற படம்தான் ஆவாரம்பூ.

 

படத்திற்கு திரைக்கதை மலையாள சினிமா உலகில் புகழ்பெற்ற பத்மராஜன் ஆவார். 1979ம் ஆண்டு பிரதாப்போத்தன் சுரேகா நடிக்க வெளிவந்த தகரா படத்தின் ரீமேக்தான் ஆவாரம்பூ. 13 வருடங்களுக்கு பின் தயாரிப்பாளர் கேயாரின் தயாரிப்பில் இப்படத்தை தமிழில் இயக்கினார் பரதன். இதற்கு பிறகு வந்த தேவர் மகனும் வெற்றி பெற்றதால்  பரதனை பல தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தது இருப்பினும் அதன் பின் இவரின் அதிக படங்கள் தமிழில் வரவில்லை . தேவராகம் மட்டுமே வந்தது, அதுவும் மலையாளத்தில் டப் வெர்சனாக தான் வந்தது.

 

ஒரு வெகுளியான பையனாக வினீத், ஊரில் முரட்டு மனிதராக தேவர் கதாபாத்திரத்தில் நாசர், அவருக்கு இரண்டு மனைவிகள். நாசரின் மகள் தாமரையாக வரும் நந்தினியுடன் சர்க்கரையாக வரும் வினீத் பாசமாக நட்பாக வெகுளித்தனமாக பழகி வருகிறார்.

 

இதனிடையே ஆசாரியாக வரும் கவுண்டமணி நந்தினியை விரட்டி சென்று டாவடிக்க, அவர் நந்தினியால் அவமானப்படுத்தப்படுகிறார் .

 

 உடனே வெகுண்டெழுந்த கவுண்டமணி அப்பாவியான வெகுளியான சர்க்கரை கதாபாத்திரத்தில் வரும் வினீத்தை தாமரையோடு கோர்த்து விட வேண்டும் என வில்லத்தனம் செய்து, தாமரையிடம் நன்கு பழக வைக்க முயற்சிக்கிறார்.  அது போலவே நடந்து வினீத் மேல் தாமரையாக வரும் நந்தினி ஓவராக பாசம் வைத்து இருவரும் உடலாலும் ஒன்றினைகின்றனர்.

 

இந்த சூழ்நிலையில் முரட்டு மனிதராக வரும் நாசர், தன் மகள் தாமரையை ஒரு குடிகாரனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே கதை.

 

13 வருடங்களுக்கு பின் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட படம் என்றாலும் அன்றைய சூழ்நிலையில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட படம்தான் இது. 

 

படத்தில் அழுத்தமான கதை இருந்தாலும், கவுண்டமணி, பயில்வான் காமெடி, பெண்களை வளைக்க துடிக்கும் சின்ன பையன் போல வரும் அனு ஆனந்த் ,கவுண்டமணி, வினீத் கூட்டணி காமெடிகள் ரசிக்கும்படி இருந்தன. குறிப்பாக பயில்வானின் எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் காமெடி மிகவும் பிரபலம்.

 

கங்கை அமரனும், புலமைப்பித்தனும் எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட். இந்த படத்தின் ஆல்பத்தின் எந்த பாடலும் சோடை போகாத அருமையான பாடல்கள். இசைஞானி இளையராஜா அருமையாக இசையமைத்திருந்தார்.

 

ஒரு உணர்வுப்பூர்வமான படமாக இது வந்தது. படம் வந்த சமயத்திலேயே இப்படம் விருது வாங்கிய படமாக இரவு 11 மணி அளவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. இப்படி விருது வாங்கிய படங்கள் எப்போதாவது இரவு தூர்தர்ஷனின் டெல்லி அஞ்சலில் ஒளிபரப்புவார்கள். ஸ்கூல் போய்விட்டு வந்து சீக்கிரமே சாப்பிட்டு தூங்கி கொண்டிருந்த நியாபகம், டேய் டேய் என்ன இந்த நேரத்துல டிவில படம் போடுறான் என இந்த படத்தை வைத்து வீட்டில் பார்த்து கொண்டிருந்தனர். திடீரென கண் விழித்து பார்த்த நான் ஆஹா படம் என இந்த படத்தை முதன் முதலில் பார்த்து ரசித்தேன். 

 

அப்போதெல்லாம் படங்களை பார்த்தாலே ஆ சினிமா என வாயை பிளந்து ஆச்சரியத்தில் பார்த்த காலம் அது.

.
மேலும்