‘’ தில்லானா மோகனாம்பாள்’ படம்.
ஒரு காட்சியில் பாலையாவிடம் கிண்டலாக ‘’ மெயினே சும்மா இருக்கு.. சைடு நீ என்னடா?’’ என்று நாகேஷ் ‘டைமிங்’ குடன் பேசி முடித்த காட்சி.
அது நாகேஷே சேர்த்த வசனம்.
படப்பிடிப்பு முடிந்தது தான் தாமதம்!
‘’ எப்படிடா அப்படிச் சொன்னே?’’ என்று நாகேஷை அழைத்து முத்தம் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார் பாலையா.
நாகேஷூடன் பல படங்களில் இணைந்து நடித்திருப்பவரான சோ நாகேஷைப் பற்றி நட்புடன் சொன்னார்.
‘’நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே நாகேஷூடன் எனக்குப் பழக்கம். அப்போதே சினிமாவில் நடிகராக வரப்போகிறோம் என்பதில் தீர்மானமாக இருந்தார். அவ்வளவு தன்னம்பிக்கை.
நாடகங்களில் சின்ன ரோல்களில் வந்தாலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். ரயில்வேயில் வேலையில் இருந்தாலும், சின்னச் சின்ன வேஷங்களில் நடித்துத் தனது திறமையினால் மட்டுமே முன்னுக்கு வந்த நாகேஷிடம் எனக்குப் பிடித்தது அவருடைய ‘டைமிங் சென்ஸ்’.
அதை அவ்வளவு கச்சிதமாகப் பண்ணுவார். அது அவருக்கு இயல்பாக அமைந்த விஷயம்.
அசாத்திய நடிப்புத் திறன் உள்ள அவருடன் நடிக்கும்போது அந்த ஸீனுக்குப் புதுப்புது ‘ இம்ப்ரூவ்மென்ட்’ கிடைச்சுக்கிடே இருக்கும்.
நாகேஷூக்குப் போட்டியாக இன்று வரைக்கும் யாரும் வரலைன்னு தான் சொல்லணும்."
-நாகேஷைப் பற்றி இப்படிச் சொன்னவர் "சோ.’’
- மணா'வின் ' நதிமூலம்’ நூலில் இருந்து ஒரு பகுதி.