தன் பூக்குரலை விட்டு சென்றார் பவதாரிணி நினைவுகள்

By News Room

’பாரதி’ படத்தில்  "மயில் போல பொண்ணு  ஒன்னு"  பாடல் வெளியானபோது அதைக் கேட்டதுமே யாரிந்த குரல் என்று உடனே தேடத் தொடங்கினால், இசைஞானி பொண்ணு பவதாரிணி என்றார்கள்.  அப்போதே அந்தக் குரலின் மீது அவ்வளவு அன்பு சொல்லாமல் ஒட்டிக்கொண்டது . அதற்கு முன்பே காதலுக்கு மரியாதை படத்தில் டைட்டில் சாங் "இது சங்கீதத் திருநாளாம்" பாடல் அவர் பாடியதுதான் என்றதும் அந்த ஒட்டுதல் இன்னும் நெருக்கமானது.

 என் மகள் பிறந்தபோது  பெரும் தனிமையை உணர்ந்த ஒரு நாளில்    இந்தப் பாடலை ஒரு மளிகைக் கடையில் கேட்டேன். அப்போது எனக்கு பத்தொன்பது வயது. ஒரு அம்மாவாக என்னை உணர முடியாம வெறுமையும் பயமும் சூழ்ந்த காலகட்டம் அது. "இது சங்கீத திருநாளாம்" பாடலை அந்தச் சூழலில் கேட்டபோது இடுப்பில் இருந்த  என் மகளை அப்படியே இறுக்கப் பிடித்துக் கொண்டேன்.

அந்தப் பாடலில் என் தனிமையும் வெறுமையும் கரைவதாக இருந்தது. பின் அந்தக் கேசட்டை வாங்கி திரும்பத் திரும்ப கேட்டும் பாடியும் என் மகளோடு கொஞ்சிக் கொண்டிருப்பேன்.  பாடியது யார் என்றெல்லாம் அப்போது யோசிக்கவில்லை. இளையராஜா பாட்டு அதுவே போதுமானதாக இருந்தது. அதனால்தான் பின் பவதாரிணி அந்தப் பாடலையும் பாடியிருக்கிறார் என்றதும் அந்த அன்பு ஒட்டிக் கொண்டது. சமீபத்தில் கூட என் மகள் பிறந்த நாள் வீடியோவை அந்தப் பாடலை வைத்து எடிட் செய்தேன்.

தொடர்ந்து ஒளியிலே தெரிவது, என்வீட்டு ஜன்னல் எட்டி , மஸ்தானா மஸ்தானா, தவிக்கிறேன் தவிக்கிறேன் பாடல்கள் என்று பவதாரிணி பாடினால் மூளை ஸ்பெஷலாக பிரதி எடுத்துக் கொண்டது. இருப்புக் குதிரை படத்தில் "பெண்ணே பெண்ணே" பாடலில் ஹம்மிங்கும்  ஒரு சின்ன சரணமும் பாடியிருப்பார்.

அப்படியே கரைஞ்சு போவது மாதிரியான பாவம். அதேபோல மயிலு படத்தில்" யாத்தே "  பாடல் ..அந்தப் பாடலை ராஜா பவதாரிணிக்கு சொல்லிக்கொடுக்கும்போது, அவர்கள் இருவரும் சிரிக்கும் அந்த வீடியோவை பார்த்தால், சிரிக்காமலும் அழாமலும் இருக்க முடியவில்லை.

கட்டப்பஞ்சாயத்து படத்தில்  "ஒரு சின்ன மணிக்குயிலே"  பாடலில் சரணம் மட்டும் கேட்டுப் பாருங்க. அது கொடுக்கும் பரவசம் அனுபவமே தனி. அதியற்புதமான குரலுடைய அந்தப் பெண் இன்று இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இவ்வுலகில் தன் பூக்குரலை விட்டு சென்றிருக்கிறார் பவதாரிணி.
போய் வா பெண்ணே!

நாங்கள் உன் குரலை எப்போதும் கேட்டுக் கொண்டிருப்போம்.

.
மேலும்