கமலும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த திரைப்படம்!

By Mini Cini

ஐந்து வயதிலிருந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர் கமல்ஹாசன். ஏவிஎம் தயாரிப்பில் உருவான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது துவங்கிய பயணம் 60 வருடங்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் உலக நாயகன் என்கிற பட்டத்தை அவர் சும்மா வாங்கிவிடவில்லை.

அதற்கு பின் 30 வருடங்களுக்கும் மேலான உழைப்பு இருக்கிறது. சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர் கமல். இப்போது வரும் பல இயக்குனர்களுக்கும் முன்னோடியாக இருப்பவர். அதனால்தான், இயக்குனர்களுக்கும் பிடித்த நடிகராக, இயக்குனராக கமல்ஹாசன் இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார் கமல். ஜெமினி கணேசன், சிவாஜி, எம்.ஜி.ஆர் என ஜாம்பவான்களுடன் நடித்தார். அதன்பின் 10 வருடங்கள் சினிமாவில் கமல் இல்லை. 17 வயது இருக்கும் போது கமலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சினிமாவா இல்லை வேறு எதாவது வேலைக்கு போகலமா என குழம்பிய தருணம் அது.

இறுதியில் நடன இயக்குனராகலாம் என முடிவெடுத்து அப்போது பல படங்களுக்கும் நடனம் அமைத்துக்கொண்டிருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்தார். எம்.ஜி.ஆர், ஜெமினி போன்றவர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்தார் கமல். ஆனால் ‘இது உனக்கு வேண்டாம்’ என சொல்லி அவரை பாலச்சந்தரிடம் அழைத்து சென்று ‘இவனை நடிகனாக உருவாக்குங்கள்’ என சொன்னவர் ஜெமினி கணேசன்தான்.

அதன்பின் பாலச்சந்தர் இயக்கிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் கமல். ஒருகட்டத்தில் அவரின் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். கமல் ஹீரோவாக வளர்ந்த சமயம் ஜெயலலிதா சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். எனவே, இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை.

ஆனால், தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக கமல் இருந்தபோது ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த அன்பு தங்கை என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் கமல் வருவார். கமல் புத்தர் வேடத்தில் அமர்ந்திருக்க அவரின் முன் நாட்டிய நங்கையாக ஜெயலலிதா நடனம் ஆடுவார். இந்த படம்1974ம் வருடம் வெளியானது. அதோடு சரி. அதன்பின் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை என்பதுதான் சினிமா வரலாறு.

.
மேலும்