'கோதையின் குரல்' குறும்படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு

By News Room

தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி  மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளான மே 16 (வியாழக்கிழமை) அன்று  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் பலகையை கோபிநாத் நாராயண மூர்த்தி மற்றும் இணை இயக்குநர் கரிகாலன் பிரபலங்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். 

 

இந்நிகழ்வில் மை கைண்டா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பான 'கோதையின் குரல்' குறும்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் அதை மிகவும் பாராட்டினர். தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் மோகன் ஜி, இயக்குநர் எஸ் ஆர் பிரபாகர், தயாரிப்பாளர் இளஞ்செழியன் கே எம், தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் ('தங்க முட்டை' மற்றும் 'பங்காரு குட்டு') உள்ளிட்டோர் படத்தை பெரிதும் பாராட்டினர். இதைத் தொடர்ந்து, 12 வயதே ஆன ஒரு பெண் குழந்தை சமுதாயத்தின் முக்கிய பிரச்சினை ஒன்று குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது தொடர்பான 'கோதையின் குரல்' குறும்படம் விரைவில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவதோடு முன்னணி ஓடிடி தளம் ஒன்றிலும் ஒளிபரப்பாக உள்ளது. அரசியலமைப்பின் முக்கியமான‌ தூண்களில் ஒன்றில் மாற்றத்தை இப்படம் பரிந்துரைக்கிறது. இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மிக முக்கியமான கருத்து ஒன்றை இப்படம் வலியுறுத்துகிறது. 

 

‘தங்க முட்டை’ படத்தில் நாயகனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு தமிழில் டப்பிங் பேசும் பிரபல நடிகர் சஞ்சீவ் அரசு அதிகாரியாக இந்த குறும்படத்தில் நடித்துள்ளார். நடிகை நளினி, பாப்பி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாகியுள்ள இந்த குறும்படத்திற்காக 'தங்க முட்டை' படக்குழுவினருடன் மீண்டும் இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பையும், பிவி பாலாஜி கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர்.

 

ஒரு பெண் குழந்தையின் வழியாக சொல்லப்பட்டுள்ள இந்த கதை, இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கூறிய‌ முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஏபிஜே அப்துல் கலாமின் லட்சியத்தையும் நினைவூட்டுகிறது.

 

பன்னாட்டு நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தகவல் தொழில்நுட்ப நிபுணரான கோபிநாத் நாராயணமூர்த்தி சினிமா மீதான பற்றால் இயக்குநர் ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் திரைக்கதை மற்றும் திரைப்பட இயக்க பயிற்சி மையத்தில் பயின்றவர் ஆவார். இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன் மற்றும் பிஜோய் நம்பியார் ஆகியோரிடமும் இவர் பணியாற்றியுள்ளார். பின்னர் இவர் ஒரு திரை எழுத்து நிறுவனத்தை தொடங்கியபோது, இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

.
மேலும்