ஒதுக்கப்பட்ட வாலியின் பாடல்...

By Mini Cini

"தாமரை கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள்"

 

பாடல் எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற கதை

 

ஒதுக்கப்பட்ட வாலியின் பாடல்... கெட்டியாக பிடித்த கே.பாலச்சந்தர் : நாகேஷ் தன்னை நிரூபித்த கதை

 

எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினி கமல் காலம் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை சுமார் 5 தலைமுறைகளுக்கு மேலாக பாடல்கள் எழுதியுள்ள வாலி, வாலிப கவிஞர் என்று போற்றப்படுகிறார்

 

தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்ட வாலி முன்னணி நடிகர் ஒருவருக்காக எழுதிய பாடல் ஒதுக்கப்பட்ட நிலையில் பின்னாளில் அந்த பாடல் நாகேஷ் நடித்த படத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டு ஹிட் அடித்துள்ளது.

 

தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று போற்றப்படுபவர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விக்ரம் சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இன்றைய நடிகர்களுக்கும் தனது எழுத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்தபோது எம்.ஜி.ஆரின் அஸ்தான பாடல் ஆசிரியராக மாறியவர்.

 

அதே போல் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினி கமல் காலம் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை சுமார் 5 தலைமுறைகளுக்கு மேலாக பாடல்கள் எழுதியுள்ள வாலி, தன் வாழ்நாளில் இறுதிவரை திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார். அதேபோல் தனது முதுமை வயதிலும் இளம் நடிகர்களுக்கான காதல் பாடல்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்த வாலி எழுதிய ஒரு சூப்பரான காதல் பாடல் முதலில் நிராகரிப்பட்டுள்ளது.

 

தமிழ் சினிமாவில் வாலி வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த எம்.எஸ்.விக்கு இணையாக மெலடி பாடல்களை கொடுத்து மெலடி கிங் என்று அழைக்கப்பட்டவர் இசையமைப்பாளர் வி.குமார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான முதல் படமான நீர்குமிழி என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து கே.பாலச்சந்தர் முக்தா சீனிவாசன் மற்றும் எம்.ஏ.திருமுருகன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்

 

இதில் வி.குமார் இசையில் ஒரு முன்னணி இயக்குனரின் படத்திற்கு வாலி ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்த பாடல் இருவருக்குமே மிகவும் பிடித்துள்ளர். ஆனால் இந்த பாடலை கேட்ட தயாரிப்பாளர் இந்த பாடல் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தயாரிப்பாளரின் விருப்பம் என்று கூறி வேறு பாடலை எழுதி கொடுத்து ரெக்கார்டிங் எல்லாம் முடிந்துள்ளது. ஆனாலும் குமார் – வாலி இருவரும் இந்த பாடலை விடவில்லை.

 

ஒரு சில வருடங்கள் கழித்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வி.குமார் இசையமைக்க, வாலி பாடல்கள் எழுதுகிறார். அப்போது பாலச்சந்தர் மெலடி பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்க, உடனடியாக வாலியும் குமாரும் அந்த பாடலை எடுத்து கொடுக்கின்றனர். எதையும் அவ்வளவு எளிதில் தேர்வு செய்யாத குணம் கொண்ட கே.பாலச்சந்தர் இந்த பாடலை கேட்டவுடன் உடனடியாக பிடித்திருக்கிறது இதையே வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

 

அப்படி உருவான பாடல் தான் ‘’தாமரை கன்னங்கள் தேன்மலர் கின்னங்கள்’’ என்ற அந்த பாடல். அதுவரை நாகேஷ்-க்கு காமெடி மட்டும் தான் வரும் என்று கூறி வந்த திரையுலகிற்கு தான் எந்த கேரக்டரில் நடிப்பேன் என்று நாகேஷ் நிரூபித்த படமான எதிர்நீச்சல் படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. 1968-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசிலா ஆகியோர் பாடியிருந்தனர்.

 

(இணையத்திலிருந்து)

.
மேலும்