இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதிலும் நடிப்புத்துறையில் நுழைவது பகீரதப் பிரயத்தனம். எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக அவதாரம் எடுத்துவிட முடியாது. பல படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்தபின்பு, சில ஆண்டுகள் கழித்தே ஆக முடியும். சிலருக்கு பல கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த பின்பே கலர்ப்பட வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு முத்லில் சில படங்கள் தோல்விகளைக்கண்ட பின்புதான் வெற்றிப்படங்கள் அமையும். சிலருக்கு முதலில் சிறிய இயக்குனர்களிடம் நடித்த பின்பே பெரிய இயக்குனர்கள் அறிமுகம் கிடைக்கும். முதல் படத்திலேயே கதாநாயகன் முதல் படத்திலேயே பெரிய டைரக்டரின் இயக்கம் முதல் படமே கண்ணைக்கவரும் வண்ணப்படம் முதல் படமே 200 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்
1964-ல் இவை யாவும் ஒருவருக்கு சாத்தியமானது. அவர்தான் 'கலை நிலவு' கலைமாமணி ரவிச்சந்திரன்.
காதலிக்க நேரமில்லையில் நடிக்க நேர்ந்த சம்பவம் குறித்து ரவியே சமீபத்தில் தொலைக்காட்சியில் சொல்லியிருந்தார். "மலேசியாவிலிருந்து (அப்போது மலேயா) கப்பலில் சென்னை வந்து, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்த நான், திருச்சிக்குச்செல்ல வேண்டிய ரயிலைத்தவற விட்டதால், வீடு திரும்ப நேர, மறுநாள் காலை என்னைச்சந்தித்த ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், ஸ்ரீதர் எடுக்கும் புதுப்படத்துக்கு புதுமுகம் தேடுவதாகசொல்லி என்னை அழைத்துப்போனார். மிகவும் ஒல்லியாக இருந்த நான், 'நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது' என்ற எண்ணத்தில் டைரக்டர் ஸ்ரீதர் முன்பாகவே சிகரெட்டும் கையுமாக அசால்ட்டாக இருக்க, என்னுடைய அந்த அலட்சிய போக்கே ஸ்ரீதருக்குப் பிடித்துப்போக என்னை தேர்ந்தெடுத்துவிட்டார்" என்று தான் திரைக்கு வர நேரந்த அனுபவத்தைச் சொல்லியிருந்தார்.
காதலிக்க நேரமில்லை"
முதல் குட்டு மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்ற இலக்கணத்திற்கேற்ப, முதல் படத்தில் புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் அறிமுகமானார் ரவி. அப்படத்தில் மூன்று ஜோடிக்காதலர்கள். அதில் ஒரு நாயகனையும் நாயகியையும் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். வழக்கமாக இவ்வாறு அறிமுகம் செய்யும்போது புதிய நாயகனையும், புதிய நாயகியையும்தான் ஒருஜோடியாக எல்லோரும் போடுவார்கள். ஆனால் ஸ்ரீதர் இதிலும் புதுமை செய்ய எண்ணி, பழைய நடிகர் முத்துராமனுக்கு புது நடிகை காஞ்சனாவை ஜோடியாகவும், புது நடிகர் ரவிச்சந்திரனுக்கு பழைய நடிகை ராஜஸ்ரீயை ஜோடியாகவும் போட்டார். அதாவது ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு அனுபவம், ஒரு அறிமுகம்.
'காதலிக்க நேரமில்லை' கதையை இங்கே சொல்வது, கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல. அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான படம் அது. அதில் ஸ்ரீதர், கோபு, கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வின்சென்ட், பி.என் சுந்தரம், எடிட்டர் என்.எம்.சங்கர் ஆகியோர் பெரிய ராஜாங்கமே நடத்தியிருந்தனர்.
முதல் படத்திலேயே ரவிச்சந்திரனுக்கு பி.பி.எஸ் குரலில் நான்கு அருமையான பாடல்கள். (முத்துராமனுக்கு ஜேசுதாஸ் குரலில் இரண்டு பாடல்களும் சீர்காழியின் குரலில் ஒரு பாடலும் தான். அதுபோக நாகேஷ் சச்சு ஜோடிக்கு ஒரு பாடல்). விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் தேன் சொட்டின. இன்றுவரை அவையனைத்தும் மக்களால் பெரிதும் விரும்பிக்கேட்கப்படுகின்றன. பாடலின் தரத்துக்கேற்றாற்போல வின்சென்ட் - சுந்தரம் கூட்டணியின் அற்புதமான ஒளிப்பதிவு. காஞ்சனாவையும், ராஜஷ்ரீயையும் ரவிச்சந்திரன் டீஸ் செய்து பாடும் 'உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா?' என்ற சாதாரண பாடலில்தான் கேமரா என்ன விளையாட்டு விளையாடியிருக்கும்?. ஆளியாறு அணைப்பகுதியில் படமாக்கப்பட்ட வெளிப்புறக்காட்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன. 'அனுபவம் புதுமை' மற்றும், 'நாளாம் நாளாம் திருநாளாம்' பாடலின் மெலோடியைப்பற்றியெல்லாம் பேச நிச்சயம் எனக்கு தகுதியில்லை. ஆனால் 'நாளாம் நாளாம்' பாடலை செட்போட்டுப் படமாக்கியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. அதைவிட சென்னை மெரீனாவில் படமாக்கியிருந்த 'என்ன பார்வை உந்தன் பார்வை' காட்சியமைப்பிலும், படமாக்கிய விதத்திலும் சூப்பர்.
படம் துவக்கத்திலிருந்து 'வணக்கம்' வரை நகைச்சுவை கொடிகட்டிப்பறந்தது. காதல் ஜோடிகளோடு சேர்ந்துகொண்டு, பாலையா, நாகேஷ், சச்சு, பிரபாகர் (சச்சுவின் அப்பா) ஆகியோரும் நகைச்சுவையில் கலக்கினர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சித்ராலயா கோபுவின் வசனங்கள். போதாக்குறைக்கு படத்தில் ரவிச்சந்திரன் வைத்திருக்கும் அந்த டப்பா காரும் நமக்கு சிரிப்பை மூட்டியது. அதுவரை சோகம், செண்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த முத்துராமனுக்கு, காதலிக்க நேரமில்லையில் அவர் ஏற்றிருந்த 'டூப்ளிகேட்' பணக்கார கிழவன் வேடமும், அதில் அவர் கொடுத்த நகைச்சுவை சரவெடிகளும் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதன்முதலாக ஜெமினி கலர் லேபரட்டரியில் வண்ணப்பிரதிகள் தயாரானதும் இப்படத்துக்குத்தான். (அதற்குமுன் வந்த கர்ணன், படகோட்டி ஆகிய ஈஸ்ட்மன் கலர்ப்படங்கள் மும்பை ஃபிலிம் செண்ட்டரில் ப்ராஸஸிங் செய்யப்பட்டன).
முதல் படமே 200 நாள் படமாக அமைய, 'வெள்ளிவிழா நாயகன்' என்ற சிறப்புப்பட்டத்துடன் திரையுலகில் வலம் வரத்துவங்கினார் ரவிச்சந்திரன்.
ராமண்ணா - ரவி கூட்டணிக்கு அச்சாரமிட்ட "குமரிப்பெண்"
1960 களின் துவக்கத்தில் எம்.ஜி.ஆரை நடிக்கவைத்து வரிசையாக ‘ப’ வரிசைப்படங்களை (பாசம், பெரிய இடத்துப்பெண், பணக்கார குடும்பம்) எடுத்துக்கொண்டிருந்த ராமண்ணா 1965-ல் எம்.ஜிஆரை வைத்து ‘பணம் படைத்தவன்’ படத்தை வெளியிட்ட கையோடு, (இதனிடையே 1965-ல் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை நடிக்கவைத்து "நீ" படத்தையும் இயக்கியிருந்தார்) .மீண்டும் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து ‘பறக்கும் பாவை’யை வண்ணத்தில் எடுத்துவரும் அதே சமயத்தில், இன்னொரு பக்கம் ரவிச்சந்திரனை கதாநாயகனாக நடிக்க வைத்து கருப்புவெள்ளையில் உருவாக்கிய படம்தான் 'குமரிப்பெண்'. ஒருபக்கம் செண்டிமென்ட் படங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தபோதிலும், அதே சமயம் ஜனரஞ்சகமான படங்களும் வெற்றியடைந்துகொண்டிருந்த வேளையில் இப்படம் வெளியானது.
ரவிச்சந்திரனின் ஜோடியாக கலைச்செல்வி ஜெயலலிதா நடித்திருந்தார். குமரிப்பெண் படத்தின் பெயரைச்சொன்னதும் நமக்கு நினைவுக்கு வரும் முதல் காட்சி, கட்டுக்குடுமியுடன் கிராமத்திலிருந்து ரயிலில் வந்துகொண்டிருக்கும் ரவியை, நவநாகரீக உடையணிந்த ஜெயலலிதாவும், அவரது தோழிகளும் கிண்டலடித்துப்பாடும் "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" என்ற பாடல்தான். எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடியது. இதே "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" பாடலை பின்னர் ரவிச்சந்திரன், ஜெயலலிதாவைக் கிண்டலடித்துப் பாடுவதாகவும் வரும். அதை ரவிக்காக டி.எம்.எஸ். பாடியிருந்தார். (என்ன சொல்றீங்க?. இதைப்பார்க்கும்போது உங்களுக்கு 'கட்டவண்டி... கட்டவண்டி...' பாடல் நினைவுக்கு வருதா?). அப்போதெல்லாம் ரவிச்சந்திரனின் படங்களில், கதாநாயகியை டீஸ் செய்து பாடுவதுபோல ஒரு பாட்டு வந்துவிடும். அதில் இதுவும் ஒன்று. (Music by Mellisai Mannar MSV)
P.B.S.பாடிய "ஜாவ்ரே ஜாவ்.. இந்த கேட்டுக்கு நீ ராஜா" பாடல், கடமையைச்செய்யாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கூர்க்காவை கிண்டலடித்து ரவி பாடுவதாக வரும். இந்தப்பாடலை T.M.S. பாடியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். சில பாடல்களுக்கென்று சில குரல்கள் பொருந்துமல்லவா?.
ரவிச்சந்திரன் ஜெயலலிதா டூயட் பாடல், "நீயே சொல்லு... நீயே சொல்லு... நடந்தது என்னவென்று நீயே சொல்லு. ரகசியம் பேசுகின்ற கண்ணால் சொல்லு" பாடலை P.B.S., L.R.ஈஸ்வரி பாடியிருந்தனர்.
ரவிச்சந்திரனின் சினிமா வாழ்க்கையில் அதுவரை கலர்ப்படங்களே வெற்றியடைந்து வந்த நிலையில், மாபெரும் வெற்றியைத்தந்த முதல் கருப்புவெள்ளைப்படம் குமரிப்பெண். 1966-ல் வெளியான மொத்தம் 42 தமிழ்ப்படங்களில் 10 படங்கள் மட்டுமே 100 நாட்களைக்கடந்து ஓடின. அவற்றில் 'குமரிப்பெண்'ணும் ஒன்று. (எந்தப்படமும் வெள்ளிவிழாவைத் தொடவில்லை). நான் முன்பே சொன்னதுபோல, சென்னை மவுண்ட்ரோடு ஏரியாவில் தியேட்டர் கிடைக்காமல், மயிலை காமதேனு அரங்கில் திரையிடப்பட்டு, அங்கு 100 நாட்களை வெற்றிகரமாகக் கடந்தபின், மவுண்ட் ரோடு காஸினோ அரங்குக்கு மாற்றப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.
இன்றைக்கும் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்களும் அருமையான பாடல்களும் கொண்ட படம் குமரிப்பெண்.
இதயத்தை வருடிய "இதயக் கமலம்"
ரவிச்சந்திரன் நடித்த இரண்டாவது வண்ணப்படம். பழம்பெரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத்தின் 'பிரசாத் புரொடக்ஷன்ஸ்' தயாரித்த இப்படத்தை எஸ்.ஸ்ரீகாந்த் இயக்கியிருந்தார். 'புன்னகையரசி' கே.ஆர்.விஜயாதான் ரவிச்சந்திரனின் ஜோடியாக நடித்திருந்தார். ஜோடி என்பதைவிட அவர்தான் முழுப்படத்தையும் வியாபித்திருந்தார். இறந்துபோன மனைவியை எண்னி எண்னி இவர் வருந்த, கொஞ்சம் கொஞ்சமாக ஃப்ளாஷ்பேக்கிலேயே படம் நகரும். 'மேளத்த மெல்லத்தட்டு மாமா' என்று பாடியபடி தெருக்கூத்தாடியாக அறிமுகமாகும்போதும் சரி, பைத்தியக்கார விடுதியில் பைத்தியங்களோடு அடைக்கப்பட்டு அவதிப்படும்போதும் சரி, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திருப்பார் K.R.விஜயா. முதன்முதலாக ரவிச்சந்திரன் சோக நடிப்பை வழங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். நன்றாகச்செய்திருப்பார்.
திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில்... "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்ற பாடலும் "என்னதான் ரகசியமோ இதயத்திலே" என்ற பாடலும் சுசீலாவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தன. ரவிச்சந்திரனுக்காக, பி.பி.எஸ் பாடிய... "தோள் கண்டேன் தோளே கண்டேன்" பாடலும் "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடலும் பாப்புலராயின. இதில் ஒரு பாடல் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது.
தாய்க்குலத்தின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற 'இதயக்கமலம்' ஒரு பெரிய வெற்றிப்படம்.
பி.ஆர். பந்துலுவின் 'எங்க பாப்பா'
தமிழ்த்திரையுலகுக்கு பல பிரமாண்டமான சரித்திரப் படங்களை உருவாக்கித் தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு, தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, 1966-ல் வெளியான குடும்பச்சித்திரம் 'எங்க பாப்பா'
ரவிச்சந்திரன் பாரதி ஜோடியுடன், அப்போதைய பிரபலமான குழந்தை நட்சத்திரம் 'பேபி ஷகீலா' (நினைவிருக்கிறதா? கற்பகம், முரடன் முத்து, எங்கவீட்டுப்பிள்ளை..?) முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த படம். படத்தில் இரண்டுமுறை பாடப்படும் 'ஒருமரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு ஒரு அன்னை தந்தது, ஒன்று காவல் கொண்டது ஒன்று கண் மலர்ந்தது... கண்மலர்ந்தது' பாடல் படத்துக்கே ஜீவநாடி. அதிலும் அந்தக்குழந்தை அண்ணன் ரவிச்சந்திரனை விசிறியால் விசிறிக்கொண்டே பாடித்தூங்க வைக்கும்போது, நம் கண்களில் நிச்சயம் நீர்கட்டும். 'இரண்டு கண்கள் சேர்ந்து காணும் காட்சியும் ஒன்று இரண்டு நெஞ்சும் சேர்ந்து சொல்லும் சாட்சியும் ஒன்று அருகில் வைத்து தூங்கச்செய்யும் தாயில்லாதது ஆசை வெட்கம் வெளியில் சொல்ல வாயில்லாதது... வாயில்லாதது
நாதியில்லை என்று உன்னை ஊர் சொல்லலாமா - இங்கு நானிருந்தும் உனக்கு அந்தப்பேர் வரலாமா ஜாதிப்பூவில் பாதிப்பூவை பிரிக்கக்கூடுமா அண்ணன் தங்கை உறவைக்காக்கும் பெருமையாகுமா... பெருமையாகுமா'
சமீபத்தில் கவிஞர் பிறைசூடன் சொன்னதுபோல, 'இத்தனை ஆண்டுகளிலும் வாலி என்ற கவிக்கிழவன் யாராலும் பிடிக்க முடியாதபடி ஓடிக்கொண்டிருக்கிறார்' என்பது எத்தனை உண்மை. எங்கபாப்பாவுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1966-ல் வெளியான இப்படத்துக்கு 65-லேயே பாடல்கள் பதிவாகி படப்பிடிப்பு நடந்து வந்தது. தன் இணையான ராமமூர்த்தியை விட்டுத்தனியே பிரிந்து தனது முத்திரையைப் பதித்துக்கொள்ள மெல்லிசை மன்னர் அசகாய சூரத்தனங்கள் செய்துகொண்டிருந்த நேரம். அதன் விளைவாக ரசிகர்களுக்கு அற்புதமான பாடல்கள் கிடைத்துக்கொண்டிருந்தன.
இன்னொரு பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் கொஞ்சும் குரலில் (கூடவே டி.எம்.எஸ்) 'சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால் இந்த மாதிரித்தான் இருப்பாள்' பாடல் பார்க்கவும் கேட்கவும் தேனமுதம்.
ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த 'நான் போட்டால் தெரியும் போடு தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு' என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.
தாய்க்குலத்தின் ஆதரவைப்பெற்ற 'எங்க பாப்பா' பெரிய வெற்றியைப்பெறாவிடினும் தமிழகம் முழுவதும் பரவலாக ஒடியது
ராமண்ணா - ரவிச்சந்திரன் இணையில்
மாபெரும் வெற்றிப்படம் "நான்"
வெள்ளிவிழா நாயகன் என்ற முத்திரையுடன் திரையுலகில் நுழைந்த ரவிச்சந்திரனின் இரண்டாவது வெள்ளிவிழாப் படம் நான். ஏற்கெனவே குமரிப்பெண் தந்த மாபெரும் வெற்றியில் உற்சாகமடைந்த இயக்குனர் ராமண்ணா, மீண்டும் ரவிச்சந்திரன் - ஜெயலலிதா ஜோடியை வைத்து வண்ணத்தில் தயாரித்து இயக்கிய படம் இது.
ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடியுடன் முத்துராமன், அசோகன், மனோகர், நாகேஷ் (அம்மாவும் (?) மகனுமாக), மனோரமா, குட்டி பத்மினி, சுருளிராஜன், முத்துலட்சுமி, 'என்னத்தே' கன்னையா என ஏராளமான நட்சத்திரங்களை உள்ளடக்கிய படம். இறந்துபோன ஜமீன்தாரின், காணாமல் போன வாரிசைக் கண்டுபிடித்து அவரிடம் ஜமீனை ஒப்படைக்க, அதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் முன், மூன்று பேர் 'நான்'தான் வாரிசு, 'நான்'தான் வாரிசு என்று வந்து நிற்க, அவர்களில் உண்மையான வாரிசை அடையாளம் கண்டு அவரை ஜமீனாக்குவதுதான் கதை. கதை சிறியதாக இருந்தாலும், அது எடுக்கப்பட்ட விதத்தில் படு சூப்பராக அமைந்து போனது.
வழக்கமாக இம்மாதிரிக் கதைகளில் கதாநாயன்தான் வாரிசாக இருப்பார். ஆனால் இதில் அப்படியில்லை என்பது மட்டுமல்ல, அந்த மூவரில் யாருமே உண்மையான வாரிசில்லை. வில்லனால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் நான்காவது நபர்தான் அவர் என்று தெரிய வரும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. அப்படியானால் வந்த மூவர்?. ஒருவர் வில்லனால் வாரிசு என்று அனுப்பப்பட்டவர், இன்னொருவர் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட துப்பறியும் அதிகாரி.
அப்படீன்னா கதாநாயனாக வந்திருப்பவர் யார்?. அதுவும் ஒரு சஸ்பென்ஸ். உண்மையான வாரிசு, வில்லன் அசோகனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முத்துராமன் என்பதும், மனோகர், அசோகனால் ஜமீன் சொத்தை அபகரிக்க அனுப்பப்பட்ட போலி வாரிசு என்பதும், நாகேஷ், அர்சாங்கத்தால் அனுப்பப்பட்ட அதிகாரி என்பதும் கிளைமாக்ஸுக்கு சற்று முன்னரே தெரிய வருகிறது.
மொட்டைத்தலை வில்லனாக வரும் அசோகன் இப்படத்தில் ஒரு புதிய பரிமாணம் எடுத்திருந்தார். அது மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வசனத்தை இழுத்து இழுத்துப் பேசும் பாணியை இப்படம் முதற்கொண்டுதான் அவர் கையாளத்தொடங்கினார். ஆனால் அதுவே பிற்காலத்தில் ஓவர்டோஸாகிப்போனபோது திகட்டியது. இப்படத்தில் அவர் பேசும் "சிங்...கா...ர...ம், ஆறு மாசமா ஆளையும் காணோம், ஆறு லட்சத்துக்கு கணக்கையும் காணோம்" என்ற வசனம் அப்போ ரொம்ப ஃபேமஸ்.
அதுமட்டுமா?. அதுவரை யாருக்குமே தெரியாமல் இருந்த கன்னையா, இப்படத்தில் 'என்னத்தே பார்த்து, என்னத்தே தெரிஞ்சு' என்று பேசி ஓவர்நைட்டில் 'என்னத்தே' கன்னையாவாக ஆனார். (இப்போதும் கூட தன் பாணியில் "வரூ....ம், ஆனா வரா....து" என்று கலக்கிக்கொண்டுதான் இருக்கிறார்).
இவர்கள் இப்படியென்றால், இன்னொரு பக்கம் நாகேஷ் இரட்டை வேடத்தில் கலக்கினார். அதுவும் ஒன்று பெண்வேடம். ஒரு நாகேஷுக்கு அம்மாவாக இன்னொரு நாகேஷ். இவருக்கு சொல்லணுமா?. சும்மா ஊதித்தள்ளினார். இவரது அட்டகாசத்துக்கு முன் மனோரமா காணாமல் போனார் என்பதே உண்மை.
கதாநாயகன் ரவிச்சந்திரனைப் பொறுத்தவரை, ஒரு ஆக்ஷன் கதாநாயகனுக்கு திகட்ட திகட்ட தீனி போடுமளவுக்கு இவரது ரோல் அமைந்திருந்தது. இவரும் ஒரு சான்ஸைக்கூட தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டார். சண்டைக்காட்சிகள் இவரது திறமைக்கு கட்டியம் கூறின.
ஜெயலலிதாவுக்கு வேலையென்ன?. கதாநாயகனுக்கு சேர்ந்து டூயட் பாட ஒரு ஜோடி வேண்டும். மற்ற நேரங்களில் ஜமீனின் பெண்வாரிசான குட்டி பத்மினியைப் பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். 'அதே முகம் அதே குணம்' பாடலின்போது நீச்சல் உடையில் வருகிறார். ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து "அம்மனோ சாமியோ" பாடலில் அருமையாக நடித்துத்தள்ளிவிட்டார். அந்த ரோலில் நிச்சயமாக ஜெயலலிதாவைத்தவிர யார் நடித்திருந்தாலும் அவ்வளவாக எடுபட்டிருக்காது
என்பது உண்மை.
இப்படத்தின் மூலம் புத்துயிர் பெற்ற இன்னொருவர் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி. பாடல்கள் அத்தனையும் அந்த வருடத்தின் (1967) SUPER HIT SONGS.
நான் ‘குமரிப்பெண்’ பதிவில் குறிப்பிட்டதுபோல, ரவிக்கு ஜெயலலிதாவை டீஸ் செய்ய கிடைத்த பாடல் "ராஜா கண்ணு போகாதடி, நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி" பாடல், அந்தக்காலத்திய குத்துப்பாடல்.
சொத்துப்பத்திரங்கள் அடங்கிய பெட்டியை ரவிச்சந்திரன் எடுக்க வரும்போது, மாளிகையில் இருப்போரின் கவனத்தை திசை திருப்பவும், தனக்கும் மனோகருக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தவும், ஜெயலலிதா சாமி வந்து ஆடுவதுபோல நாடகமாடும் "அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ" பாடல் ஈஸ்வரியும் சீர்காழியாரும் பாடியிருக்க, ஜெயலலிதாவும் நாகேஷும் நடித்திருப்பார்கள். நாகேஷிடம் அசல் பூசாரி கெட்டார் போங்க.
ரவி - ஜெயா டூயட் பாடல். எங்கே?. சுவிட்சர்லாந்து?. நயாகரா?. சிங்கப்பூர்?. அட்லீஸ்ட் பிருந்தாவனம்?. ஊட்டி?. கொடைக்கானல்?. ஊகும்.... சின்னஞ்சிறிய ஃபியட் காருக்குள் "போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்" பாடலை என்ன அழகாகப் படமாக்கியிருப்பார் ராமண்ணா. வல்லவனுக்கு காரும் லொக்கேஷன்.
1967-ல் கல்லூரி மாணவர்களிடையே கலக்கியெடுத்துக் கொண்டிருந்தது ஒரு ஆங்கில இசை. பெயர் 'கம் செப்டம்பர்'. அப்போது டி.வி.சேனல்களோ, டேப் ரெக்கார்டர்களோ, செல்போன்களோ, வாக்மேன்களோ அறிமுகமில்லாத அந்த நாளில் இசைத்தட்டுக்கள் வாயிலாகவே அவை பாப்புலராகியிருந்தன. அந்த இசையில் கவரப்பட்ட ராமண்ணா, தன்னுடைய நான் படத்துக்கும் அந்த மெட்டில் ஒரு பாடல் வேண்டுமென்று கேட்க, டி.கே.ராமமூர்த்தியும் அசத்திவிட்டார். 'வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே' என்ற அந்தப்பாடல், ரெஹ்மானின் ஒளிப்பதிவுத்திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. என்ன ஒரு பளிச்சென்ற ஒளிப்பதிவு, என்ன அற்புதக்கோணங்கள். ஜெயலலிதாவின் படுவேகமான நடன அசைவுகள். ஈஸ்வரியின் கொஞ்சும் குரல். மொத்தத்தில் சூப்பர்.
'நான்' திரைப்படம் நகரம் முதற்கொண்டு பட்டி தொட்டியெங்கும் ஓட்டத்தில் சாதனை புரிந்ததோடு அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழாப்படமாக அமைந்தது.
அதுமட்டுமல்ல, ரவிச்சந்திரனின் படங்களில் மறு வெளியீடுகளில் அதிகம் சாதித்த படமும் 'நான்' திரைப்படம்தான்.
எழுத்து சாரதா