பிறப்பு : 25.4.1943 இறப்பு : 2.5.2002
தேவிகா யாரோ ஒரு ரொம்ப பழைய மெட்ராஸ் மேயர்- பாசுதேவ் நாயுடு வின் நெருங்கிய உறவுக்காரப்பெண் என்று புதுமுகமாக அறிமுகமான காலத்தில் அடையாளம். ஊமைப்படக் காலத்து சினிமாக்காரர் ரகுபதி வெங்கையா நாயுடுவின் பேத்தியாம். ரொம்பப்பாரம்பரியமான குடும்பம். இயற்பெயர் பிரமீளா! சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரின் பங்களிப்பு தமிழ்ப்பட கறுப்பு வெள்ளை காலத்துக்கு அதிகம். அழகு நளினம் என்று தேவிகாவை சொல்லவேண்டும்.
“நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத்தெரியாதா உயிரே விலகத்தெரியாதா” மாஸ்டர் பீஸ்!
“சொன்னது நீ தானா? சொல்,சொல் என்னுயிரே”
“பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது”
“உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதையிருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்.”
“ராமனுக்கே சீதை என்று வாழ்வது தான் பெண்மை, சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை”
“ஆயிரம் பெண்மை மலரட்டுமே, ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே”
சுசிலாவின் இந்தப்பாடல்களெல்லாம் தேவிகாவால் காட்சியாகின.
பின்னால் பிரபலமான கே.ஆர்.விஜயா நாடகத்தனமான நடிகை. “தூக்கணாங்குருவிக்கூடு, தூங்கக்கண்டா” என்ற தேவிகாவின் பாடலைப்பார்த்து விட்டு கே.ஆர்.விஜயாவின் “ தமிழுக்கும் அமுதென்று பேர்” பாட்டைப் பார்த்தால் தேவிகாவின் அருமை புரியும். கே.ஆர்.விஜயா பாரதி தாசனின் பாடலில் செய்யும் கொனஸ்டைகள் சகிக்காது.
தேவிகா சிவாஜியுடன் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 13 படங்களில் கமிட் ஆகியிருந்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வு.
ராணி பத்திரிக்கையில் அந்த 1960களின் பின்பகுதியில் ஒரு சுவாரசியமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு அழகி தனக்குப்பிடித்த மற்றொரு அழகி பற்றி சொல்லவேண்டும்! அந்த அழகி மறுவாரம் தனக்குப்பிடித்த மற்றொரு அழகியைக்குறிப்பிடவேண்டும். இதில் சுலபமாக தேவிகா இடம்பிடித்தபோது தனக்குப்பிடித்த அழகியாக திருவிளையாடலில் முருகனாக நடித்த சிறுமியைக்குறிப்பிட்டார். அந்த சிறுமி சினிமாவில் பிரபலமாகவேயில்லை.
சினிமா பார்க்க தேவிகா தியேட்டருக்குப் போனால் முந்திரிப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பார்.
சௌராஷ்ட்ராவான தேவதாஸ் அப்போது பீம்சிங்கிடம் உதவி இயக்குனர். அவரை தேவிகா திருமணம் செய்துகொண்டார்.
கண்ணதாசன் அவர்கள் மதித்த நடிகைகளில் தேவிகா முக்கியமானவர். வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுப்பதில் தேவிகா பெரிய தவறு செய்து விட்டதாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
*** நன்றி Rp.ராஜநாயஹம் ***