பாடகர் ஏ எல் ராகவன்

By nandha

1950 ஆம் ஆண்டு கே ஆர் ராமசாமி மற்றும் டி ஆர் ராஜகுமாரி நடித்து ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில் வெளிவந்த விஜயகுமாரி திரைப்படத்தின் மூலமாக பின்னணி பாடகராகவும் அறிமுகப் படுத்தப்பட்டார். இந்த படத்தில் நடிகை குமாரி கமலாவிற்காக பெண் குரலில் பாடியிருப்பார். இதன் பின் முழுநேரப் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் ஏ எல் ராகவன். ஜெமினி கணேசன் மற்றும் கல்யாண் குமார் ஆகியோரின் படங்களில் அவர்களுக்காக இவர் பல பாடல்கள் பாடியிருந்தார்

டிஎம்எஸ், சீர்காழி என்ற இரு ஜாம்பவான்கள் இருந்தாலும் இவர்களுக்கு நடுவில் சாப்ட் வாய்சுடன் நுழைந்தார் ராகவன். மிகவும் மென்மையான குரல் அது. வெஸ்டர்ன் பாட்டு என்றால் ராகவன்தான். கிளப் டான்ஸ், கலாட்டா பாடல்கள், ஈவ்-டீஸிங், கிக்-பாடல்கள் அனைத்துக்கும் ராகவன்தான் பொருத்தம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை! குறிப்பாக நாகேஷ்-க்கு இவரது குரல் பெர்பெக்ட்டாக பொருந்தும். அதனால்தான் அவருக்கு மட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

என்ன வேகம் நில்லு பாமா (குழந்தையும் தெய்வமும்;), உலகத்தில் சிறந்தது எது (பட்டணத்தில் பூதம்), வாடா மச்சான் வாடா (அன்று கண்ட முகம்) சீட்டுக் கட்டு ராஜா ராஜா (வேட்டைக்காரன்), வாழைத்தண்டு போலே உடம்பு அலேக் (பணமா பாசமா) என்று இவர் ஏராளமான வெற்றிப் பாடல்களை நடிகர் நாகேஷிற்காக பாடியிருக்கிறார்.

ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி என்ற புதையல் திரைப்பட பாடலை நடிகர் மற்றும் பின்னணி பாடகரான சந்திரபாபுவுடன் இணைந்து முதல் முறையாக இவர் பாடியது குறிப்பிடதக்கது. அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் கண்ணல்லோ என்ற பார்த்தால் பசி தீரும் படப்பாடல் இவரை என்றும் நினைவு கூற செய்யும் பாடலாக தமிழ் திரையிசை ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறது என்றால் அது மிகை அல்ல.

ஜி ராமநாதன், சி ஆர் சுப்பராமன், எஸ் எம் சுப்பையா நாயுடு, எஸ் வி வெங்கட்ராமன், சி என் பாண்டுரங்கன், ஆதி நாராயணராவ், டி ஆர் பாப்பா, கே வி மஹாதேவன், விஸ்வனாதன் ராமமூர்த்தி, வி குமார், சங்கர் கணேஷ் என்று அந்தக்கால அத்தனை இசை ஜாம்பவான்களுடனும் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

கல்லும் கனியாகும் என்ற திரைப்படத்தை பின்னணி பாடகர் டி எம் சௌந்தர்ராஜனுடன் இணைந்து தயாரித்ததோடு மட்டுமல்லாமல் அத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றும் நடித்திருப்பார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1980 ஆம் ஆண்டு தனது சொந்த தயாரிப்பில் நடிகர் சரத்பாபு மற்றும் வடிவுக்கரசி நடிப்பில் கண்ணில் தெரியும் கதைகள் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் ஜிகே வெங்கடேஷ், டி ஆர் பாப்பா கே வி மஹாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா என ஐந்து இசையமைப்பாளர்களை பயன்படுத்தி புதுமை செய்திருப்பார் என்றாலும் படம் இவருக்கு வெற்றியை ஈட்டித்தரவில்லை.

ராகவன் பாடிய பாடல்களில் குறிப்பிடும்படியான சில பாடல்கள்

1. ஹலோ மை டியர் ராமி - புதையல்

2. ஆவாரங் காட்டுக்குள்ளே - குடும்ப கௌரவம்

3. அடிச்சது பார் ஒன்னா நம்பர் - அபலை அஞ்சுகம்

4. ஆட்டத்திலே பலவகை உண்டு - பாகப்பிரிவினை

5. அழகு விளையாட அமைதி உறவாட - பாஞ்சாலி

6. இது நியாயமா - இருமனம் கலந்தால் திருமணம்

7. காதல் என்றால் ஆணும் பெண்ணும் - பாக்கியலஷ்மி

8. காயமே இது பொய்யடா - குமுதம்

9. அடிச்சிருக்கு நல்லதொரு சான்சு - நல்லவன் வாழ்வான்

10. ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி - பனித்திரை

11. கடவுளும் நானும் ஒரு ஜாதி - தாயில்லாப்பிள்ளை

12. அந்தி சாயும் நேரத்திலே - திருடாதே

13. இன்பமான இரவிதுவே - மனிதன் மாறவில்லை

14. காதல் யாத்திரைக்கு போவோமா - மனிதன் மாறவில்லை

15. எங்கிருந்தாலும் வாழ்க - நெஞ்சில் ஓர் ஆலயம்

16. அன்று ஊமைப் பெண்ணல்லோ - பார்த்தால் பசி தீரும்

17. காலம் செய்த கோமாளி தனத்தில் - படித்தால் மட்டும் போதுமா

18. என்ன இல்லை எனக்கு - அன்னை இல்லம்

19. புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இருவர் உள்ளம்

20. நீர்மேல் நடக்கலாம் - காஞ்சித் தலைவன்

21. பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று - கருப்பு பணம்

22. சீட்டுக்கட்டு ராஜா ராஜா - வேட்டைக்காரன்

23. அழகிய ரதியே அமராவதியே - காக்கும் கரங்கள்

24. அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க - பழனி

25. திங்களுக்கு என்ன இன்று திருமணமோ - பூஜைக்கு வந்த மலர்

26. கால்கள் நின்றது நின்றது தான் - பூஜைக்கு வந்த மலர்

27. ஒன்ஸ் எ பாப்பா மெட் எ மாமா - அன்பே வா

28. இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி - சித்தி

29. குபு குபு குபு குபு நான் என்ஜின் - மோட்டார் சுந்தரம் பிள்ளை

30. பொம்பள ஒருத்தி இருந்தாளாம் - அதே கண்கள்

31. உலகத்தில் சிறந்தது எது - பட்டணத்தில் பூதம்

32. வாழைத்தண்டு போலே உடம்பு அலேக் - பணமா பாசமா

33. போட சொன்னால் போட்டுக்கறேன் - பூவா தலையா

34. எல்லாமே வயித்துக்கு தாண்டா - நவக்கிரஹம்

35. நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் - சொர்க்கம்

36. மை லேடி கட் பாடி - வியட்நாம் வீடு

37. அங்கமுத்து தங்கமுத்து - தங்கைக்காக

38. ஆண்டவன் தொடங்கி - காசேதான் கடவுளடா

39. ஏ புள்ளே சச்சாயி - சுமதி என் சுந்தரி

இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.

இவர் கடைசியாக ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்கிற படத்தில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

எத்தனையோ பாடகரை இமிடேட் செய்து பாட முடியும். ஆனால் ராகவன் குரலை மட்டும் இமிடேட் செய்ததே இல்லை. அப்படி செய்யவும் முடியாத குரல் அது. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்திலேயே தன்னுடைய குரலிலேயே எஃக்கோ எபெக்ட்டை மிக துல்லியமாக தந்தவர்.

அதைவிட முக்கியம், மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகளை உருவாக்கியதன் முன்னோடியே ராகவன்தான்.. இந்த ஆர்க்கெஸ்ட்ராவை எல்ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து உருவாக்கினார். காரணம், இவர்கள் இணைந்து பாடிய பாடல்கள்தான் ஏராளம் என்பதுடன் இந்த ஜோடி குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்தது. “எங்கிருந்தாலும் வாழ்க” என்று எல்லாரையும் சொல்லிவிட்டு கடந்த வருடம் இதே நாளில் நம்மைவிட்டு போய்விட்டார் ஏ.எல்.ராகவன். எனினும் அவர் பாடல்கள் அத்தனையும் நம்முடன் சேர்ந்தே வாழும்!

.
மேலும்