ஏழிசையின் ரீங்காரக் குயில் ஸ்வர்ணலதா

By News Room

ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா.. வலிகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்!

 

பெயருக்கு ஏற்றாற் போலவே தன்னுடைய குரலால் இசையுலகையே ஆண்டு 37 வயதிலேயே இவ்வுலகை விட்டுச் சென்றவர் தான் ஸ்வர்ணலதா. இவர் பெயரிலேயே ஸ்வர்ணம் அமைந்ததால் என்னவோ பின்னாளில் பின்னணிப் பாடகியாக உச்சத்தில் இருந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டை சொந்த ஊராகக் கொண்ட ஸ்வர்ணலதா தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம், கன்னடம், ஒரியா, படுகா உள்ளிட்ட மொழிகளில் 7000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

 

ஏழிசையின் ரீங்காரக் குயில் என்று புகழ் பெற்ற ஸ்வர்ணலதா இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். அதில் குறிப்பிடத்தகுந்தவை ஆட்டமா தேரோட்டமா, ராக்கம்மா கையத் தட்டு, போவோமா ஊர்கோலம், மாலையில் யாரோ மனதோடு பேச போன்ற பாடல்கள் எந்தக் காலத்திலும் மறக்க முடியாதவை.

 

இப்பேற்பட்ட இசை ஞானமும், குரல் வளமும் கொண்ட ஸ்வர்ணலதா பாடல் ரெக்கார்டிங்-ன் போது தேம்பி தேம்பி அழுத சம்பவம் ஒரு நிகழ்ந்துள்ளது.

 

 பாரதிராஜா இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1994-ல் வெளிவந்த படம்தான் கருத்தம்மா. தென் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த பெண் சிசுக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் மிகப் பெரிய ஹிட் ஆகியது.

 

இப்படத்தில் இடம்பெற்ற போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலை ஸ்வர்ணலதா தான் பாடினார். இப்பாடல் ரெக்கார்டிங்-ன் போது பாடலைப் பாடி முடித்தபின் வெகு நேரமாகியும் ரெக்கார்டிங் அறையைவிட்டு ஸ்வர்ணலதா வரவில்லையாம். உள்ளே சென்று பார்த்த பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கண்ணீர் மல்க தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார் ஸ்வர்ணலதா.

 

ஏன் என்று கேட்க, பெண்களின் துயரங்களையும், அவர்களின் வலியையும் இந்த ஒரு பாடல் மொத்தமாகக் கொடுத்து விட்டது. மேலும் படத்தின் கதையும் பெண் சிசுக் கொலை பற்றியதாக இருப்பதால் இரண்டுமே என்னை மிகவும் பாதித்து விட்டது எனக் கண்ணீர் மல்கக் கூறினார் ஸ்வர்ணலதா. அவரைத் தேற்றிய பாரதிராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் இப்பாடல் உங்களுக்கு நிச்சயம் விருது வாங்கிக் கொடுக்கும் என்று கூற சொன்னது போலவே இப்பாடல் ஸ்வர்ணலதாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது.

 

இப்பாடலில் ஆரம்பத்தில் வரும் ஆழ்ந்த சோகத்தின் வலியை தன்னுடைய ஹம்மிங்-ல் வலு சேர்த்து பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் ஸ்வர்ணதா. இப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றினார். இவருக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

.
மேலும்