அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்

By Mini Cini

தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப்படங்களில் 25 ஆண்டுகள் (1950-களில்,1960-களில்,1970-களின்முன்பகுதியில் ) வயதான, முதிய கதாபாத்திரங்களை நிறைய செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி. ரங்காராவ் அறுபது வயதைத் தன் வாழ்நாளில் கண்டதில்லை.1974-ல் அவர் மறைந்தபோது அவர் வயது 56 தான்.

 

தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்தவர். தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விசுவநாத சக்ரவர்த்தி’ எனப் பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டத்தைத் தமிழ்ப் பட டைட்டில்களில் யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்திலேயே பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc. அது மட்டுமல்லாமல் நாடக மேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த ஷேக்ஸ்பீரியன் ஆக்டர்!

 

ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் தனது அபாரமான நடிப்பால் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். ‘தேவதாஸ்’, ‘மிஸ்ஸியம்மா’ ஆரம்பித்து.

 

‘நானும் ஒரு பெண்’ படத்தில் மாமனார் – மருமகள் பாசத்துக்கு எடுத்துக்காட்டுபோல விஜயகுமாரியின் மாமனாராக ரங்காராவ் நடிப்பில் யதார்த்தம் வெகுவாக வெளிப்பட்டு நிற்கும். ‘கற்பகம்’ படத்தில் ஜெமினி கணேஷின் மாமனாராக நடித்திருப்பார்.

பக்த பிரகலாதா’, ‘நம் நாடு’ போன்ற படங்களில் அவர் ஏற்ற வில்லன் வேடங்கள் பார்ப்பவர்கள் வயிற்றைக் கலக்கும். ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலில் ரங்காராவின் நடிப்பு தென்னிந்தியா முழுவதும் பிரபலம். ‘சபாஷ் மீனா’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘சர்வர் சுந்தரம்’ஆகிய படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை அற்புதமாகப் பிரகாசிக்கும்.

 

தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. ஆம்! ரங்காராவ் இயக்குநரும்கூட! இந்தோனேசியாவில் ஒரு திரைப்பட விழாவில் இவர் ‘நர்த்தன சாலா’ என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார். மற்றபடி இந்திய அரசின் கவுரவம் எதுவும் இவருக்குக் கிடைத்ததில்லை. உலகின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.

.
மேலும்