குரங்குக்குப் பன்றியின் சிறுநீரகம்... நம்பிக்கை தரும் முன்னேற்றம்!

By Mini Cini

குரங்கு ஒன்றுக்குப் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டு, அது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்திருப்பது ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இது உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் ஒன்றும் ஹார்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகமும் இணைந்து குரங்கு ஒன்றுக்குப் பன்றியின் சிறுநீரகத்தை அறுவைசிகிச்சை செய்து வைத்து ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு முடிவை நேட்சர் என்ற மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

அதில், சிறுநீரகம் பொருத்தப்பட்ட அந்த குரங்கு இரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளது. இது உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருக்கும் உடல் உறுப்பு பற்றாக்குறையால் அவதியுறும் லட்சக்கணக்கான மனித உயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிகிச்சையில் பன்றியிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தில் மரபியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்படி பன்றிகளிடமிருந்து 21 சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டு குரங்குகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அதில் சில ஆறு வாரங்களில் உயிரிழந்துள்ளன. 15 குரங்குகள் இரண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்துள்ளன. 

பன்றிகளின் உள் உறுப்புகள் மனித உறுப்புகளுடன் ஓரளவுக்கு ஒத்துப்போகின்றன. அதில் மரபியல் மாற்றங்கள் செய்வதன் மூலம் அதை மனிதர்களுக்குப் பயன்படுத்தலாம். பன்றிகள் அதிக அளவில் உணவுக்காக வெட்டப்படுகின்றன. பன்றிகளின் உள் உறுப்புகள் மனிதர்களுக்குப் பொருந்தும் வகையில் மாற்றியமைத்துவிட்டால் அவற்றின் உள் உறுப்புக்களைப் பெறுவது கடினமான விஷயமாக இருக்காது.

ஏற்கனவே பன்றியின் இதயத்தைக் கடந்த 2022ம் ஆண்டு மனிதருக்குப் பொருத்தப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் அவர் உயிர் வாழ்ந்தார். இதே போன்று சிறுநீரகங்களையும் மனிதர்களுக்குப் பொருத்தும் சூழல் விரைவில் வரும். அப்படி ஒரு நிலை வந்தால் சிறுநீரக அறுவைசிகிச்சைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

.
மேலும்