துரியன்பழம்... பார்க்க பலாப்பழம் போன்று இருக்கும். பலாப்பழத்தைவிட அளவில் சிறியது. அதற்காக முழு துரியன் பழத்தையும் ஒருவரால் சாப்பிட்டு விட முடியாது. அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் சூட்டை அதிகரித்து அதிக வியர்வையை ஏற்படுத்திவிடும். ஒருவேளை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், நிறைய தண்ணீர் குடித்து பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
துரியன்பழம் சாப்பிட்டுவிட்டு மதுபானம் அருந்தக்கூடாது. இல்லையென்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துரியன் பழத்தைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குறைந்த அளவே துரியன் பழம் சாப்பிடுவது நல்லது. இதன் சதைப்பகுதி மஞ்சள்காமாலை நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வைத் தரும். துரியன் பழத்தின் வேர்கள் நகம் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகத் திகழ்கிறது. இதில் உள்ள மாங்கனீசு சத்து நிலையான ரத்த அளவைப் பராமரிக்க உதவும்.
துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் ரத்தசோகையைப் போக்கும். கர்ப்பப்பை பலவீனமாக உள்ளவர்கள் துரியன் பழம் சாப்பிடுவதால் சிறந்த பலன் கிடைக்கும். விந்தணுக் குறைபாடு உள்ள ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களது பிரச்னைகள் நீங்கும். தொடர்ந்து துரியன் பழம் சாப்பிடுவதால், தாது பலம் பெற்று விந்தணுக்கள் பலம் பெறும். துரியன் பழம் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று சொல்லமுடியாது. அதன் இலைகளுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு. துரியன் மரத்தின் வேர், இலை போன்றவற்றைத் தண்ணீருடன் சேர்த்துக் குடித்தால் காய்ச்சலில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
மேலும் இதிலுள்ள பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி சத்துகள் மூட்டு மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதன் இலை மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு தரும். துரியன் பழத் தோல் படை, சொறி, சிரங்கு போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
இப்போது துரியன் பழம் சீசன். மலைப்பகுதியில் கிடைக்கும். சென்னை மாதிரி நகரங்களில் பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட பெரிய பழக்கடைகளில் கிடைக்கும்.