சுவையான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?

By Senthil

இன்று தை அமாவாசை வீடுகளில் சமைக்கும் உணவை படையல் வைத்து நம் முன்னோர்களுக்கு கொடுப்பதாக நினைத்து காக்கைக்கு வைத்து வருகின்றோம். எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று உணவுப் பொருட்களுமே சமைக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய்தான். ஏன் என்றால் முன்னோர்களின் அருளால் நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள். அந்த வாழைக்காய் வறுவலை சுவையாக எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்

வாழைக்காய் 4, உப்பு, மஞ்சள் பொடி, கருவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன், மல்லி விதை 3 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 5, கடலை பருப்பு 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் 3 டீஸ்பூன், பெருங்காய கட்டி சிறு துண்டு, எண்ணெய் 2 டீஸ்பூன்

செய்முறை

வாணலி ஒன்றில்  2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பெருங்காயம், மல்லி விதை, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் சிவக்க வறுத்து , கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும். இந்த கலவை ஆறியவுடன் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை தோல் நீக்கி கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வாழைக்காயை போடவும்.

வெந்தவுடன் நீரை வடிகட்டி கொட்டவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். நன்கு வெந்த வாழைக்காய்த் துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.

சிறிதாக அடுப்பை எரிய விட்டு 10 நிமிடம் வதங்கிய பின் பொடித்து வைத்துள்ளவற்றை சேர்த்து கலக்கவும். 3 அல்லது 4 நிமிடம் வதங்கிய பின் அடுப்பை அணைக்கவும். சுவையான வாழைக்காய் வறுவலை ரெடி

Tags: Food, Thai Amavasai

.
மேலும்