'பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு, சத்து மிகுந்த தாயின் சீம்பாலை மறக்காமல் கொடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீம்பால் தருகின்றனரோ இல்லையோ, கழுதைப் பால் கொடுப்பதில், பெண்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
'கழுதைப் பால் கொடுத்தால், குரல் வளம் நன்றாக இருக்கும், மஞ்சள் காமாலை வராது, தொற்று நோய்களும் அண்டாது' என, காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கையே இதற்கு காரணம். மக்களின் இந்த நம்பிக்கையை குறிவைத்து, பொதி சுமக்க கழுதைகளை பயன்படுத்தியோர் எல்லாம், தற்போது, கழுதைப் பால் விற்று காசு பார்த்து வருகின்றனர். குட்டியுடன், கழுதைகளை ஓட்டிக் கொண்டு, அரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு சென்று விடுகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களிலேயே, இது, வழக்கமாக நடக்கிறது என்றால், கிராமப்புறங்களில் கேட்கவே வேண்டாம்.
'ஒரு சங்கு கொடுத்தால் போதும்; நோய் நொடியே அண்டாது' என, மருத்துவ நிபுணர்கள் போல், கழுதைப் பால் விற்பவர்கள் விளக்கம் தந்து, ஒரு சங்கு, 50 ரூபாய், 100 ரூபாய் என, இஷ்டத்திற்கு விலை வைத்து விற்கின்றனர். விவரம் தெரியாத பொதுமக்கள், 'குழந்தைகளுக்கு ரொம்ப நல்லதுங்க...' என, ஆர்வத்தில், வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். ஏதாவது கேட்டால், 'பாட்டன், பூட்டன் காலத்திலே இருந்து, கழுதை பால் கொடுக்கிறது வழக்கம் தானே...' என, கேட்கின்றனர் பெண்கள்.
'கழுதைப் பால் பயன்பாடு பாரம்பரியமாக நம்மில் இருந்துள்ளது; வாத நோய், கரப்பான், சிரங்கு, பித்தம், சித்தர பிரமை போக்கும் மருத்துவ குணம் உண்டு. அதை பச்சையாக கொடுப்பது சரியல்ல...' என்கின்றனர், சித்த மருத்துவர்கள். மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், கழுதை பால் கொடுக்கும் நடைமுறை இருந்தது சரிதான். நேற்று வந்த, 'எபோலா' நோய்க்கே, மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், கழுதைப்பால் கொடுப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. 'குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுப்பது நல்லதல்ல; தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தி விடும். இது, முட்டாள்தனம்' என்கின்றனர், குழந்தை நல நிபுணர்கள். அவர்கள் கூறியதாவது:
கழுதைப் பால் கொடுப்பதை மூட நம்பிக்கை என்றே சொல்ல வேண்டும். சூடு பண்ணாத எந்த பாலிலும் நோய்க் கிருமிகள் உண்டு. தாய்ப்பால் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. கழுதைபால் கொடுப்பதால், நோய் கிருமிகள் குழந்தைகளை தாக்க வாய்ப்புண்டு. கழுதை பால் ஜீரணமாக நீண்ட நேரமாகும். இதன் மூலம் மனித செல்லுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு உயிரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, தொற்று நோய்கள், குழந்தைகளின் உடலில் உருவாகலாம். மருத்துவ வசதியற்ற காலகட்டத்தில் அறியாமையினால், நம் முன்னோர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பர். அதை இன்றும் நாம் தொடர்வது நல்லதல்ல. இன்னும் சொல்வதென்றால், கழுதைப் பால் கொடுக்கும் நடைமுறை தொடர்ந்தால், எதிர்காலத்தில், மிருகங்களுக்கு வரும் நோய்கள், மனிதர்களுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவ்வாறு, குழந்தைகள் நல நிபுணர்கள் கூறுகின்றனர். இதைப் படித்த பிறகாவது, உங்க குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுக்கலாமா, வேண்டாமா... என்பதே நீங்களே முடிவு செஞ்சுக்குங்க.