நாடிசுத்தி செய்யும் முறை:
பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம்.
இடது பக்க நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும்.
வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும்.
நுரையீரல் காற்றால் நிறைந்ததும் இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும்.
இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும்.
இது ஒருசுற்று நாடிசத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.
சுவாசித்தல் என்ற காரியத்தில் காற்று மூக்குவழியாக உள்ளேபோய் அங்கே காற்றிலுள்ள பிராணவாயு எடுத்துக்கொள்ளப்பட்டுக் கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. இதைத்தான் சுவாசித்தல் என்று கூறுகிறோம்.
காற்று மூக்கு வழியாக உள்ளே நுரையீரலுக்குப் போய் மூக்கு வழியாக வெளியே வரவேண்டும். இவ்வளவு தானே, இதற்கு மூக்கிலே இரண்டு துவாரங்கள் எதற்காக இருக்கவேண்டும்? ஒரே துவாரமாக இருந்தால் போதாதா? போன்ற இப்படியான கேள்விகளை எடுத்துக் கொண்டு விஞ்ஞானம் இதுவரை இதற்கு விடை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. விஞ்ஞானம் இதனை விளங்கிக் கொள்ளாமலோ அல்லது விளக்கமளிக்காமலோ போனாலும் நமது ஞானிகள் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
இடை பிங்கலையும் சுவாச நடப்பும்:
இடதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் இடைகலை, வலதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் பிங்கலை எனபப்படும். இடதுபக்க சுவாசம் உடலுக்கு சீதளத்தையும், வலதுபக்க சுவாசம் உடம்புக்கு உஷ்ணத்தையும் தருகின்றன.
சாதாரணமாக நாம் நமது சுவாசத்தின் நடப்பைக் கவனித்தோமானால் யாருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பக்கமாகத்தான் சுவாசம் நடந்துகொண்டிருக்கும். அப்பொழுது மற்ற மூக்குத்துளை அடைத்துக் கொண்டிருக்கும். இன்னும் சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ஏற்கனவே சுவாசம் ஓடிக்கொண்டிருந்த பக்கம் அடைத்துக்கொண்டு மறுபக்கம் சுவாசம் மாறி நடப்பதை அறியலாம். எப்போதாவது ஒரு சமயம் சுவாசம் இரண்டு நாசித்துளைகள் வழியாகவும் தடை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். இந்நிலை சுவாசம் ஏதோ ஒரு பக்கமாக மாறப்போகிறது என்பதன் அறிகுறியாகும். இவ்வாறு சுவாசம் ஒரு நாளில் சில தடவைகள் மாறிமாறி நடந்து நமது உடம்பின் உஷ்ண நிலையைச் சீராகவைத்துக்கொண்டு இருக்கிறது.
அறுபது கோடி காற்றறைகளால் ஆகி நூறு சதுரமீட்டர்கள் பரப்பளவையுடைய நுரையீரல்கள், சின்னச்சின்ன வாழைப்பூ வடிவத்தில் இரண்டுபக்க விலாஎலும்புகளுக்குள்ளே அமைந்து நமது சுவாசத்தை இரவும் பகலும் ஓயாது நடத்தி, நமது உடம்பிலுள்ள ஐயாயிரம் கோடி கலங்களுக்கும் பிராணவாயுவை விநியோகம் செய்துவருகிறது.
சாதாரணமாக நாம் சுவாசிக்கும் சுவாசங்களைக் கவனித்தால் இது சரியான சுவாசம் இல்லையென்பது விளங்கும். ஏதோ கொஞ்சம் காற்று உள்ளே போகிறது. உள்ளே வந்த காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரல்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டு இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் கரியமில வாயுவை வெளிளேற்றுகின்றன. உள்ளே போகும் காற்றில் தூசும், வாகனங்களின் கரிப்புகையும், தூய்மையற்ற சுற்றுப்புறத்தின் மாசுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்தக் காற்றையாவது நுரையீரல் நிரம்புமளவுக்கு சுவாசிக்கிறோமா என்றால் அதுவுமில்லை.
மனிதன் சுவாசிக்கின்ற ஒவ்வொரு சுவாசத்திலும் ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்ப முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் நடைமுறையில் இல்லை. எப்போதாவது அபூர்வமாகப் பெருமூச்சு விட்டால் அப்போது ஓரளவு நமது நுரையீரல்கள் காற்றால் நிரம்புகின்றன. இந்த நடைமுறையினை நாம் அறிவோம்.
நாடிசுத்தி செய்கின்றபோது நன்கு ஆழ்ந்து காற்றை இழுத்து நரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றறைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது. பெருமளவில் கிடைத்த பிராணவாயு முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன.
இதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது. நமது உடல் உறுப்புக்களிலேயே அதிகமான ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் பகுதி நமது மூளைதான்.
போதியளவு ஆக்சிஜன் இல்லாவிட்டால் மூளையின் கலங்கள் இறந்துபோய்விடும். இறந்துபோன மூளைக்கலங்களை உயிர்ப்பிக்க முடியாது. மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிட்டுவதால் நல்ல சிந்தனைத் தௌpவு உண்டாகும். மனக்கட்டுப்பாடு வரும். மொத்தத்தில் நாடிசுத்தியால் மனித உடம்பிலும், மனதிலும் மிகப்பெரிய வேதிவினையே நடைபெறகின்றது. மனிதன் தானாக உயர்கிறான். ஒரு சிறு மூச்சுப்பயிற்சி உயர்வான பயன்களைத் தந்து உதவுகிறது.
உயர்வான இந்தப்பயன்களோடு, மனித உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமான தூக்கம்வரும். தலைவலி சளித்தொல்லைகள், காய்ச்சல் போன்ற உபாதைகள் வரமாட்டா. முகம் பொலிவு பெற்று விளங்கும். மூக்கில் சதை வளருதல் இ சைனஸ் போன்ற நாசித் தொல்லைகள் அகலுகின்றன. காசநோய் வராது. காசநோய்க் கிருமிகளை நாடிசுத்தியினால் கிடைக்கும் ஆக்சிஜன் உடனடியாகக் கொன்று அழிக்கும். ஆஸ்த்மா என்ற கொடிய நோயை அழிக்கின்ற அரக்கன் என்று நாடிசுத்தியைக் குறிப்பிடலாம். அவ்வளவு அற்புதமான பயிற்சி இது.