பருத்தி பால் செய்வது எப்படி?

By News Room

பருத்தி விதைகளில் கோலின், விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது. பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். அது மட்டுமின்றி டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாக கருதப்படுகின்றது. தற்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். 

 

 பொருட்கள்:

 

பச்சரிசி - 100 கிராம் 

கருப்பு பருத்தி விதை - 50 கிராம் தேங்காய் மூடி - 1 

தேங்காய் துருவல் - விருப்பத்திற்கு ஏற்ப 

ஏலக்காய் - 3 

முந்திரி - சிறிதளவு 

சுக்கு - சிறிதளவு 

கருப்பட்டி - 1 வட்டு ( பெரியது )

 

செய்முறை:

 

 6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்திவிதையை , மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும் . பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும். கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

 

தேங்காயை மிக்சியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும் . பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் . அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும் . அரிசி வெந்தவுடன் , குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து , பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்

பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு , ஏலக்காய் , தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும் . தேங்காய் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம் . அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார் .

 

பருத்தி பாலின் மருத்துவ குணம்:

 

மனித வாழ்வின் தொடக்கமும், இறுதியும் பாலில் தான். தாய்ப்பாலுக்கு பிறகு விலங்குகளின் பால், விதைகளில் இருந்து பெறப்படும் பால் என தனது அன்றாட உணவு பழக்கத்தில் ரசித்து ருசிக்கிறான். விலங்குகளின் பால் நாம் அனைவரும் அறிந்ததே மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் வரிசையில் கழுதைப்பால் வரை பருகுகிறான்.

 

விதைகளை அரைத்து அதில் இருந்து பாலெடுப்பது என்று வகைப்படுத்தினால், தேங்காய் பால், பாதாம் பால், நிலக்கடலை பால், கொள்ளுப்பால், பருத்திப் பால்…என பட்டியல் உண்டு. பருத்திப்பாலுக்கு பெயர் போன மதுரையில் எங்கெங்கு காணினும் பருத்திப் பால் கடைகள் தான். இதன் சுவையும், பயனும் அறிந்து தமிழகமெங்கும் பரவியது நல்ல விஷயம் தான்.

 

பருத்தி விதைகளில் கோலின், விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது. இதனை triple nutrients என்று கூட அழைக்கலாம். உடலுக்கு ஊட்டமும், வலுவும் தருவதால் பருத்திப் பாலை வாரம் ஒரு முறையாவது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

 

பயன்கள்:

 

*நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது ஒரு சிறந்த மலமிளக்கி.

 

*பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவு. இழந்த உடற்திறனை மீட்டுத்தரும் வேளையில் பால் சுரக்க உதவும்.

 

*மாட்டுப்பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று.

 

*வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.

 

*வேகன் (vegans) டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.

 

*இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது.

 

*நெஞ்சு சளியை விரட்டும். ஆகவே மழை, குளிர்க்காலங்களில் அடிக்கடி பருகலாம்.

 

*மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

 

*பருத்திப்பால் உடன் கோதுமையை வறுத்து  அரைத்தெடுத்து கோதுமையை   பருத்தி பாலுடன் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் கை கால் மூட்டு வலி முதுகு வலி தீரும்.

.
மேலும்