ஒரு மனிதன் பிறக்கும்போது அவன் பிறக்கக்கூடிய நாள், நேரம் ஆகியவை மிக முக்கியமானவை. அவையே ராசி, நட்சத்திரம் போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன. அதன்படியே வாழ்க்கை அமைகிறது என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.
கிரகங்களின் அமைப்பின்படிதான் ஒருவரின் வாழ்க்கை அமைகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கிரகங்களின் அமைப்பையும் அதன் வழியே நம்முடைய வாழ்க்கையின் அமைப்பையும் கணித்துக் கூறியுள்ளார்கள்.
ஒருவர் பிறக்கும்போது அவருடைய பூர்வ புண்ணிய கணக்குகளும் இந்த பிறவியில் சேர்ந்து விடுகின்றன. எப்படி புது பாஸ் புக் வாங்கும்போது பழைய சேமிப்பும் புதிய புக்கில் வரவு வைக்கப்படுகிறதோ, அதுபோல நம் பாவ புண்ணியங்களும் இந்த பிறப்பில் சேர்ந்துவிடுகின்றன. இந்த வாழ்க்கை என்பதே பல ஜென்மங்களின் கூட்டாக நிகழ்வதுதான்.
எனவே சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளும்கூட ஆண்டவன் விரும்பியபடி, விதி வகுத்தபடிதான் குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் என்பதே உண்மை. இயற்கையாகப் பிறந்தாலும் சரி, சிசேரியன் என்ற நிலை வரும்போது... இந்த நேரத்தில் பிறந்தால் இந்த பலன் என்று கருதி பிரசவ நேரம் அமைந்தாலும் சரி, எல்லாமே விதிப்படியே நடக்கின்றன. ஆகவே, சிசேரியன் குழந்தைகளுக்கும் ஜாதகம் பலிக்கும் என்பதே உண்மை.