கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடும் போது,பல விதிமுறைகள் இருக்கின்றன.
கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டது என்பதால்,சுவாமியை தொட்டு அர்ச்சனை,வழிபாடு செய்பவர்களை தவிர மற்ற யாரும்,எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சுவாமி சிலைகளைத் தொடக் கூடாது.
அதிகாரம்,பணம் போன்றவைகளால் கடவுளை விலைக்கு வாங்க முடியாது.எனவே,ஆகமவிதிப்படி கடைபிடிக்கப்படும் சில நியமங்களை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும்.
பொதுவாக மரியாதைக்குரிய மனிதர்களையே நாம் தொட்டுப் பேசுவது கிடையாது.சில அடி தூரம் தள்ளி நின்று மரியாதையாகவே பேசுவது வழக்கமாகும்.
மனிதர்களுக்கே இத்தனை மதிப்பளிக்கும் போது,கடவுள் சிலையை எப்படி தொட்டு வணங்க முடியும்❓ எனவே,தெய்வச் சிலைகளை தொடாமல் வணங்குவதே சிறந்தது.
தெய்வச் சிலைகளைத் தொட்டால் பாவம்,தீட்டு என்ற காரணம் கிடையாது.மரியாதை நிமித்தமாகவே சிலைகளை தொடாமல் வணங்க வேண்டும்.
இறைவன் மகத்துவம் வாய்ந்தவர் என்பதாலும்,அவரைத் தொடும் தகுதி நமக்கு இல்லை என்பதாலும்,தொடாமல் தள்ளி நின்று வணங்குவது நல்லது.
அரசு நினைவகங்கள்,அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் பொருட்களை யாரும் தொட்டு பார்க்க முடியாது!அதே போல்,அடுத்தவர்கள் இடங்களுக்கு செல்லும் போது,அவர்களது பொருட்களை அவர்களின் அனுமதியின்றி யாராலும் தொட முடியாது!
இவ்வாறு சாதாரண சில விஷயங்களுக்கே இத்தனை கட்டுப்பாடுகள் இருக்க,உலகத்தையே படைத்து காத்து வரும் இறைசக்தி கொண்டுள்ள தெய்வ சிலைகளை தொட்டு வணங்க கூடாது என்பதற்காகவே சுவாமி சிலைகளை தொடக் கூடாது என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் சுவாமி சிலைகள் அனைத்தும் தியான கோலத்தில் உயிரோட்டத்துடன் இருக்கும் நிலையில்,அவற்றை நாம் தொட்டு வணங்கினால்,அம்மூர்த்திகளின் தியானத்திற்கு பாதிப்பு வந்து விடும் என்பதன் காரணமாகவே அவைகளை தொடக் கூடாது.
வணங்கும் முறை
முதலில் கோபுர தரிசனம் செய்த பிறகு,விநாயகரை வணங்கி செல்ல வேண்டும்.
கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
சுவாமியை தரிசனம் செய்யும் போது,அந்த தெய்வத்துக்குரிய பாடல்களைச் சொல்லி வழிபாடு செய்வது நல்லது.
மூலமூர்த்தியை வணங்கியதும், உற்சவ மூர்த்தி, சண்டிகேசுவரர் ஆகியோரை வணங்க வேண்டும்.