அரிசி மாவில் கோலம் போடுவது ஏன்?

By News Room

தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இணைந்து வாழ்கிற வாழ்க்கை முறை. மற்றவர்களை விட நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இயற்கையை அரவணைத்து வாழக் கூடியவர்கள். இந்த மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் வாசலில் பசு சாணத்தை தெளிக்கிறோம்.சூரிய உதயத்திற்கு முன் வாசல் தெளிக்கும் போது பிராண வாயு அதாவது, முழுமையான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது.

 

வாசலில் கோலம் போடுவது ஏன்?

 

வாசலில் கோலம் போடுவதால் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். மேலும் குனிந்து வாசல் பெருக்குதல், குனிந்து கோலமிடுதல் இவையெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலை தரக்கூடியது. வாசலில் பசு சாணத்தையோ, தண்ணீரையோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது.

 

இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி அனைவரும் வருகிறார்கள் என்ற ஐதீகம் உள்ளது. அவர்களை வரவேற்கும் விதமாகவும், ஒரு மங்கலச் சின்னமாகவும் நமது வாழ்க்கை முறையில் கோலம் போடுவது இருந்து வருகிறது. அதிலும் அந்த மாக்கோலம் இடுதல் என்பது தனிச்சிறப்பு.

 

அரிசி மாவில் கோலம் இடுவது ஏன்?

 

பச்சரிசி மாவில் கோலமிடும் போது நம்முடைய தாராள குணம் வெளிப்படும். அரிசி மாவில் கோலம் போடுவதால் எறும்பு போன்ற ஜீவராசிகளின் பசியை போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதாவது தானம், தர்மம் செய்வது போன்றது.

 

அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் கிடையாது. நம்முடைய வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல், வரவேற்றல் மற்றும் உபசரிக்கும் குணம் மேலும் மங்கலகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

 

அரிசி மாவில் கோலம் போடும் போது, அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும், சுற்றிலும் இடும் காவி நிறம் சிவபெருமானையும் குறிக்கும். கோலத்தின் நடுவில் சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வருவாள். அவளுடன் மகாவிஷ்ணுவும் சேர்ந்து வந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள். எனவே மாவாலும், மண்ணாலும் கோலம் போடலாமே தவிர செயற்கை வண்ணங்களால், ரசாயன பொருட்களால் கோலம் போடவே கூடாது.

 

இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி மாவு கோலத்தைப் போட பழகிக் கொள்ளுங்கள். உங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

.
மேலும்