மரணத்தை ஜோதிட ரீதியாக கணிக்க இயலுமா?

By News Room

ஆயுளைக் கணக்கிடும் முறை - ஆயுர்த்தாயம்

ஒரு மனிதனின் ஜாதகத்தை வைத்து அவனது ஆயுள் எத்தனை வருடங்கள் என்பதைக் கணிக்க முடியமா என்பது பெரும்பான்மை மக்களிடம் உள்ள ஒரு கேள்வி. கடந்த இரண்டாயிரம் வருடங்களில் எத்தனையோ சோதிட வல்லுனர்கள் தங்களது இடைவிடா முயற்சியில் பல்வேறு கணக்குகள் மூலம் இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயன்று வந்திருக்கின்றார்கள்.

மந்திரேஸ்வரர் - பலதீபிகை

பலதீபிகை என்னும் சோதிட நூலை எழுதிய மந்திரேஸ்வரர் ஆயுள் பாவத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றார். லக்கினாதிபதியும் சுபக்கிரகங்களும் கேந்திரங்கள் என்னும் 1, 4, 7, 10ல் இருந்தால் தீர்க்காயுள் என்றும், பணபரங்கள் என்னும் 2, 5, 8, 11 ல் இருந்தால் மத்திமாயுள் என்றும், ஆபோக்லீமங்களில் இருந்தால் தீர்க்காயுள் என்றும் கூறும் அவர் இன்னொரு சித்தாந்தத்தையும் முன் வைக்கின்றார். அதாவது ஜன்மலக்னாதிபதியும், அட்டமாதிபதியும் மித்ருக் கிரகங்களாக இருந்தால் தீர்க்காயுள் என்றும், சமமானால் மத்திமாயுள் என்றும், சத்ருக்கிரகங்களாக இருந்தால் அற்பாயுள் என்றும் கணிக்கின்றார். இதுபோலவே சந்திர லக்னத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும். லக்னாதிபதியும் சூர்யனும் மித்ருக்கிரகங்களாக இருப்பின் தீர்க்காயுள் என்றும் சமராக இருப்பின் மத்திமாயுள் என்றும் சத்ருகிரகங்களாக இருப்பின் அற்பாயுள் என்றும் அவர் கணிக்கின்றார்.

இங்கே சில சந்தேகங்கள் எழுகின்றன. லக்னாதிபதியும், அட்டமாதியும் சத்ருக்களாக இருப்பின் அற்பாயுள் என்றால், ரிசப லக்னம், மகர லக்னம் ஆகிய லக்னங்களில் பிறப்பவர்கள் 36 வயதுக்கு மேல் வாழ முடியாது என்று அர்த்தமாகிவிடும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை. எனவே நாம் மந்திரேஸ்வரரின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு அடிப்படையான விஷயத்தை அவர் முன் வைக்கிறார். லக்கினாதிபதியைவிட அட்டாமாதிபதி பலமாக இருந்தால் ஆயுள் குறைவு என்பதே அது. இவ்விஷயத்தை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இருபதுக்குள் மரணத்தைச் சந்திக்கும் ஜாதகர்கள் விஷயத்தில் இது பொருந்திப் போகக் கூடும்.

வராகமிகிரர் - பிருஹஜ் ஜாதகம்

வராகமிகிரரின் சித்தாந்தத்தில் அற்பாயுள், மத்திமாயுள், தீர்க்காயுள் என்ற பேதங்கள் கிடையாது. ஒவ்வொரு கிரகமும் தத்தமது உச்ச பாகையில் இருந்தால் அக்கிரகங்கள் அவைகளுக்குச் சொல்லப்பட்ட வருடங்களை முழுமையாகத் தருகின்றன. மாறாக நீச்ச பாகையில் இருப்பின் அவைகளுக்குச் சொல்லப்பட்ட வருடங்களில் பாதியைத் தருகின்றன. ஒவ்வொரு கிரகமும் தத்தமது உச்ச அல்லது நீச பாகையில் இருப்பின் அவை கொடுக்கும் வருடங்கள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

ஆனால் சூர்யன் உச்சராசியில் இருக்கும் போது புதன் நீச வீட்டிலோ அல்லது மேஷத்திலோ இருக்க நேரும். எனவே அது நீச வீட்டில் இருப்பதாகக் கொண்டால் பாதி வருடங்கள் அதாவது ஆறு வருடங்களைக் கொடுக்கும். எனவே 127ல் 6ஜக் கழிக்க 121 வருடங்கள் வரும். எனவே அதிகபட்சமாக ஒரு மனிதன் 121 வருடங்கள் வாழ முடியும், புதனைத் தவிர்த்து எல்லாக் கிரகங்களும் உச்ச பாகையில் இருக்க நேரிட்டால்! ஆனால் வராகமிகிரர் என்ன காரணத்தினாலோ மனிதனின் பூர்ணாயுள் 120 வருடங்களும் 5 நாட்களும் என்று வரையறை செய்துள்ளார்.

இந்தப் பகுதியை நான் என் தந்தையாரிடம் பாடமாகக் கற்கும் போது “எல்லோருக்கும் எல்லாக் கிரகங்களும் எவ்வாறு உச்சமாக அமையாதோ அவ்வாறே நீச்சமாகவும் இருக்க முடியாதே! இரண்டுக்கும் இடைப்பட்டுத்தானே இருக்கும்? அப்படியானால் எல்லா மனிதரும் 127ல் பாதியான 63½க்கு மேல் வாழ்ந்தாக வேண்டுமே ஆனால் யதார்த்தம் அப்படியில்லையே” எனக் கேட்டேன். ‘சுலோகத்தின் அடுத்த பகுதியில் உனக்கு விடை இருக்கிறது’ என்றார் அவர். சத்துரு வீட்டில் இருக்கும் கிரகம் தனது வருடங்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறைக்கிறது. சனி, சுக்கிரன் தவிர்த்த மற்ற கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆகியவை சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகும் போது தங்களது வருடங்களில் பாதியை இழக்கின்றன. அடுத்ததாகவும் ஒரு கணக்கு வருகிறது. லக்னத்துக்குப் பன்னிரண்டில் இருக்கும் பாபக் கிரகங்கள் தங்களது வருடங்களை முழுமையாக இழக்கின்றன. லக்னத்துக்குப் பதினோராமிடத்தில் உள்ள பாபக் கிரகங்கள் தங்களது வருடங்களில் பாதியை இழக்கின்றன. இதைப் போலவே பத்தில் 1/3, ஒன்பதில் ¼ , எட்டில் 1/5, ஏழில் 1/6 பங்குகளை இழக்கின்றன. சுபக் கிரகங்கள் பன்னிரண்டில் ½, பதினொன்றில் ¼, பத்தில் 1/6, ஒன்பதில் 1/8, எட்டில் 1/10, ஏழில் 1/12 பங்குகளை இழக்கின்றன. இவ்வாறு கணக்கிட்டபின் மிஞ்சி வருவதே ஒவ்வொரு கிரகமும் கொடுக்கும் ஆயுளாகும். ஏழு கிரகங்களும் கொடுக்கும் வருடங்களைச் சேர்த்து மொத்தமாகக் கிடைப்பதே ஒரு மனிதனுக்கு ஆயுளாகும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு கிரகம் மூன்று விதமாகத் தனது வருஷங்களைக் குறைக்கலாம்.  சத்ரு வீட்டில் இருக்கும் போது தனது ஆயுளில் 1/3 பங்கு குறைக்கிறது. சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனமாகும் போது தனது ஆயுளில் பாதியைக் குறைக்கிறது.

லக்னத்துக்கு ஏழில் இருந்து பன்னிரண்டு முடியவுள்ள ராசிகளில் இருக்கும் போது பாபக்கிரகமாக இருந்தால் முறையே 1/6, 1/5, ¼, 1/3, ½, 1/1 பங்கைக் குறைக்கிறது. ஏழில் இருந்து பன்னிரண்டு முடியவுள்ள ராசிகளில் இருக்கும் போது சுபக்கிரகமாக இருந்தால் முறையே 1/12, 1/10, 1/8, 1/6, ¼, ½ பங்கைக் குறைக்கிறது.

சுக்கிரன் சனி இவர்களுக்கு அஸ்தமனக் குறைப்பு கிடையாது. வக்ரமாகக் கிரகங்கள் இருக்குமானால் அவை சத்ரு வீட்டில் இருந்தாலும் 1/3 பங்கு குறைக்க வேண்டியதில்லை.

.
மேலும்