கோயிலில் தெய்வ வழிபாடு எப்படி?

By News Room

முதலில் விநாயகரை வணங்கி அதன் பிறகு மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். கிழக்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் வலப்பக்கத்தில், அதாவது தென்திசையில் நின்று வடதிசையை நோக்கி தரிசிக்க வேண்டும்.

 

மேற்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் இடப்பக்கத்தில், தென் திசையில் நின்று வட திசையை நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்.

 

தெற்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் வலப்பக்கத்தில், மேற்கில் நின்று கிழக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்.

 

வடக்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் இடப்பக்கத்தில் இருந்தபடி, மேற்குத் திசையில் நின்று, கிழக்கு நோக்கி தரிசிக்க வேண்டும்.

 

பிராகாரங்களில் வலம் வரும்போது - கோபுரத்தின் நிழலோ அல்லது கொடிமரத்து நிழலோ குறுக்கிட்டால், அதை மிதிக்காமல் வலம் வர வேண்டும். முடியவில்லை என்றால், அடுத்த பிராகாரத்தை வலம் வரலாம். ஸ்வாமி உற்சவம் நடக்கும்போது, ஸ்வாமியின் பின்னால் நாம் வரும் காலத்தில் மேலே சொன்ன நிழல்கள் இருந்தாலும் குற்றமில்லை.

 

எந்தக் கோயில் ஆனாலும் சரி ஸ்வாமிக்கும் அவருக்கு எதிரில் உள்ள வாகனத்துக்கும் நடுவில் போகக் கூடாது.

 

கோயிலில் தரப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்களை இடக் கைக்கு மாற்றக் கூடாது. ஒரு காகிதத்தில் போட்டு மடித்து வைத்துக் கொள்ளலாம்.

 

ஸ்வாமிக்காகக் கொண்டு போகும் பூக்கள் அல்லது மாலையை, நம் இடுப்புக்குக் கீழே இருக்கும்படி கொண்டு போகக் கூடாது.

 

ஸ்வாமியை வணங்கும்போது, ஆண்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்துக் கும்பிட வேண்டும். பெண்கள் தங்கள் கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்துக் கும்பிட வேண்டும். தலைக்கு மேல் கைகளை வைத்துக் கும்பிடக் கூடாது. பெண்கள் அங்கப் பிரதட்சிணம் செய்யக் கூடாது.

 

நன்றி: 

வெ.பழனியப்பன்

.
மேலும்