தாலாட்டி வளர்த்ததில்லை தடவி கொடுத்து தாங்கியதுமில்லை! பாலூட்டும் பொழுதிலும் பண்பூட்டவே விழைந்தாள்!!! தடம்மாறும் குணமெனில் இடம்மாறும் என் கைகால்கள்;
கசப்பு மருந்துகள்தான் கணக்கில்லைதான்; உள்ளுறைந்த நாட்களிலும் உரைத்தது கீதைதான்!!!
உதிரப்பூவை(மகவை) உதிராமல் காக்கவே, உண்டான வழியதுவென கண்டாளோ அன்னையுமே!!!
அறுபதிலும் குழவியாய், உருவெடுப்பது அன்னையின் நினைவுகளே!!!
குட்டிக்குட்டியே குவலயத்தில் உயர்த்தினாளே!!! எட்டியே, போய்விட்டாள், என் அன்னையே!!! எட்டியே பார்க்குது விழிநீர், உன்நினைவால்; எப்பிறவியில் காண்பேன் தாயே!!! தப்புகளில் இருந்து என்னை மீட்டவள் நீயே!!!
அன்புச் சாளரங்களை அடைத்து வைத்து பண்பில் நான்செழிக்க மாதாவே நீ வளர்த்தாய்! தாயாக நான்தான் தகைமை கொண்ட நாளில்நின் மகிமைதனை உணர்ந்தேன்!
மனதார உனைத்தொழுதேன் சராசரித் தாயில்லை நீ! சத்தியாய்ப் புரிந்தேன் உன்னை நித்தியமும் நான்செழிக்க பத்தியம் இருந்தவள் நீயன்றோ?
அம்மா நீ வாயேன், அழுகின்றேன் நின் சேயே! தொழுகின்றேன் இறையை தொடரும் பிறவிக்கும் குடியிருக்கும் கோவில் குலமகளே நீயாக அம்மா. . . . . - தமிழ்தேவி