அவளின் தினசரி - கவிதை

By saravanan

உறங்க போகுமுன் 

நெருங்கிய தோழி 

அதிகாலை நேரத்தில் 

தலையில் அடி வாங்கும்

பாவப்பட்ட எதிரி 

அழகிய முரண் 

அவளின் அலாரம்....

 

காணொலிகளை பார்த்து 

புதிது புதிதாக 

குழம்பு வைக்கிறாள் 

அவளின் சிரிப்பை போலவே 

அனைத்திற்கும் ஒரே ருசி....

 

சோம்பல் கலைத்து

நெட்டி முறிக்கிறாள்

படபடவென 

திறந்து மூடுகிறது

அவளறை ஜன்னல்....

 

படுக்கையிலிருந்து எழுந்ததும் 

கண்ணாடி பார்ப்பது 

அவளின் முதல் வேலை 

கண்ணாடிக்கு 

அதுதான் விடியல்.....

 

எப்போதும் போல 

இன்றைய நாளின் 

முதல் அழைப்பும்

அவள் தாய்க்கு தான் 

தொடர் வர்ணனைகளின்

முன்னோட்டம் அது.....

 

மற்ற அனைவரும் 

விழிக்கும் வரை 

இளையராஜா பாடல்கள் 

முணுமுணுக்கும் மென்மனது

விழித்த பின்பு 

பத்ரகாளியாகும்

பெண் மனது‌......

 

வருடக்கணக்கில் 

மாறாத அவளின் 

தினசரி தத்துவம் 

"என் தலையெழுத்து 

இங்க வந்து மாட்டிக்கிட்டேன்"....

 

பற்களுக்கிடையே ஹேர் கிளிப் 

அனிச்சையாக ஜடை 

போடும் கைகள் 

முறைத்துக் கொண்டே 

கடிகாரம் பார்க்கும் விழிகள் 

கருகிப் போவதை 

வாசம் பார்க்கும் நாசி 

காலை நேர அஷ்டவதினி அவள்....

 

பள்ளிப்பேருந்து

கிளம்பிப் போனபின்

தலைவனுக்கான 

அர்ச்சனை படலம் 

புளித்துப்போன செவிகளுக்கு 

அவளே பொறுப்பு....

 

மொத்த நாளையும் 

அவன் காதலுடன் கழிக்க

அலுவலகம் செல்லுமுன்

ஒரு அவசர அணைப்பு 

சிறு பறக்கும் முத்தம்....

 

பிரபுசங்கர் க

.
மேலும்