எங்கள் காதல் முதலிரவில்..

By News Room

எங்கள் காதல்

முதலிரவில் தொடங்கியது

அழகு தேவதையாய் வந்தாள்

உன் உலகு நான் என

சொல்லாமல் சொன்னாள்

வரவேற்றேன்

கரம் கோர்த்தேன்

ஒரு வாரம் பொறு

என கைகளை

கழுத்தில் தோரணமாக்கினாள்

ஒரு வரம் பெறு

என்பது போல் இருந்தது.

நிம்மதி தா

என கண்களால் கேட்டாள்

சம்மதித்தேன்.

.

உணர்ச்சிகளுக்குதான்

விடுமுறை இருந்தது

உணர்வுகளுக்கு

விதிமுறை இல்லை

பரிமாற்றங்கள் இனிக்க

பரிவட்டம் கட்டியது காதல்.

.

எனக்கும் அவளுக்கும்

விருப்பு வெறுப்புகளில்

நிறைய வித்தியாசங்கள்

விசித்திரங்கள்

வித்தியாசத்தில் ஒன்றுபடுமோ

எனக்கு அஜித் பிடிக்கும்

அவளுக்கு விஜய் பிடிக்கும்

எனக்காக அவளும்

அவளுக்காக நானும்

படம் பார்த்தோம்

அஜித்திற்கும் விஜய்க்கும்

இடம் கொடுத்தோம்

ஆம்..அவர்கள் எங்களுக்கு

மாமன் மச்சான் ஆனார்கள்.

.

உள்ளத்து பரிவனைகள்

பரிபூரணமாய் பவனிவர

ஆறாவது நாளில்

எங்களுக்குள் காமம்

பூப்பெய்தியது.

சங்கமித்தோம்

தேவைகள்

சேவைகளாயிற்று.

வெட்கம் அவிழ்த்து

எங்கள் பெற்றோர்க்கு

பெற்றுக்கொடுத்தோம்.

விட்டுக்கொடுக்க

எங்கள் பிள்ளைகளுக்கு

கற்றுக்கொடுத்தோம்.

மூத்த மகளுக்கு

ஒரே பெயரை இருவருமே

நினைத்ததை நேற்றுவரை

சொல்லி பூரித்தோம்.

.

இரண்டாவது பிரசவத்திற்கு

மீண்டும்

பெண் குழந்தை என

சொல்ல தயங்கியவரை

இடைமறித்து

மீண்டு வந்தது தேவதை

என என் மாமியார் 

சொன்னபோது

என்முகம் 

பிரகாசமானதை கண்டு

ஆச்சிரியத்துடன் பார்த்தாள் செவிலி.

.

துன்பமும் துயரமும்

செருப்பானது எனக்கு

ஆம்..வாசலோடு 

நின்றுவிடும் அவை

என் தேவதை அவற்றை

கொன்றுவிடுவாள்.

.

பிள்ளைகள் வளர 

ஆரம்பித்தார்கள்

நாங்கள் மிளிர 

ஆரம்பித்தோம்

எங்களுக்குள்

பசி தூக்கம்‌கண்ணீர்

ஏன் சிறுநீர்கூட

எப்போது வருமென

ஒருவருக்கொருவர்

தெரிந்துவைத்திருந்தது

எல்லோருக்கும் ஆச்சர்யம்.

.

சென்ற வாரம் எனக்கு

திடீரென மாரடைப்பு ஏற்பட்டது

தூங்கிகொண்டிருந்தவளை 

எழுப்ப வேண்டாமே என

நினைத்த மாத்திரத்தில்

கண் விழித்தாள்.

அவ்வளவுதான் 

நேற்றுவரை அவள்

தூங்கவேயில்லை

நான் பார்க்காதபோதெல்லாம்

அழுதாள்

பார்க்கும்போதெல்லாம்

தொழுதாள்.

.

இப்போது அவளை 

நான் பார்த்து

பதினான்கு

மணிநேரம் ஆகிறது

என் தேவதையை

விட்டுபிரிந்ததாக 

நான் நினைத்துவிட கூடாதே

என்பதற்காக

இதோ குழி தோண்டும்

சத்தத்தைவிட

அவள் மேனியின் வாசம்

சற்று அதிகமாகவே வீசுகிறது

நான் அழுதுகொண்டே வந்தேன்

என்னோடு உறங்க

அவள் சிரித்துக்கொண்டே

வந்திருப்பாள்.

பதினான்கு மணிநேரத்தில்

நடந்த கதை ஆயிரம் சொல்வாள்

நான் போகிறேன் அவளிடம்.

எங்கள் கல்லறை தோட்டம்

காதல் மழையில்

நனையப்போகிறது.

 

நன்றி 

நயினார்

.
மேலும்