"ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்துப் போலிருக்கே" -காஞ்சி பெரியவா

By News Room

எவ்வளவு புஷ்டியான சொற்கள்! எழுதினது பெரியவாதானே!' என்று அந்த இளம் தம்பதி நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?

விவாகரத்து ரத்தாகிவிட்ட அற்புத நிகழ்ச்சி

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு. புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம். தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

தஞ்சாவூர் மாவட்டம். பதினெட்டு கிராம வாத்திமர் குடும்பம். செல்வச் செழிப்பு. ஈசுவர ஆராதனை. பெரியவாளிடம் பக்தி.

ஜாதகம் பார்த்து, பெண் பார்த்து, விமர்சையாக விவாஹம் நடந்தேறியது மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கை.

எந்த கிரகம் இடம் பெயர்ந்ததோ?

சாதாரணமாகத் தோன்றிய கசப்பு. - விவாகரத்து வரை வந்துவிட்டது.

விசாரணைகள். ஆலோசனைகள், மறு ஆய்வுகள்.

ஊஹூம்.

நாளைக்குத் தீர்ப்பு.

பெண்ணும்,பெற்றோரும் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள்.

"காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ"....-பெரியவா.

சிறிது நேரத்துக்குப் பின்னர்,பையனும் பெற்றோரும் வந்தார்கள்.பெரியவருக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது.

 

"நாளைக்கு ஜட்ஜ்மெண்ட்..."

"காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ.."--பெரியவா.

கோயிலில் ஏராளமான கூட்டம். அத்துடன், பக்தி பூர்வமாகத் தரிசனம் செய்யும் நிலையில் யாருமில்லை. பெரியவா சொல்லிட்டா, அதனால் வந்தேன். ஸ்தானீகர் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத் தட்டைக் கொண்டு வந்தார்.

""சேர்ந்து வாங்கிக்கோங்கோ!--- ஸ்தானீகர். சேர்ந்து!

"நான் ...தனியாத்தான் வந்தேன்.." சட்டென்று தலை நிமிர்ந்தபோது, அவர்...அவள்...

"சேர்ந்து வாங்கிக்கோங்கோ.."--மறுபடியும்!

காமாக்ஷியின் ஆணையா? கோயிலிருந்து வெளியே வந்தபோது, இரண்டு குடும்பத்துப் பெரியவர்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்.....பேசிக் கொண்டார்கள்.

விவாகரத்து ரத்தாகி விட்டது. காமாக்ஷியல்லவா ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கிறாள்! பெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தார்கள்.இளம் தம்பதி.

"ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்துப் போலிருக்கே"---பெரியவா. எவ்வளவு புஷ்டியான சொற்கள்! 'எழுதினது பெரியவாதானே!' என்று அந்த இளம் தம்பதி நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?

.
மேலும்