"உனக்குக் கோடி கோடியாய்ப் பணமும் சாதாரணமான மனைவியும் வேண்டுமா, சுத்த தேகம் உள்ள தெய்வீகமான மனைவியும் கொடிய வறுமையும் வேண்டுமா?" என்று கேட்டால், "பளிச்..." சென்று பதில் சொல்லி விடலாம், "சுத்ததேகம் உள்ள தெய்வீகமான மனைவியும் கொடிய வறுமையும் பரவாயில்லை!" என்று.
ஏனெனில் சுத்ததேகம் வாய்க்கப்பெற்ற தெய்வீகமான மனைவி இருந்தால், எத்தனைக் கோடி வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம். காரணம், அவளைச் சுற்றி அத்தனை தேவதைகளும் ஏவல் செய்ய வேண்டிக் காவலாய் நிற்கும். ஆனால், எத்தனைக் கோடி சம்பாதித்தாலும் ஒரு தெய்வீகப் பெண்ணைச் சம்பாதிப்பது என்பது அரிதினும் அரிய செயல். அதனால்தான்,
"மனைவி அமைவதெல்லாம்... இறைவன் கொடுத்தவரம்..."
என்று கவியரசர் பாடினார்.....
"அவள் வெறுமனே என்னைப் பார்த்து அனுப்பி வைத்தால் பத்தாயிரம் சம்பாதிப்பேன். சிரிப்புடன் கண்ணசைத்து அனுப்பி வைத்தால் பல லட்சம் சம்பாதிப்பேன். கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தாலோ கோடி கோடியாய்ச் சம்பாதிப்பேன்....."
விளம்பர நிறுவனத்தின் மூலம் கோடி கோடியாய்ச் சம்பாதித்த ஓர் இளைஞர், தன் மனைவி பற்றிச் சொல்லியுள்ள குறிப்பு இது. பொருளியல், மதீப்பீட்டைக் கொண்டு அளந்தால் அவர்கள் ஏழைப் பெண்களாய் குடிசையில் வாழ்வார்கள். அவர்களிடம் பொதிந்திருக்கும் ஆற்றல் மதிப்பீட்டைக் கொண்டு அளந்தால் பல கோடிகள் சம்பாதிக்கத் தூண்டும். ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் தரக்கூடிய வல்லமையுள்ள தெய்வங்களாய்த் திகழ்வார்கள். அத்தகையோரை அடையாளம் காண்பதற்கே முதலில் நமக்கு அறிவும் விழிப்புணர்வும் வேண்டும்.
அதனால்தான் பெண்களை ஆற்றல் தெய்வங்களாய்ச் "சக்தி" என்று வழிபடும் முறை நம் மண்ணில் ஆதிகாலந் தொட்டு இருந்து வருகிறது.
பெண் என்பவள் நிலம்; ஆண் என்பவன் விதை. நிலமும் பக்குவமாய் இருக்க வேண்டும்; விதையும் பயனுள்ளதை உருவாக்கும் உயர்ந்த விதையாய் இருக்க வேண்டும். முள் செடிகளையோ, நச்சு மரங்களையோ உருவாக்கும் விதையாக இருந்து விடக்கூடாது. நெற்பயிர் 21 நாட்கள் நாற்றங்காலில் வளர்ந்து பக்குவம் பெறும். அதன்பின் அதைப் பறித்து வயலில் நட்டால் நெல் மணிகளை உருவாக்கும். அதேபோல் ஒரு பெண்ணும் 21 வயது வரை தன் பிறந்த வீட்டில் ஒரு நல்ல மனைவிக்குரிய பயிற்சியையும் பக்குவத்தையும் பெறவேண்டும். அப்போதுதான் இல்வாழ்க்கை என்ற வயலில் அவள் வளரும்போது நல்ல குடும்பத்தையும் அதன் வழி நல்ல சமுதாயத்தையும் உருவாக்கும் ஆற்றல் மையமாகத் திகழ முடியும்.
நாம் இந்த உலகில் வாழ்ந்ததற்கு அடையாளமாய் இரண்டு அம்சங்களை விட்டுச் செல்ல வேன்டும். ஒன்று, நல்ல சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். இரண்டு, நல்ல சந்ததியினரை விட்டுச் செல்ல வேண்டும். தற்போது சமுதாயத்தில் உள்ள திருமண ஏற்பாட்டு நடைமுறைகளில் அறிவுபூர்வமான அணுகுமுறை இல்லாத காரணத்தினால், அவதார புருஷர்கள் பிறக்க வேண்டிய தெய்வீகப் பெண்மணிகளில் வயிற்றில் அற்பப் பிறவிகள் பிறந்து சமுதாயத்தை நாறடிக்கின்றன. நெல் விளையும் அற்புதமான வயலில் முள் விளைவிக்க விரும்பலாமா?
இறைவனின் ஏற்பாடு இது அல்ல. இதை வானமும் பூமியும் அறியச் சொல்ல முடியும். அவரவர் தகுதி மற்றும் பக்குவத்திற்கேற்ற துணையுடன் இணைந்து ஆனந்தமடைய வேண்டிய வாழ்வியல் நிகழ்ச்சியை நம் சிற்றறிவால் தலைகீழாய் மாற்றிவிட்டோம். நாயும் பூனையும்போல் நேர் எதிர் இயல்புடையவர்களை ஒன்று சேர்த்து வைத்து, நாளும் சண்டையிடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். தனிப்பட்ட முறையில் நாய் நல்ல விலங்கு. அதற்கென்று சில நல்ல இயல்புகளை உடையது. அதேபோல் பூனையும் நல்ல விலங்கு. அதற்கென்று சில நல்ல இயல்புகளை உடையது. ஆனால் தனித்தனியாக இருக்கும்வரை சிக்கலின்றி வாழும். இவைகளைச் சேர்த்து வைத்துப் பார்த்தால் தொலைந்தது. ஒன்றின் இயல்பு மற்றொன்றுடன் இணைந்து போகாததால் சண்டை தொடங்கி விடுகிறது.
நாய்க்கு மகிழ்ச்சி வந்தால் காதைப் பின்னோக்கி மடக்கித் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும். பூனைக்குக் கோபம் வந்தால் காதைப் பின்னோக்கி மடக்கிப் பாய்வதற்குத் தயாராகும்.
எப்படி ஒத்துப் போகும்?
எவ்வளவு நேரம் கலக்கினாலும் எண்ணெயும் தண்ணீரும் இரண்டறக் கலக்காதது போல், எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அவர்கள் இரண்டறக் கலப்பதில்லை.
இரு மனம் கலந்தால்தானே திருமணம்! கலக்கவிட்டால்... அது வெறுமணம்தானே!
இறைவனின் திருமண ஏற்பாட்டை நினைவுபடுத்த வந்த இறைத்தூதர் இயேசுநாதர், இதுபற்றிக் குறிப்பிடும்போது சொல்லிய வசனம் இது.....
"இறைவன் இணைத்து வைத்ததை மனிதன் பிரிக்காமல் இருக்கக் கடவது"
இன்றும் திருமணத்தின்போது இந்த வசனத்தைத்தான் தேவாலயத்தில் கூறுவதைக் கேட்கலாம். அவர் சொல்லாமல் விட்ட வசனம் ஒன்றும் உண்டு. அது என்ன தெரியுமா?
"இறைவன் பிரித்து வைத்ததை மனிதன் சேர்க்காமல் இருக்கக் கடவது"
என்பதாகும்.....
இப்போது அந்தக் கோளாறுதான் இங்கு நடந்து கொண்டுள்ளது. இறைவன் பிரித்து வைத்த ஆன்மாக்களை மனிதன் சேர்த்து வைத்து, சேவல் சண்டை, கிடா முட்டுச் சண்டைகளை வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
காமம் எனப்படும் "Sex" நம் வாழ்வுக்குரிய அடிப்படை ஆற்றல் உடலளவில் அது காமமாக இருக்கிறது. அதன் வழியாக உடலுக்குக் கிடைப்பது சுவை. அதே ஆற்றல் மனம் என்ற இரண்டாம் அடுக்கைத் தீண்டும் போது அது உள்ளத்தைத் தூண்டி உவகையாகப் பொங்குகின்றது. அப்போது மனத்தின் கற்பனையைத் தூண்டிக் கவிதையாகவும், கதையாகவும், பாட்டாகவும், நடிப்பாகவும், நகைச்சுவையாகவும் பல்வேறு படைப்புகளாகப் பொங்குகின்றது. அப்போது உடல் உறவு என்பது மறந்துவிடும். உடல்கள் தீண்டாமலேயே தீண்டியது போன்ற சுவையைப் படிப்போர் அனைவருக்கும் அது வழங்குகின்றது.
அதே காமம் இன்னும் உயரமாகப் போய் உயிரைத் தீண்டிவிட்டால் கிடைக்கும் இன்பமே பரமானந்தம் என்று கூறப்படும் பேரின்பம். இங்கு உடலும் மறந்துவிடும் மனமும் மறைந்து விடும்; வெறும் உணர்வு மட்டுமே பொங்கித் ததும்பியபடி இருக்கும். அந்த உணர்வு அதிகமாக அதிகமாக ஆண்- பெண் இருவர் உடலைச் சுற்றியும் ஒரு மின் அதிர்வு உண்டாகி அது உயிரிற்குள் பொதிந்து "Charge" ஆகத்தொடங்கும்.
உயரத்தில் உயிர்கள் உரசுவதால் ஏற்படும் மின் அதிர்வைக் கீழே இன்ப உறுப்புகளுக்கு இறக்கி உடல் உறவாக மாற்றிவிட்டால், உறவு கொள்ளும் இரண்டு பேருக்கு மட்டும் அளவற்ற இன்பத்தை வழங்கி உயிருக்குப் புத்துணர்ச்சி அளித்து உயிரைத் தளிர்க்க வைக்கும். இந்த நிலையைத் திருவள்ளுவப் பெருந்தகை குறிப்பிடும்போது,
"உறுதோறு(ம்) உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்"
- திருக்குறள்:1106
என்பார்......
"இவளை ஒவ்வொரு முறை தழுவும்போதும் என் உயிர், சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்றுத் தளிர்ப்பதால், இவள் உடல் என்ன அமிழ்தத்தால் ஆகியதோ! என்று நான் வியந்து போகிறேன்...." என்று காதலன் தன் காதலியைப் பற்றிக் கூறுவதாக இந்தக் குறட்பா அமைக்கப் பெற்றுள்ளது.
ஓர் ஆடவனும் ஒரு விலைமகளும் கொள்ளும் உடலுறவில் இந்தப் புத்துணர்ச்சி ஏற்படுவதில்லை. காரணம், தன்னிடமிருக்கும் பணத்தையும் தன் உடலால் சேகரிக்கப் பெற்ற அற்புதமான உயிராற்றலையும் வெளியேற்றியது தவிர, விலைமகளிடமிருந்து திரும்பப் பெற்றதாக எதுவும் இராது. எனவே உயிர்ச்சுழற்சி என்னும் "Cycling effect" இருவருக்குமிடையே நிகழாது. எனவே உறவு முடிந்ததும் எதையோ இழந்த உணர்வும் சோர்வுமே ஏற்படும். விலைமாதர்களுடன் மட்டுமல்ல. மனைவியுடனாய் இருந்தாலும் சரி, புணர்ச்சி முடிந்ததும் களைப்படைந்து சோர்வுடன் திரும்பிப் படுத்துக் கொள்கிறோம் என்றாலே அங்கே உயிர்ப்புணர்ச்சி ஏற்படவில்லை. மின் அதிர்வுச்சுழற்சி "Cycling effect" உருவாக்கவில்லை என்பதுதான் முடிவு.
ஐந்தறிவுள்ள விலங்குகள் வரை உடலுறவு என்பது இயல்பான வாழ்க்கை நிகழ்ச்சி. "Natural Instinct" பசித்தால் உணவு, கழிவு உற்பத்தியானால் வெளியேற்றம் என்பதுபோல், காம உணர்ச்சி வந்தால் எதிர்ப்பால் விலங்கிடம் வெளியேற்றம் என்பது போன்ற சாதாரணமான செயல். நாத்திகர்கள் மற்றும் பொருள் முதல்வாதிகள் மனிதனுடைய காமத்திற்கும் இதேதான் விதி என்கிறார்கள். ஆனால் மனித இனத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை. இங்கு எல்லாவற்றிலும் "தரம்" அதாவது "Quality" உண்டு. உண்ணும் உணவு முறையில் தரம்; உடுத்தும் உடைகளில் தரம்; மனித உறவு முறைகளில் தரம்; இப்படி எல்லாவற்றிலும் மனித வர்க்கத்தின் செயல்கள் மட்டும் தரம் வாய்ந்ததாக உள்ளது. பின்பு காமத்தில் மட்டும் எப்படித் தரம் "Quality" இல்லாமல் போகும்?
மனிதர்களைப் பொறுத்தவரை தாம்பத்திய உறவு என்பது இயற்கையான நிகழ்ச்சியல்ல. இறைவனை உணர்த்தும் பேரின்ப நிகழ்வு. (Natural Bliss) ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. அது உணர்த்தப்படவில்லை. வள்ளுவப் பெருந்தகை போன்ற மகான்கள் அதை உணர்த்தியுள்ளனர்.
விலங்குகளைப் பொறுத்தவரை அதன் காம உணர்ச்சி மையம் அவற்றின் இன்ப உறுப்புகளில் உள்ளது. மனிதர்களைப் பொறுத்தவரை அந்த மையம் பேரின்ப மையமான தலை உச்சியில் உள்ளது.
அதனால்தான் பெரும்பாலும் பலருக்கு முதலிரவு நாளில் கீழே இன்ப உறுப்பு புணர்ச்சிக்குத் தயாராகாது. உடனே பயந்து விடுவார்கள். ஆற்றல் குறைவு அதாவது "Impotence" என்று கருதி, "வயாகரா" மாத்திரைகளைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். அது தவறு. உடலுறவை மறந்து விடுங்கள்; அருள் நிலையில் உச்சியில் ஒளிரும் அந்த ஆற்றல் அன்பாக நெற்றிக்கு இறங்கட்டும். ஆசையாக நெஞ்சுக்கு இறங்கட்டும்; அதன்பின் காமமாக இன்ப உறுப்பைக் கிளப்பட்டும். அதுவரை பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.
அதனால்தான், "கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள"
- திருக்குறள்:1101
என்பார் திருவள்ளுவர்.....
அணு அணுவாகப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள். அறிவுபூர்வமான செய்திகளைப் பரிமாறிக்கொண்டு அவ்வப்போது ஒருவரை ஒருவர் வர்ணித்துப் பேசியும் ஆனந்தமடையுங்கள். அமுதமாய்ச் சுரக்கும் எச்சில் ருசியைப் பருகி இன்பமடையுங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் கீழே வரலாம். தேவையில்லையெனில் வேண்டாம்.
அப்படி உடலுறவைத் தவிர்த்து அந்த மின்காந்தச் சுழற்சியை உச்சியிலேயே நிறுத்திவிட்டால், உயிருக்கு ஊட்டம் "Charge" மிகுதியாகும். அப்போது நம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் காந்த ஆற்றல் உள்ளதாக மாறும். அந்த நிலையில் நாம் ஓர் ஆற்றல் மையமாக, இறை மையமாக மாறுவோம். "Electricity Power House" போல எல்லோருக்கும் ஆற்றலை வாரி வழங்கும் வள்ளலாக மாறுவோம். இறைவன் அத்தகைய வள்ளல். அதனால்தான் திருமூலர் இறைவனைப் பற்றிப் பாடும்போது,
"அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை..."
என்று பாடுவார்......
அந்த இறைநிலையை அடைந்த வடலூர் இராமலிங்க அடிகளை இறைப்பெயரால் "வள்ளலார்" என்று வழங்குகிறோம்.
அத்தகையோர் நோயாளிகளைத் தீண்டினால் நோய் நீங்கும். மனச்சுமையுடன் வருபவர்களை ஆசீர்வதித்தால் மனபாரம் குறையும். அதனால்தான், "வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களே, என்னிடம் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருவேன்!" என்று மக்களிடம் ஆறுதல் கூறினார் இயேசுநாதர். அத்துடன் பார்க்கும் நோயாளிகள் அனைவரையும் தன் தீண்டலால் நலமடைய வைத்தார்.
இவர்களெல்லாம் கீழேயே இறங்காதவர்கள்; எனவே "Mega Power House" ஆக இருந்தார்கள். இல்லறத்தார் நிலை அவ்வளவு வைராக்கியமானதாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. அவ்வப்போது கீழே இறங்கிக் கொள்ளலாம். ஆனால் செயல் கீழே நடந்தாலும் சிந்தனை உயரே இருக்க வேண்டும்.
சுத்த தேகம் பெறுவதற்குரிய நமது சித்தர்கள் சொன்ன உடல்நலக் குறிப்புகளைக் இங்கே தருகிறேன். முறையாகப் பின்பற்றி அழகும் இளமையும் ஆரோக்கியமும் நிறைந்த தேகத்தை முதலில் பெறுங்கள்.