ஆயிரம் பேரைக் கொன்றவன் என்றொரு பழமொழி சொல்வார்களே அதுபோல ஐந்நூறு வண்டிகளை ஆக்ஸிடெண்ட் செய்த, ஆனால் ஆங்கிலம் தெரிந்த, கொஞ்சம் இலக்கிய அறிவுள்ள காரோட்டி ஒருவன் ஒரு பண்ணையாரிடம் டிரைவராக வர அவனது பார்வை வழியே சுவைபட கதையின் இறுதி வார்த்தை வரையிலும் சிறப்பாக கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர் எஸ் .ஷங்கர நாராயணன்.
ஐயம் பெருமாளும் மணியும் பிழைப்புதேடி சென்னை வந்தவர்கள். மணி காயலங்கடை வைத்து நிறைய மணி மணியாய் சம்பாதிக்கிறான். ஐயம் பெருமாள், காயலாங் கடை வளாகத்தில் ‘இது நம்ம ஐயம் பெருமாள் எடுத்த வண்டி’ என்ற அளவுக்கு! பிரபலமான டிரைவராகி ஒவ்வொரு முறையும் வேலை இழந்தவனாகிறான்.
கைக்குழந்தையுடன் இருக்கும் மனைவி பத்மினியிடமிருந்து நானும் குழந்தையும் கஷ்டப்படுகிறோம் பணம் அனுப்பவும் என கடிதம் வருகிறது. ஐயம்பெருமாள் money க்காக மணியைத் தேடி வர அவன் அப்போதுதான் டீ குடித்து முடிக்க டீ போச்சே என வருத்தப்படுகிறான். ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்சந்திரன் என்பது போல பன்னீர் புகையிலை பாண்டித்துரை என்பவர் ஊர்காரன் மணியைப் பார்க்க வருகிறார். அப்போது அங்கு இருக்கும் ஐயம்பெருமாள் அவரின் பெயரை மனதிற்குள் சுருக்கி P.P.P என்று சொல்லிக் கொள்கிறான். ஐயம் பெருமாளை நாமும் சுருக்கி ஐயம், என்றோ பெருமாள் என்றோ இடத்திற்கு ஏற்ப சொல்வோமே.
மணி தன் பேச்சு சாமார்த்தியத்தால் காயலங்கடை கார் ஒன்றை p.p.p யிடம் தள்ளிவிட ‘நீயே காரை எடுத்துக்கொண்டுவா, என p.p.p சொல்ல நிரந்தர டிரைவர் வேலை என்று உறுதியாகிட பெருமாளுக்கு லட்டு கிடைத்த சந்தோஷமாய் ,வாயில் பாட்டோடு ,ஊருக்கு காரோடு வருகிறான். எஜமானியம்மா பாகீஸ்வரியும் மற்றவர்களும் ஆவலுடன் காத்திருந்து காருக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். எந்த நிகழ்வுக்குச் செல்வதானாலும் கார் சவாரிதான். அதனால் p.p.p யின் வேலையாள் வில்வண்டி ஓட்டிக்கொண்டிருந்த வேலுச்சாமிக்கு தனது உரிமை பறிபோனதாக பெருமாள் மீது எரிச்சல் வருகிறது. ஊர் திருவிழாவுக்கு வரும் நடனக்காராி மனோன்மணியின் அழகு, அவள் ஆடும் நடனம், அவள் சொல்லும் அறிவார்ந்த கவிதை என ஊரே சொல்(ஜொள்)கிறது .
p.p.p க்கு சாரதியாக, சரக்கு வாங்க, கூட சேர்ந்து சாப்பிட என்று ஐயம் அவரோடு ஐக்கியமாகி விடுகிறான். அதுபோன்ற ஒருநாளில் தன் காதலியைப்பற்றி சொல்லி தன் மனைவிக்கு தன்னிடம் அதுபோல அன்பில்லை என்று உண்மையை உளறிவிட்டு p.p.p மயக்கமாகிறார். வைக்க படப்பில் மீதி சரக்கை ஔித்துவைக்க வரும் பெருமாள் அங்கு ஔிந்து சல்லாபிக்கும் ஜோடியைப் பார்த்து அதிர்ந்து பணக்கார வீட்டில் இதெல்லாம் சகஜம் என நினைக்கிறான். ஒருநாள் காலையில் பெருமாள் கிளம்பும் போதே குழந்தைக்கு ஜுரம் டாக்டரிடம் செல்ல வேண்டும் பணம் வாங்கி வா என்கிறாள் பத்மினி. p.p.p யோ மனோன்மனி வீட்டுக்குச் செல்ல தயாரான நிலையில் இருக்க அவரிடம் பணம் கேட்க முடியாதவனாகிறான். திரும்ப வீட்டுக்கு வரமுடியாத அளவுக்கு மழை பெய்ய, குழந்தை உடம்பு சரியில்லாததை நினைத்து கவலையோடும், முதலாளியால் வேலுச்சாமிக்கு நிகழ்ந்ததை நினைத்து, மழைக்ககென மனோன்மனி வீட்டிற்குள் ஒதுங்கவும் ஐயம் ஐயப்படுகிறான்.
முன்பே அறிமுகமான மானோன்மனி வீட்டு வேலைக்காரப் பெண் ‘மழையில் ஏன் நனைகிறாய் உள்ளே வா’ என்கிறாள். அதைத் தொடர்ந்து வரும் உரையாடல்கள் தான் கதையின் முத்தாய்ப்பாய் முடிகிறது. முத்த யுத்தம் ஐயம்பெருமாளுக்கும் அவனின் மனைவி பத்மினிக்கான முத்த யுத்தம் காதலால் நிகழ்வது. பாகீஸ்வரி வேலுச்சாமி முத்த யுத்தம் கள்ளத்தனமானது.மனோன்மனி பாண்டித்துரையின் முத்த யுத்தம் காசுக்கானது.
இந்த மூன்றையும் தாண்டி கதையின் கடைசியில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் கூட இல்லாத பாத்திரமும் அதன் வார்த்தைகளுமே கதையின் சாரம் இதை மனோன்மனி ,பாகீஸ்வரி, ஐயம் என்று ஒவ்வொருவர் வழியே ஆசிரியர் ஆங்காங்கு சுட்டியிருந்தாலும் பெயரில்லா பாத்திரமும் அதன் வார்த்தைகளுமே மனதில் நிற்கிறது நல்லகதை.
ரசித்தது:- புத்தகத்தில் கதையின் பக்கங்கள் 230. ரசித்தது என்று குறித்துவைத்தது 30 இடங்கள். என்ன செய்ய என்று யோசித்ததில் சிறு வயதில் வார்த்தை விளையாட்டுக்காக கண்ணை மூடிக் கொண்டு ஒருபக்கத்தை எடுத்து அதில் ஒரு வார்த்தையைச் சொல்வோம்.அது போல நான் கண்ணை மூடிக்கொண்டு எடுத்த பக்கம்(66)இதுதான்:- அடடா,நிலா வெளிச்சத்தில் காட்டுக்குள் நடமாடுகிறதே கொள்ளையான அனுபவம். போனாப் போகட்டும் என்று அம்மணிகள் குழந்தையை வெளியே விளையாட அனுமதித்தாற் போல ஔிகசியும் கானகம் பற்றிய ஆசரியரின் வர்ணனை.
நிலா -அம்மாவாக மரங்களிடையே வரும் சின்ன சின்ன வெளிச்சம் – குழந்தைகளாக நல்ல அழகான உவமை.ஒரு சோறு பதம்!!!
முத்தயுத்தம் இந்த கதையில் காட்டை, அதன் ஆச்சரியங்களை, அழகை ,அதன் ஆபத்தை என ரசிக்க ரசிக்க சொல்லி ஆசிரியர் சொல்வது போல இரவில் நிலவொளியில் காட்டின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று நமக்கும் ஆவலை ஏற்படுத்தும் ஆசிரியர் ஷங்கர நாராயணனுக்கு பாரட்டுக்கள்.