பழைமையான ஆலயங்களில் சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி அமைந்திருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.அறுபத்து மூன்று சீடர்களோடு ஒரே இடத்தில் ஐக்கியமான தலமாக விளங்குவது, மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயமாகும்.
இந்த அபூர்வ ஆலயத்தினை அறியும் முன்பாக அதன் நாயகரும், குருவுமான சீகாழி சிற்றம்பலநாடிகளைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள்.
தோற்றம்
சோழ வளநாட்டில் அமைந்துள்ள சீர்காழியில், சைவ வேளாண் குடியில் தோன்றியவர் சீகாழி சிற்றம்பல நாடிகள். ஒழிவில் ஒடுக்கம் செய்தருளிய காழிக் கண்ணுடைய வள்ளல் இவரது உடன் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு ஆகும்.
சிற்றம்பல நாடிகள் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனைப் போற்றி வழிபட்டு, அருந்தவம் புரிந்தார். செந்தில் ஆண்டவனும் இவரது தவத்திற்கு இரங்கி, திருவருள் புரிந்து மெய்ஞானம் அளித்து அருளினார்.
சிற்றம்பல நாடிகள் முருகனின் திருவருளைப் பெற்ற பின்பு மயிலாடுதுறையில் ஒரு மடாலயம் ஒன்றை அமைத்து அங்கேயே தங்கி தவமியற்றினார். தருமபுரம் ஆதீனத்து குருமுதல்வர் திருஞானசம்பந்தர் குருபரம்பரை முன்னோடிகளில் முதன்மையானவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர்.
கசக்கும் நெய்
ஒரு சமயம், சிற்றம்பல நாடிகள் தனது சீடர்களுடன் திருமடத்தில் உணவருந்துவதற்காக அமர்ந்தார். அவர்களுக்கு அன்னமும் பருப்பும் பரிமாறப்பட்டன. பரிமாறுபவர் தவறுதலாக நெய்க்குப் பதிலாக வேப்ப எண்ணெயை எடுத்துப் பரிமாறினார்.
சிற்றம்பல நாடிகளும் அவரது சீடர்களும் எந்தவித வேறுபாடுமின்றி உணவருந்தினர்.ஆனால், கண்ணப்பர் என்ற ஒரு சீடர் மட்டும், அதன் கசப்புத் தன்மையை உணர்ந்தார். உடனே அதனை வெளிப்படுத்தினார். இதைக் கேட்ட சிற்றம்பல நாடிகள் நமது திருக்கூட்டத்தில் இன்னமும் பக்குவம் அடையாத சீடரும் இருக்கின்றார் போலும் என்று கூறினார்.
உடனே தனது தவறை உணர்ந்த அந்தச் சீடர், திருக்கூட்டத்தை விட்டு வெளியேறினார்.தனது குருநாதருடைய திருவடியை தியானித்தவாறே வடக்கு நோக்கிச் சென்று, தவமியற்றி,வாழ்ந்து வந்தார். சமாதி நிலை அடைய விருப்பம்
இந்நிலையில்,சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். தனது சீடர்களிடம் தமது விருப்பத்தை எடுத்துக் கூறினார்.சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்து, அம்மன்னனிடம், “யாம் திருக் கூட்டத்தோடு சித்திரைத் திங்கள் திருவோண நட்சத்திர நாளில் ஜீவசமாதி எனும் நிஷ்டையில் சமாதி கூட விரும்புகின்றோம். அதற்குத் தக்க இடம் அமைத்து தருக”, என்று ஆணையிட்டார்.
இதைக் கேட்ட மன்னன், இன்னும் பலகாலம் தாங்கள் இப்புவியில் வாழ வேண்டும் என வேண்டி நின்றான். ஆனால், சிற்றம்பல நாடிகள், தமது முடிவில் தீர்க்கமாக இருந்தார்.இதனால் சோழ மன்னன் மறுப்பு ஏதும் கூறாமல், சிற்றம்பல நாடிகளின் விருப்பப்படியே நடந்தான்.
இதற்கு உரிய இடமாக மயிலாடுதுறைக்கு மேற்கேயுள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில், அறுபத்து மூன்று சமாதிக் கோயில்கள் அமைத்து,அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான்.அதே போல இச்செய்தியை நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப் பட்டது.
இந்த அதிசயத்தைக் காண அன்பர்கள் பலரும் அங்கே கூடி நின்றனர்.தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள் தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார்.
அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில்,மூன்று திருவெண்பாக்கள் பாடினார்.தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி,சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர்.
சீடர் கண்ணப்பர்
அப்போது வடக்கு நோக்கிச் சென்ற கண்ணப்பர் என்ற சீடர், இச்செய்தி அறிந்து அங்கு ஓடோடி வந்தார். சமாதிகள் அனைத்தையும் வணங்கினார். முடிவில், தனது குருநாதர் சிற்றம்பல நாடிகள் சமாதி முன்பு வணங்கி, “ ஆண்ட குருசிற்றம் பலவா அடியேற்கா மீண்டும் எழுந்தருள வேண்டாவோ-நீண்டவனும் ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில் பூரணமா வையாத போது ”, என்று மனமுருகிப் பாடினார்.
அப்போது சிற்றம்பல நாடிகளின் சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்தது. தம்மை வணங்கி நின்ற தன் சீடர் கண்ணப்பரைத் தம் இருகைகளாலும் தழுவி, தம் மடியில் ஒன்றுபடுத்திக் கொண்டு, மீண்டும் சமாதியில் அமர்ந்தார். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோயிலாக அருள் வழங்கி வருகின்றது.
தரிசன நேரம் காலை 7.00 மணி முதல் நண்பகல்12.00 மணி வரையிலும்,மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம். அமைவிடம் நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை இரயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை இரயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.
நம்பிக்கையோடு தன் தலம் நாடி வருவோருக்கு வினைகள் அனைத்தையும் நீக்கி அன்று போல் இன்றும் அருள் புரிந்து வருகின்றார். அதேபோல, முறையாக தரிசித்து வணங்கும் எல்லோருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகின்றார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.