திருக்குறள் கதைகள் - குறள் 10

By News Room

ஒரு இளைஞன் ஒரு ஞானியிடம் கேட்டான் "மனிதர்களுக்குக் கடவுளின் துணை எதற்கு? கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா?"

 

ஞானி கேட்டார் "மோட்டார் சைக்கிள் ஒட்டத் தெரியுமா உனக்கு?"

 

"ஓ! பிரமாதமாக ஓட்டுவேன்."

 

"ஹெல்மெட் அணிந்து கொள்வாயா?"

 

"ஆமாம். அது கட்டாயமாயிற்றே?"

 

"கட்டாயம் இல்லாவிட்டால் அணிய மாட்டாயா?"

 

"இல்லை. பாதுகாப்புக்கு அது அவசியம்."

 

"காரில் போகும்போது ஏன் சீட் பெல்ட் அணிந்து கொள்கிறோம்?"

 

"அதுவும் பாதுகாப்புக்காகத் தான். விபத்து நடந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறதே!"

 

"மோட்டார் சைக்கிளில் போனால் ஹெல்மெட். காரில் போனால் சீட் பெல்ட். விமானத்திலும் சீட் பெல்ட், ஆக்ஸிஜன் மாஸ்க், பாரசூட் போன்ற பாதுகாப்பு சாதனங்கள், கப்பலில் போனால் லைஃப் போட், நீந்துவதானால் மிதவை, லைஃப் ஜாக்கெட் போன்ற சாதனங்கள் என்று வாழ்க்கையில் நாம் போகும் எல்லாப் பயணங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோமே, வாழ்க்கை என்ற இந்த நீண்ட பயணத்துக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோம்?"

 

இளைஞன் பதில் சொல்லாமல் ஞானியின் விளக்கத்துக்குக் காத்திருந்தான்.

 

"இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு கடலில் நீந்துவது போல். இந்தப் பிறவியை நாம் கடந்து போவது ஒரு பெருங்கடலை நீந்திக் கடப்பது போலத்தான். இந்தக் கடலை நாம் நீந்திக் கடப்பதுதான் வாழ்க்கை. இந்த நீண்ட அபாயம் நிறைந்த நீச்சல் பயணத்தில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் நாட வேண்டியது இறைவனின் பாதுகாப்பைத்தான். இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்கு இந்தப் பிறவிக் கடலை நீந்திச் செல்வது எளிதாக இருக்கும். மற்றவர்களுக்கு அது கடினமாகத்தான் இருக்கும்."

 

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேராதார்.

 

பொருள்:

இறைவனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவர்களால் மட்டுமே பிறவி என்ற இந்தப் பெருங்கடலை நீந்த முடியும். மற்றவர்களால் நீந்த முடியாது.

.
மேலும்