வறுமையிலும் நிம்மதி - காஞ்சி மகா பெரியவா

By News Room

மஹாபெரியவரின் அருள் இருந்தால் வறுமையிலும் நிம்மதி கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு.

காஞ்சி மஹாபெரயவரின் பக்தர்களில் ஒருவர் துளசிராமன். வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்ட போது சுவாமிகளிடம் பரிகாரம் கேட்டார். 'தினமும் ஸ்ரீராமஜயம் எழுது' என வழிகாட்ட அதை பின்பற்றினார். இரண்டு மாதத்திற்குள் வேலை கிடைத்தது. அதன் பின் தன் சகோதரிகள் நால்வருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடத்தியதால் கடன் தொல்லைக்கு ஆளானார்.

 'உன் திருமணத்தின் போது வரதட்சணை பெற்று கடனை அடைக்கலாம்' என துளசிராமனிடம் யோசனை கூறினர் பெற்றோர்.  காஞ்சி மஹாபெரியவரிடம் இது குறித்து கேட்ட போது, 'வரதட்சணை வாங்க மாட்டோம்' என இளைஞர்கள் சபதம் ஏற்க வேண்டும்.

மீறி பெற்றோர் வற்புறுத்தினால் 'திருமணம் வேண்டாம்' என்று சொல்லவும் தயங்கக் கூடாது. முன்னோர்கள் திருமணத்தை 'ஆயிரம் காலத்துப்பயிர்' என்பார்கள். விட்டுக்கொடுத்தல், ஒழுக்கம் போன்ற நற்பண்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படக் கூடாது என அறிவுறுத்தினார். அதன்படி துளசிராமனும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தார்.

மழையின் போது துளசி ராமனின் வீட்டில் தண்ணீர் ஒழுகும். கூரை மாற்ற பணம் இல்லை. இந்நிலையில் ஒரு பவுர்ணமியன்று வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தார். அப்போது ''மஹாபெரியவா.. இந்த வீட்டை மராமத்து செய்ய அருள்புரிய வேண்டும்'' என எண்ணியபடி துாங்கி விட்டார். 'வீடு கட்ட ஆரம்பிச்சாச்சா' என அவரது கனவில் தோன்றி ஆசி வழங்கினார் மஹாபெரியவர். மறுநாளே நண்பர் சிலர் வட்டி இன்றி கடன் தர ஒரே மாதத்திற்குள் ஓட்டுவீடாக மாற்றினார்.

அடுத்த பவுர்ணமியன்று கனவில், 'வீடு கட்டி முடிச்சாச்சா' எனக் கேட்டார் மஹாபெரியவர். 'இந்து சேகர சிவப்ரியா' என வீட்டுக்கு பெயரிட்டார்.

 மஹாபெரியவரின் அருள் இருந்தால் வறுமையிலும் நிம்மதி கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணம்.

நன்றி - தினமலர் ஜூன் 2022

.
மேலும்