அது அந்த வயசு - சிறுகதை

By News Room

அன்னிக்கி ராசாங்கம் பய ஒருமாதிரி முளிச்சிக்கிட்டேஇருந்தான். நானும்” ஏன் ஒருமாதிரியா இருக்க?”ன்னு கேட்டேன். “யாருக்கும் கெடைக்காத அபூர்வப்பொருள் ஒண்ணுகெடைச்சிருக்கு பள்ளிக்கொடத்துக்குள்ள வெளியஎடுக்க முடியாது”ன்னான் . “ டேய் என்னடாஅது சொல்றான்னாஅது ஒரு அதிசயம் சாப்பாட்டு நேரத்துல காமிக்கிறேன் இப்போ ஸ்கூல் பெல்லடிச்சிடுச்சு”ன்னான்.

அதுக்குள்ள விளாயாட்டுசார் விசிலடிச்சார். எல்லாரும் கெளம்பி வரிசையா போய் பிரேயருக்குநின்னுட்டோம்  பிரேயர் நடக்கும்போது அவன் டவுசர் பையத்தொட்டுத் தொட்டுப்பாத்துகிட்டான். என்னமோ வில்லங்கமா வைச்சிருக்கான்னு தோணுச்சு. ஆனா பயபுள்ள மர்மத்தை சொல்லித் தொலைய மாட்டீங்குறானே....வில்லனாட்டம். அதைதெரிஞ்சிக்கிற ஆவல் அதிகமாயிட்டே போச்சு. பிரேயர் முடிஞ்சி வகுப்புக்குத்திரும்பப்போகுறப்ப கெஞ்சினேன். மசிய மாட்டேன்னுட்டான். ஆனா டவுசர் பையதொட்டுப் பாக்குறத நிறுத்தல......

பிரேயர் முடிஞ்சு வகுப்புக்குள்ள போனதும் டேய் காமிடான்னேன். அப்பயும் அவன் வேணாம் யாராவது  பார்த்தா வம்பாயிடும்னான், என்னான்னாவது சொல்லித்தொலையேண்டா தெரிஞ்சிக்காம தல வெடிக்குதுன்னேன். ”டேய் சொல்லுடா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்”னு கெஞ்சினேன் .   “முதல் பீரியடுக்கு அப்புறம் ரெண்டாவது பீரியடு விளையாட்டுதான்    அதுல காமிக்கிறேன்”னு சொன்னான் முதல் பீரியடில்ல தமிழம்மா  சொன்னதுஎதுவும்மண்டையிலஏறல. .என்னடா ஒரேசிந்தனைன்னு கேட்டாங்கஒண்ணுமில்லைன்னு மழுப்பினேன், அவங்க வகுப்பில கவனமில்ல. எப்புடித்தான் குப்பை கொட்டப்போறீங்களோன்னு சலிச்சிக்கிட்டாங்க....நான் மெளணம் காத்தேன்.

ஒருவழியா முதல்பீரியடு முடிஞ்சது  ராசாங்கம்  ரகசியமா டவுசர்பைக்குள்ள இருந்து ஒரு தீப்பெட்டியஎடுத்தான் . அதைதொறந்த தங்க நிறத்துல அழகாஒரு பொன்வண்டு. மீசைமாதிரி கொம்ப நீட்டிக்கிட்டு தக தகன்னு மின்னுச்சு.  கொஞ்சம் கொடிக்கா இலை போட்டுருந்தான் அது திங்கிறதுக்கு

நான்   சும்மா இருக்காம “அய் ரொம்ப அழகாருக்குடா”ன்னு கொஞ்சம் சத்தமா சொல்லிப்புட்டேன். அங்கதான் வென வெளயாடிருச்சு. பின்னாடி இருந்த அழகர் அதைப்பாத்துப்புட்டான்அவனுக்கு எனக்கும் எப்பவுமே ஆகாது. போட்டுக்குடுக்குறதுல எட்டப்பன் பரம்பரை அவன் . அவன் கிட்ட ராசாங்கம் கெஞ்சினான்.

“ போட்டுக்குடுத்துறாதடா. நான் ஒனக்கு ஒன்னு புடிச்சாந்து தாறேன்”னு பேரம் பேசினான். ஆனா அழகர் மசியிறதா இல்ல. ஏன்னா அவன் கோவம் என் மேல. அத மாட்டிவிட்டுப் பழிவாங்குறதுன்னு முடிவெடுத்துட்டான்.

மூனாவது பீரியடு விளையாட்டு  பீரியடு. அப்ப  விளையாட்டு வாத்தியார்கிட்ட  நேரபோய் சொன்னான். “சார்  ராசாங்கம் டவுசர் பையல என்னத்தையோ வைச்சிக்கிட்டு வகுப்புல வெளையாட்டு காட்டுறான். பயலுக பாடத்தக் கவனிக்காம வேடிக்கபாக்க வைக்கிறான். இது தப்பில்லையாசார்?”ன்னு ஒண்ணும் தெரியாததுபோல பேசி மாட்டிவிட்டுட்டான். வெளையாட்டு வாத்தியார் ராசாங்கத்தை கூப்புட்டு

“ என்னாடா இவன் சொல்றது உண்மையாடா?”ன்னு கேட்டார். அவன் திரு திருன்னு முளிச்சான் அதுக்குள்ள அவர் விசில் கயிறால முதுகுல ஒரு போடு போட்டு வெளிய எடுடா அதன்னாரு. அவன் பயந்துக்கிட்டே வெளிய எடுத்தான். அவர் வாங்கிப்பாத்துட்டு தீப்பெட்டியதொறந்து பறக்க விட்டாரு.

“இது மாதிரி உயிர்களை கொடுமைப்படுத்தக்கூடாது சுதந்திரமா இருக்குறதை அடைச்சி வைக்கிறது தப்புன்னாரு. அதுக்குத்தண்டனையா 50 பைத்கஸ்(உக்கி)போடு”ன்னாரு. பாவம்  ராசாங்கத்துக்கு 50 தடவ ஒக்காந்து எந்திரிக்கிறதண்டனை கிடைச்சது . கஸ்ட்டப்பட்டு போட்டான். அதுக்கப்புறம் அவனால நடக்கமுடியல.

“என்னால்தானடா” ந்னு அழுதிட்டேன்  ராசாங்கம் “பரவாயில்லடா இது அழகர் பார்த்தவேலை அவனத்தனியாக் கவனிப்போம் ”ன்னு சொன்னான். எனக்கு அழகர் மேல ஆத்திரமா வந்துச்சு ஆனா என்ன பண்ணுறது. எதுனாலும் இன்னிக்கி செஞ்சா தப்பாயிடும் . வெளையாட்டு வாத்தியார்கிட்ட திரும்ப கம்ப்ளெயிண்ட் பண்ணுவான். அதுனால விட்டுட்டேன்.

 மறுநாளு  ராசாங்கம்  பள்ளிக்கொடத்துக்கு வரல   காய்ச்சலாம் பனிஸ்மெண்ட்ன்னால. காலு ரெண்டும் வீங்கிப்போச்சாம் .  எனக்கு அழுகை அழுகையாவந்தது அன்னிக்கி அழகரும் வரல என்னான்னு தெரியல எனக்கு ஒரே கொளப்பமா இருந்துச்சு  “ அழகர் ஏன் வரல?’ நு  மறுநாள் அவன் மெதுவா நடந்து வந்தான் அப்பயும்  அவனால நல்லா நடக்கமுடியல. வந்த ராசாங்கம் சொன்னான் இதெல்லாம் வாழ்க்கையில சகஜம்ன்னு லேசா சிரிச்சிக்கிட்டே சொன்னான் ஆனா அவனால வேகமா ஒக்காற நடக்கமுடியல செரமப்பட்டான்

நான் சொன்னேன்” என்னாலதானடா உனக்கு இப்புடி ஆச்சு”ன்னேன். அதுக்கு அவன் சொன்னான். “அதை க்கொண்டாந்தது நான் தானே நீ என்னடா பண்ணுவ..அதுக்கு”ன்னான். “ ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான ஏன் பள்ளிக்கொடத்துக்கு வந்தன்னு கேட்டேன் அதுக்கு   ராசாங்கம் கண்ணில் நீர்வழியச் சொன்னான் ஒருநாள்கூட  ஒன்னப்பாக்காம இருக்க முடியல”ன்ன்னு எனக்கும்அழுகை அழுகையாவந்தது கண்ணத்தொடச்சிக்கிட்டேன்  

அப்ப நான் கேட்டேன் அவன்கிட்ட அதுசரி அழகரும் பள்ளிக்கொடத்துக்கு வரல ஏன்னு தெரியுமா? நு அதுக்கு ராசாங்கம் சொன்னான் “ அழகர நாய்கடீசிருச்சாம் ஊசி போட கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கிக்கிக் கூப்புட்டுப்போயிருக்காகலாம்” நு சொன்னான் “ அடப்பாவமே கடிச்சது சாதா நாயா இல்ல வெறிநாயா?” “ தெரியல எதுகடிச்சாலும் ஊசி போடனமாம் இல்லன்னா கடிபட்டவங்களுக்கும் வெறிபுடிச்சிருமாம்” சரி பாவம் விடுறான்னான் ராசாங்கம்

மறுநாள் அழகர் பள்ளிக்கூடத்துக்கு வந்தான். அப்ப அவனைப்பாத்து நான்  “ லொள் லொள்” நு மெதுவா சத்தம்போட்டேன் ராசாங்கம் “ வேணாண்டா பாவம் அவனே பயந்துபோயிருக்கான் நீ வேற அவனை கிண்டல் பண்ணாத” நு சொன்னான். அதைப்பாத்த அழகர் கண்கலங்கிட்டான். நானும் விட்டுட்டேன் அதுக்கப்புறம் 3 பேரும் பிரண்ட்ஸ் ஆயிட்டோம்.

ஆனா அடுத்த வருசம் அவன் மழைபேஞ்சப்போ கீழ கெடந்த கரண்டு கம்பிய மிதிச்சி கரண்டு பாஞ்சி செத்துப்போனான். அன்னிக்கி எல்லோரும் போயிருந்தோம்  எல்லார்கண்ணும் கலங்கிருச்சு  என்னாலயும் அழுககைய அடக்க முடியல  அழகர்தான் தேம்பித்தேம்பி அழுதான். அப்ப அழகரைத்தான் யாராலயும் தேத்த முடியல...... .அதுதான் அந்த வயசு எல்லாமே வெளையாட்டு தான்...ஆனா அன்பு உள்ளாற இருக்கும் எல்லாருக்கும்  அதுனாலதான் வயசானபின்னாடி கூட ஒரு நாள் எல்லாரும் கூடுறாங்க.  அப்புடி ஒருநாள்ல தான் அழகரைப்பாத்தேன்.  தல முடியெல்லாம் கொட்டிப்போய் கெழவன் மாதிரி இருந்தான்....அப்ப சொன்னான்.......

போட்டுக்குடுத்த அன்னிக்கி ராத்திரி தான் அவனை நாய்கடிச்சது அதுல ரொம்பப்பயந்து போயிட்டானாம் ராசாங்கத்தோட அண்ணன் தான் அவனை ஆஸ்பத்திரிக்கிக் கூப்புட்டுப்போய் ஊசி போட்டு “ பயப்படாத ஒன்னும் ஆகாது” நு சொல்லி பயத்தைப்போக்குனானாம்”

“ராசாங்கம் செத்தத இன்னும் என்னால ஏத்துக்கமுடியலன்னு அப்பையும் கண்ணத்தொடச்சான்...நானும்தான்..........

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

.
மேலும்