துப்பட்டா போடுங்க தோழி

By News Room

புத்தகம்: துப்பட்டா போடுங்க தோழி ஆசிரியர்: கீதா இளங்கோவன் பக்கம்:127

புத்தக விமர்சனங்களில் அதிகப்படியாக தலைகாட்டியது இந்த "துப்பட்டா போடுங்க தோழி" புத்தகம்.அதனைப் பார்த்து இப்புத்தகத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு இப்புத்தகம் வாங்கினேன்.

பெண்ணிய சிந்தனையாளரான ஆசிரியர் கீதா இளங்கோவன் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் 127 பக்கங்கள் அடங்கிய 30 தலைப்புகள் அடங்கிய பெண்ணியத்தைப் போற்றும் மற்றும் அவர்களுக்குத் தன்னம்பிக்கைத் தரும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக உள்ளது.

என்னடா இது,"துப்பட்டா போடுங்க தோழி" என்று தலைப்பே வித்தியாசமா இருக்கே என்று உள்ளடக்கத்தை நோக்கினால் அங்கிருந்த 30 தலைப்புகளும் மேலும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தைத் தூண்டியது. இன்றைய சமூகத்தில் பெண்களின் சிந்தனைப் போக்கு எப்படி உள்ளது,

அவர்களின் உணர்வுகள் இங்கு எப்படி பார்க்கப்படுகிறது, காலங்காலமாக பெண்கள் எப்படி தங்கள் மீது திணிக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும், அதனை பெண்கள் எப்படி இனிவரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் ஒவ்வொரு தலைப்பின் உள்ளும் தலைப்பு சார்ந்த விளக்கங்களும், அதைச் சார்ந்து ஆசிரியர் எழுப்பும் கேள்விகளும்,"சரியா சொல்றாங்கப்பா" என சற்று வியப்பை தந்தது மட்டுமின்றி கட்டுரைகளின் இறுதியில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு என்னதான் பதில், பெண்கள் அவைகளை இந்த சமூகத்தில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தீர்வினையும் இந்த புத்தகத்தில் ஆசிரியர் கொடுத்துள்ள விதம் அழகு. இதில் என் மனம் கவர்ந்தது எது என்றால் பல்வேறு இடங்களில் ஆசிரியர் நம்மை நோக்கி வைத்த கேள்விகள் தான். உதாரணமாக

ஆணின் உடையை பெண் தீர்மானிக்காத போது பெண்களின் உடையை ஆண் ஏன் தீர்மானிக்க வேண்டும்?

பொதுச் சமுதாயமும் அரசும் குழந்தை வளர்ப்பு என்பதைப் பெண்ணின் கடமையாகத்தானே இன்றும் பார்க்கின்றன?வீட்டு வேலையை ஆணும் பெண்ணும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் நிலை இன்னும் இங்கு வரவில்லையே?

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் சமமான பங்கேற்பு இல்லாமால் எடுக்கும் முடிவுகள்  எப்படி எல்லா நேரங்களிலும் பெண்களுக்கு சாதகமானதாக இருக்க முடியும்?குறைந்தபட்சம் பெண்கள் தொடர்பான விஷயங்களிலாவது முதலில் அவர்களை முடிவெடுக்க செய்ய விட வேண்டாமா?   கல்லூரிப் பருவம்,வேலை பார்க்கும் பருவம் வரை தன்னுடைய தோழிகளுடன் நட்பைக் கொண்டாடும் பெண்களால் கல்யாணத்திற்குப் பிறகு நட்பைத் தொடர முடிவதில்லையே ஏன்?

'கற்பு' என்ற 'ஒழுக்க அளவுகள்' ஏன் ஆண்களுக்கு இல்லை?(பெரியார் கேட்ட இக்கேள்வியை ஆசிரியர் இங்கு முன்னிறுத்துகிறார்)

இன்றைய பெண்ணைப் பற்றியும் அவளது கொடுமையான நிலை பற்றியும் நீ கவலைப்படாத போது மனித இனத்தைப் பற்றிப் பெண் ஏன் கவலைப்பட வேண்டும்?

'என்னை மதிக்காத, சுய மரியாதையுடன், சமத்துவதுடன் நடத்தாத மதம் எனக்குத் தேவையில்லை ' என்று இந்தச் சமுதாயத்தில் ஒரு பெண்ணால் துணிந்து சொல்ல முடியுமா?

ஆணுக்குத் திரும்பக் காதல் வரும்போது எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் சமுதாயம்,பெண்ணுக்கென்று வரும்போது அதை ஏற்கிறதா?

கல்யாணம் ஆகும்வரை பெண்ணுக்கும் ஆணுக்கும் செக்ஸ் பற்றி ஏதும் தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் சமூகம்,கல்யாணமான அன்றே அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவகையில் சரியாகும்?

தனக்கு நடந்த கொடுமையைக் குடும்பத்தினரிடம் கூடச் சொல்ல முடியாத அவல நிலையில் பெண் குழந்தைகளை வைத்திருக்கிறோம் என்பது நமக்கு உறைக்கிறதா?

குடும்பத்தினரிடம் தன்னைப் பற்றியோ தனது உணர்வுகளைப் பற்றியோ பேசுவதற்குப் பெண் குழந்தைகளை அனுமதிக்கிறோமா?

பெண் குழந்தைகளும் பெண்களும் பருமனாக இருப்பதில் இந்தச் சமுதாயத்திற்கு என்ன பிரச்சனை?

நல்ல தாய்க்கு என்று இலக்கணம் ஏதும் உள்ளதா?

ஆசிரியர் இங்கு எழுப்பியுள்ள இத்தகைய கேள்விகளே இந்த புத்தகத்தின் வீரியத்தினை வெளிப்படுத்துகிறது என்று என்னைக் கருத வைத்தது.இவ்வாறு கேள்விகள் மட்டுமல்லாமல் இந்த கட்டுரைகளின் இறுதியில் ஆசிரியர் கொடுக்கும் தீர்வுகளும் சார்ட் அண்ட் ஸ்வீட் ஆகவே இருந்தது.ஆணாதிக்கம் நிறைந்த இச்சமூகத்தில் நமது நிலையை யாரிடம் பகிர்ந்துகொள்ள,நாம் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு தீர்வு தான் என்ன என்றும் ஏங்கும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டி நூல் மட்டுமின்றி ஒரு தன்னம்பிக்கை நூலாகவே நான் பார்க்கிறேன்.ஒரு பெண்ணாக இருந்து பெண்கள் சந்தித்து வரும் சொல்லமுடியாத பல இன்னல்களை ஆசிரியர் இங்கு பதிவு செய்யும் போது பெண்கள் மீது என்னை அறியாமலே ஒரு மதிப்பும் மரியாதையும் தோன்றியது என்பேன்.

பக்கத்திற்குப் பக்கம் ஆணாதிக்கப் பொதுசமூக புத்தி,ஆணாதிக்கப் பொதுசமூக புத்தி என்று ஆசிரியர் கூறும் போது ஆணாக பிறந்ததனால் என்னவோ எனக்கு மனம் சிறிது குத்தத்தான் செய்தது😁.ஆனால் அவர் கூறிய ஆண்களின் செயல்பாடுகளை நான் செய்யாத போதும், ' பெண்கள் லாம் ரொம்ப பாவம்ப்பா, இப்படியெல்லாமா அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்கிறாங்க '  என்று அவர்களின் பாதிப்பினை ஆணாக நான் அறிந்திட இப்புத்தகம் எனக்கு வழிகாட்டியது.

ஆசிரியரின் கட்டுரைகளில் என் மனதை கனப்படுத்தியது "பெண்களை வாழ விடுங்கள்" என்ற கட்டுரைதான்.

What will people say என்ற நார்வீஜியன் மொழிபடத்தில் நிஷா என்ற கதாப்பாத்திரம் குறித்து ஆசிரியர் கூறியதைப் பார்த்து மனம் கனத்தது.

அது மட்டுமின்றி துப்பட்டா போடுங்க தோழி,இன்றும் பெண்களுக்குப் பெரியார் தேவைப் படுகிறார்,மனைவியை நேசிப்பவர்கள் வாஸக்டமியை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!(இந்தத் தலைப்பைப் பார்த்ததும் சமையலை விரும்புறவங்க prestige குக்கர் வேண்டாம் ன்னு சொல்ல மாட்டாங்க! என்ற விளம்பரம் மனதில் ஓடி வந்தது😁),வாகனம் பழகு பெண்ணே,முதலிய கட்டுரைகள் எனக்கு முத்தாய்ப்பானவை என்பேன்.

மனதளவில் தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கு மட்டுமின்றி,ஆணாதிக்கக் கருத்துக்களைத் தூக்கிப் பிடிக்கும் ஆண்களுக்கும் கூட பரிசளிக்க இதனைச் சிறந்த புத்தகமாக நான் பரிந்துரைப்பேன்.

கடந்த சில மாதங்களுக்குப் முன் ஆசிரியர் லதா அவர்கள் எழுதிய 'கழிவறை இருக்கை' புத்தகம் வாசித்து முடித்தேன்.அந்தப் புத்தகம் படித்து விட்டு இந்த 'துப்பட்டா போடுங்க தோழி' புத்தகத்தை வாசித்த உடன் இது 'கழிவறை இருக்கை புத்தகத்தின் 2 ஆம் பாகம்தானோ?' என என்னை எண்ண வைத்தது.

ஆசிரியர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. மொத்தத்தில்...

துப்பட்டா போடுங்க தோழி - பெண்களின் சமகால போக்கைக் காட்டும் கண்ணாடி!

மோ.ஆடம்ஸ்.

.
மேலும்