மீண்டும் தூண்டில் கதைகள்

By News Room

புத்தகத்தின் பெயர் : மீண்டும் தூண்டில் கதைகள் ஆசிரியர் பெயர் : சுஜாதா பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் பக்கங்கள் : 200 விலை : ₹119

“மீண்டும் தூண்டில் கதைகள்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பத்தரிகையில் எழுதப்பட்ட சிறுகதை தொகுப்பு. தூண்டில் கதைகளில் சொல்லப்பட்ட மாதிரியே, கதையின் முடிவில் ஒரு சொடக்கு அல்லது ஒரு திருப்பம், அதுதான் இந்த கதைகளின் அடிநாதம். தூண்டில் கதைகளை விட இந்த கதைகள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்தாக எனக்கு தோன்றுகிறது. காரணம் சிறுகதைகளின் பக்க அளவும், வெகு வேகமாக முடிவை நோக்கி செல்லும் கதையின் முடிவாகவும் இருக்கலாம். மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளது.

“கருப்புக் குதிரை” கிரிக்கெட் சூதாட்டத்தை பற்றியது. அம்பயர் பணிசெய்யும் திருவல்லிக்கேணி கிச்சாவின் பார்வையிலிருந்து மொத்த கதையும் சொல்லப்படுகிறது. ஒரு உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி போட்டியை ஃபிக்ஸிங் (Fixing) செய்ய கிச்சாவை அணுகுகிறான் ஒருவன், கிச்சா மறுத்தபின் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை. இந்த கதை எழுதப்பட்டு சில ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் சூதாட்டம், பெரிய அளவில் வெளிவந்தது எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்.

“எல்லாம் இப்பொழுதே” கொஞ்சம் வேகமான காதல் கதை. செல்வகுமார் – நிருபமா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். நடுவில் வரும் செல்வகுமாரின் பாஸ் (boss), நிருபமாவை செல்வகுமாரின் அனுமதியோடு திருமணம் செய்துக் கொள்கிறான், காரணம் ? உங்கள் யூகத்துக்கு விட்டுவிடுகிறார்.

“கி.பி.2887ல் சில விலாசங்கள்” ஒரு அறிவியல்-புனைவு கதை. சுஜாதாவின் புனைவுகதைகளில் காணப்படும் பல்வேறு சொற்றொடர்களை இந்தக் கதையிலும் காணலாம். இந்த கதையின் சில வரிகள் மட்டும் சுஜாதாவின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த போதும் (சிறுகதையுடன் படிக்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்) - ”தேசமே கட்டுப்பெட்டியாக இரா வேளைகளில் கால்பந்துப் போட்டிகளையும் உபநிஷது பாடங்களையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பழைய தமிழ்ப் படங்களைப் போட்டுப் பார்க்கலாம். ஆனால் , செக்ஸ் காட்சிகள் நீக்கப்பட்டு அறிவுரைகளும், ஓரிரு டி.எம்.எஸ் பாடல்களும் தான்(“மயக்கம் எனது தாயகம்”). மகேன் 2887 ஆம் ஆண்டில் வாழும் ஆண். அவனுக்கு அவன் நண்பன் மூலமாக ஒரு பெண்ணின் தொடர்பு கிடைக்கவே, கம்ப்யூட்டர் கண்ணில் எல்லாம் மண்ணை தூவிவிட்டு அவள் வீட்டை/அவளை அடைகிறான்,அதற்கு அப்புறம் என்ன நடந்தது, அதுவே கதையின் முடிவு?

“ஒரு சி.பி.ஐ அதிகாரியின் நினைவலைகள்”, கதை இரு முடிச்சுகள் கொண்டது. நீண்ட காலமாக திருமணம் செய்யாமல் இருக்கும் சி.பி.ஐ அதிகாரி ராமபத்ரன், அவருக்கு உறவு முறை பெண், வர்ஷாவை பெண் பார்க்க ஹாஸ்டலுக்கு செல்கிறார், அதே சமயம் ஒரு ஹவாலா வழக்கை கையாள்கிறார். வர்ஷாவின் உதவியால் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருகிறார். வர்ஷா அவரை மணம் செய்ய ஒப்புக் கொண்டாளா இல்லையா என்பதே மீதிக் கதை.

”எய்தவன்” கொஞ்சம் வித்தியாசமான கதை, கதையின் கருவில் அல்ல. கதை சொல்லும் விதத்திலும் அல்ல, இந்த கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என நினைக்கிறேன் (தவறாக கூட இருக்கலாம்). கதையைச் சொல்லும்போதே அங்கெங்கே தினசரி செய்தித்தாளில் எடுக்கப்பட்ட பக்க துணுக்குகள் ஒட்டப்பட்டு இருக்கும். இந்த கதை படிக்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். சுந்தரலிங்கம் ஒரு வழக்கறிஞர், மாநில அமைச்சர் ஒருவரை எதிர்த்து வழக்கு தொடர்கிறார், அதனால் தாக்கப்படுகிறார், உயிருக்கு போராடி வெளிவந்து, தன்னைக் கொல்ல முயன்றவனை சந்திக்கிறார், அவனை என்ன செய்தார் என்பதே கதையின் முடிவு.

“ஆயிரத்தோராவது பொய்“, நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது, அவள் அழகில் கொஞ்சம் சுமாராக இருக்கிறாள் என பல பேர் அவளை நிராகரிக்க, ஒரு அழகான ஆண் அவளை திருமணம் செய்ய சம்மதிக்கிறான், அவன் ஏன் சம்மதித்தான் தெரியுமா ?.

“பெரியவங்க உலகம்” இந்த கதைகளில் ரொம்ப மாறுப்பட்டது.(என்னை பொறுத்தவரை) இந்த கால மாணவர்கள் செய்யும் சேஷ்ட்டைகள், அவர்கள் எண்ணம் , செயல், போன்றவைகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார். ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், வேறு ஊருக்கு மாற்றல் ஆகி செல்கிறார், அது பள்ளியின் மாணவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது, அதில் ஒரு மாணவன், தலைமை ஆசிரியரின் மனைவி பற்றி ஒரு உண்மையை அறிகிறான், அதனால் அவனிடம் ஏற்படும் மாற்றமே கதையின் முடிவு.

“பை நிறைய பணம்” கதையில் மூன்று திருடர்கள் ஒரு வங்கியை கொள்ளை அடிக்கின்றனர், அதை துப்பு துலக்க வரும் அதிகாரி, வங்கி மேலாளரிடம் வங்கியில் கொள்ளை அடித்தது போக கீழே சிதறி இருக்கும் பணத்தை இருவரும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார், அதை அவர்கள் எடுத்துக் கொண்டார்களா இல்லையா என்பதே கதை.

“லூயிஸ் குப்பத்தில் ஒரு புரட்சி!“ கதையில் தன்னிடம் வேலைப் பார்க்கும் பெண்ணின் பெண்ணுக்கு பணம் உதவி செய்து, திருமணம் செய்து வைக்கிறார், மரகதம். மூன்று மாதத்தில் அந்த பெண், கணவன் கொடுமையால் வீட்டுக்கு வர, அவளுக்கு வேறு ஒரு பையனை மணம் செய்ய முடிவு செய்ய, பழைய கணவன் மீண்டும் வர, அவனுடன் சேர்ந்து மீண்டும் வாழ செல்கிறாள், மீதியை புத்தகத்தில் காண்க !

“பொய்” கதை ஒரு மேலாளர், அவருக்கு கீழே வேலை செய்யும் ஒரு பணியாள் பற்றியது, முதலில் சுமுகமாக செல்லும் அவர்கள் உறவு, இடையில் விரிசல் ஏற்படுகிறது, அது கடைசியில் மேலாளர் பற்றி தவறாக கடிதம் எழுதும் அளவுக்கு செல்கிறது. கடைசியில், நடந்தது என்ன?

“கார்ப்பெட்டில் ரத்தம்.. முகத்தில் புன்னகை!” கதையில் மர்மமான முறையில் ஒருவர் இறந்துக் கிடக்க, அது கொலையா, தற்கொலையா என்று போலீஸ் தடுமாறுகிறது, அதே சமயம் இறந்தவரின் மனைவிக்கு அவளின் பியானோ ஆசிரியருக்கும் ஒரு உறவு, என்று செல்லும் கதையில் முடிவில், அவர் எப்படி இறந்தார் என்பதும் அதற்கன காரணமும் விளக்கப்படுகிறது.

“நான் மல்லிகாவோட மகன்” ஒரு பழிவாங்கல் கதை, தனது தாயை ஏமாற்றி விட்டு ,இப்போது அரசியலில் பெரிய ஆளாக இருக்கும் தன் தந்தையை கொல்ல செல்லும் மகன், அவரை கொன்றும் விடுகிறான், அதற்கு அப்புறம் என்ன நடந்தது ?

இப்படி ஒவ்வொரு கதையும் சுஜாதா அவர்கள் நினைத்த மாதிரியே ஒரு திருப்பத்தை, கேள்வியை தோன்றவைக்கிறது. சுவாரஸ்யமான விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளதால் புத்தகம் வாசிக்க ஆரம்பித்த உடனேயே பக்கங்கள் கரைந்து விடுகிறது.

.
மேலும்