புத்தகம்: முதல் காதல் - விமர்சனம்

By News Room

 நூல்: முதல் காதல்  ஆசிரியர்: இவான் துர்க்கனேவ் தமிழில் வானதி  பதிப்பகம்:a mazon kindle

இவான் துர்கனேவ் ரஷ்ய நாட்டு இலக்கிய மேதை. தன் சொந்த வாழ்வின் காதல் அனுபவங்களை மையமாகக் கொண்டே இவரது புகழ்பெற்ற கதைகள் அமைந்துள்ளன.

பதின்ம வயதில் தோன்றும் முதல் காதல் கொடுக்கும் இன்பமும், துன்பமும் இந்தக் கதையின் கரு.  அந்த உணர்வுகளை அனுபவித்த எவருக்கும் அந் நினைவுகளை சில கண நேரமாவது இந்த நாவல் கொண்டு வரும். காதல் வினோதமானது. காதலுக்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை நாம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் இருக்கும். விளாடிமிர் அவரது காதலின் முதல் நாள் இரவை மறக்காமல் இருக்கிறார்.

பதின்ம வயதில் இருக்கும்  இளைஞனின் முதல் காதல் அனுபவங்களை தன் அழகிய எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். விளாடிமிர் செல்வந்தர் வீட்டு செல்ல மகன். தாய் தந்தையுடன் வசித்து வருகிறான். கல்லூரி படிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞன். பெற்றோர் இருவருக்குள்ளும் பெரிய அளவில் அன்னியோன்யம் கிடையாது.

 பதின்ம வயதில்  வெறுமையான வாழ்வை வாழ்ந்து வருபவனுக்கு அவனது வீட்டின் அண்டை வீட்டு பெண்ணாக வருகிறாள் ஜினைதா என்னும் சிற்றரசி. பார்த்த முதல் பார்வையிலே அவள் மேல் காதல் வயப்படுகிறான். அந்த வயதில் ஏற்படும் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தப்படுகிறான். அத்தகைய உணர்வில் திக்கி முக்காடும் அவனுக்கு அவளுடன் நெருக்கமான நட்பு ஏற்படுத்த வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது. அவளைக் காண்பதற்காக அவள் வீட்டுக்கு செல்கிறான்.

அவளைச் சூழ்ந்து எப்பொழுதும் ஐந்து நபர்கள் இருக்கின்றனர். ஐவரும் ஒவ்வொரு விதத்தில் அவளை ஆழ்ந்து நேசிக்கவேச் செய்கின்றனர். அந்த ஐந்து பேரில் ஒருவனாக ஆறாவதாக இணைகிறான். எப்படியாவது தன் காதலை அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதில் தெளிவாகவே இருக்கிறான். அவளுடன்  தனியான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.  ஜினைதா எல்லாப் பெண்களைப் போலவே இயல்பானவள்,  குழப்பம் நிறைந்த  பெண்மணியாகவே வலம் வருகிறாள். அவளுக்கான தேர்வு யார் என்பது பல நேரங்களில் நமக்கும் குழப்பமாகவே இருக்கிறது.

 நாவல் முழுவதும் ஜினைதாவின் மன உணர்வுகள் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். விளாடிமிர் காதல் உணர்வுகளையும் அதை வெளிப்படுத்த அவன் தவிக்கும் தவிப்பையும் நெடுகிலும் காணலாம். இறுதியில் தன் காதலை விளாடிமிர் தெரிவித்தானா? அதற்கு ஜினைதாவின் பதில் என்ன? அவள் காதலித்தது யாரை? என்ற பல்வேறு திருப்பங்களுடன் நிறைவடைகிறது.

தேர்ந்த உளவியல் ஆய்வாளரான ஆசிரியர்  ஆண், பெண் மன உணர்வுகளையும் காதல் வெளிப்பாடுகளையும் மிக நுண்ணியமாக விளக்கியுள்ளார். ஜினைதா உணர்வு குவியலாகவே நாவல் நெடுகிலும் காட்சியளிக்கின்றாள். பதின் பருவ இளைஞனாக  விளாடிமிர் காணப்படுகிறான். காதல் காவியங்களுக்கு பெயர் பெற்ற ரஷ்ய இலக்கியத்தில் இருந்து மீண்டும் ஒரு காதல் கதை படிக்கப்பெற்றது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

.
மேலும்