காமத்துப்பாலை விவரிக்கும் குறுங்கவிதை!

By News Room

புத்தகம்: ரதி ரகசியம் எழுத்தாளர்: சி.  சரவணகார்த்திகேயன்

இந்த முயற்சியின் ஆதி வடிவம் 2003ஆம் ஆண்டில் எழுத்தாளர் சரவணன் கல்லூரி படித்த காலத்தில்  "இது காதலர்களுக்கு மட்டும்"

என்ற பெயரில் அன்றைய அவரது காதலியும் இன்றைய அவரது மனைவியுமான பார்வதி யமுனாவுக்கு பிறந்தநாள் பரிசாக எழுதியிருக்கிறார்.

 கையெழுத்துப் பிரதியில் அழகிய கையடக்க நூலாக செய்திருக்கிறார். இன்னமும் அதை பத்திரம் செய்து வைத்திருக்கிறாராம் .

மனைவிக்கு  எப்படியோ அவர் வரையில் இத்தனை ஆண்டுகளில் அவர் அளித்த பரிசுகளில் ஆகச் சிறந்தது அதுவே என்கிறார் எழுத்தாளர்.

 வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் காமத்துப்பால் எப்போதுமே கொஞ்சம் வசீகரமானது தான்.  பெயர் காமத்துப்பால் எனினும் உண்மையில் அவற்றில் பெரும்பாலானவை காதலை மட்டுமே பேசுபவை.

 காமத்துப்பாலை ஒவ்வொரு குறளாக எடுத்துக்கொண்டு குறுங்கவிதை ஆக்கி பார்க்க முயன்றிருக்கிறார்.

 மொத்தம் 250 குறட்பாக்கள்- 250 குறுங்கவிகள் முதலில் இந்த கவிதைத் தொகுப்பிற்கு காதல் அணுக்கள் என்ற தலைப்பை வைத்திருக்கிறார்.இந்த கவிதைத் தொகுப்பை புத்தகம் செய்ய தீர்மானித்த போது காலம் உருண்டோடி தொடருக்கு வைத்த தலைப்பு சற்று பலவீனமாக தோன்றவே புதியதோர் அடையாளத்தை வைப்பதற்காக ரதி ரகசியம் என்ற பெயரை வைத்திருக்கிறார் .

காமத்துப்பால் குறட்பாக்கள் பெரும்பாலும்  பெண்ணின் காதல் உணர்வுகளையே சொல்பவை.  அவளது காதல் மனம், அதன் பைத்தியக்காரன் நிலை ,அதில் ஒளிந்துள்ள ரகசியங்கள் .

ஆக, காதலின் பெண்பால் கடவுளான ரதிதேவி என்ற பெயரை தேர்வு செய்தேன் என்கிறார்.

பிற்பாடு தேடியதில் கொக்கோகர் 12ஆம் நூற்றாண்டில் காமம் பற்றி இதே தலைப்பில் நூல் இயற்றியுள்ளார் என்கிற அர்ர்ரிரிரியயயய தகவலை நம்மோடு பகிர்றார். வாத்சாயனரின் காமசூத்ரா போல.(😍😍) என்று தன்னுடைய முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

 உடனே கொஞ்சம் ஜெர்க் ஆகி அமேசான் கிண்டிலில்  கொக்கோகர் எழுதிய  ரதிரகசியம் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினேன் . ஆம் இருக்கிறது  அவர் சொன்னது போலவே.

 இரவோடு இரவாக டவுன்லோடி விட்டேன். யாருக்கும் தெரியாமல் படித்து  விடலாம் என்று முடிவு செய்து,அவசரஅவசரமாக வீட்டு வேலைகளை முடித்து விட்டு, இரவு ஒன்பதரை மணிக்கு மேல் எடுத்து படித்துப் பார்த்தால் எனக்கு சரியான பல்ப்.

 நிஜமாகவே அதில் ஒன்றுமே இல்லை. அத்தினி,  சித்தினி  என்று பெண்களின் வகைகளும் ஆண்களின் வகைகளும் பெண்களின் உடலமைப்பு,  ஆண்களின் உடல் அமைப்பு இவற்றைப் பற்றி தான் அதிகம் இருந்தது. என்னால்  முழுமையாக அதற்கு மேல் படிக்க முடியவில்லை.

காரணம் தோல்வி, அவமானம். எவ்வளவு ஆசையாக யாருக்கும் தெரியாமல் டவுன்லோடினோம். (என் அக்கவுண்டில் என் அக்கா வேறு படிக்கிறாள். ) அவசர அவசரமாக ரிட்டர்ன் செய்துவிட்டேன் .

அதில் ஒன்றுமேயில்லை என்கிற ஆற்றாமை. இந்த அரிய தகவல்களை உங்களுக்கு சொல்லக் காரணம் நீங்களும் உணர்ச்சிவசப்பட்டு டவுன்லோடு செய்ய வேண்டாம் என்கிற தூய்மையான எண்ணத்தில் மட்டுமே. அப்பாடா!

எவ்வளவு சமாளிக்க வேண்டியிருக்கு! அந்த ரகசியத்தை விட எழுத்தாளர் சரவணனின் ரதிரகசியத்தில் கொஞ்சம்  காமம் மேலோங்கியும் கீழோங்கியும்  இருப்பதால் அதை விட இதுவே பெட்டர் என்று இதைப் படிக்கத் துவங்கினேன். பழுதில்லை.  நன்றாகவே இருந்தது.

இந்த குறுங்கவிதை களுக்கு எழுத்தாளர் உரை எழுதவில்லை என்பதை நான் இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும்  அவர் அர்த்தம் கண்டுபிடிக்க வில்லை.   அதன் பொருளை மொத்தமாக உள்வாங்கிக்கொண்டு அவருடைய பாணியில் கொஞ்சம் அர்த்தம் சொல்லி இருக்கிறார்.

 இதை வாசிக்கையில் எங்கேனும் புருவம் உயர்த்தினால் வள்ளுவனும் சுருக்கினால் அதற்கு நானும் பொறுப்பு என்கிறார்.

 கலைஞர் மு கருணாநிதி என்ற தனி மனிதர் இல்லை என்றால் திருக்குறள் இத்தனை தூரம் தமிழர்களின் தினசரியில் இரண்டறக் கலந்து இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார்.

 தொடர்ந்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பேருந்து அலுவலகம் உள்ளிட்ட அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்திலும் திருக்குறளை நீக்கமற இடம்பெறச் செய்த கலைஞருக்கு இந்த எளிய காணிக்கையை அவருக்கு உரித்தாக்குகிறேன் என்கிறார்.

களவியல் என்ற தலைப்பில் 7 உட் தலைப்புகளும் கற்பியல் என்ற தலைப்பில் பதினெட்டு உட் தலைப்புகளும் உள்ளன.

"ஜிமிக்கியின் அதிர்வில் மிக நினைவூட்டுகிறாள் ஒரு பச்சை நீல மயிலை ஒரு வான் தேவதையை " என்று துவங்குகிறது முதல் குறளும் அதற்கான கவிதை வடிவமும் எனக்கு பிடித்த கவிதைகளையும் அவற்றின் மூலம் என்  அனுபவங்களையும் இங்கே நான் பகிர்கிறேன்.

"ஒரு சாட்டின் துணி போல் அவள் அத்தனை மென்மை இன்னும் கண்கள் மட்டும்  திருஷ்டி பொட்டு" "மதங்கொண்ட யானைக்கு முகமூடி இட்டது போல் அத்தனை அப்பாவித்தனம் காட்டுகிறது அவள் துப்பட்டா"

கொஞ்சம் வெட்கப்பட்டேன். "உலகின் அதிபதியான சகலமும் ரத்து செய்து அவள் நெற்றிப் பரப்பில்" "பின்தான் கள்ளின் போதை  பார்த்த கணமே  காதல் போதை"

பார்த்த கணமே காதல் போதை தான் .அதையெல்லாம் விரிவாக எழுதினால் வீட்டில் அடிக்க  வந்துவிடுவார்கள்.

இந்த இரண்டு வரிகள் என் பதின்ம வயதை எனக்கு நினைவூட்டின.

கொஞ்சும் பார்வையும் கொஞ்சம் வெட்கமும் தின்று கண்டமேனிக்கு காதல் கொழுக்கிறது அவள் பாராது இருப்பதும் நான் பாராது இருக்கையில் அவள் பார்த்ததும் அவள் காதல் மொழி பேசத்தொடங்கினார் காதல் கண்களே!

வாயை மூடி சும்மா இரு ஒரு ஜீவ காருண்யம் போல் ஒரு விருந்தோம்பல் போல் சுகமான சுமூகமான செயல் ஒரு பெண்ணை கலத்தல் இவளை இனிக்க இனிக்க இறுக்கி அணைத்து நிற்க மூச்சுத்திணறும் காற்று  முனை மழுங்கும் முலை காம்பு கிள்ளி எறிய அதில் கனகாம்பரம் சூடியதில்  ஒடிந்து விழும் அவள் 24 இன்ச் இடுப்பு பவுர்ணமி என்றெண்ணி அவளிடம் கண்ணடித்து பொறுக்கித்தனம் செய்யும் வானத்து நட்சத்திரங்கள் அவளுக்கு இணையாய் அழகானால் நிலவை காதலிப்பது பற்றியும் சற்று யோசிக்கலாம் காதலே பார்த்திராதவர் காதலே செய்திராதவர் காதலை வைத்திராதவர் காதலை கேலி செய்வர் அவனோடு பேசும்வரை அம்மா திட்டும் வரை அவனை காதலிக்கும் ஆசை வந்ததில்லை நினைக்கும் போதெல்லாம் காதலனை கண் பார்ப்பது சாத்தியமாகி விட்டாள் என் லாக்ரிமல் துருப்பிடிக்கும்

கண்கள் உடைய எவரும் அதில் மிதக்கும் சோகம்  கடந்து காதல் ரகசியம் காக்க முடிவதில்லை ஆண் பிரிவது பொருட்டில்லை பசலைத்திட்டு மகளிர் மட்டும்

அவன் பெயர் அவப்பெயர் ஆகாது நிலைக்கும் எனில் நிறமின்மை முளைக்கட்டும் என் மேனி பரப்பெங்கும்

நான் காதலிக்கிறேன் நீ காதலிக்கவில்லை காதலில் சுய இன்பம் சாத்தியமில்லை இவை எல்லாம் சாம்பிள் தான்.

மெயின் பிக்சர் வேண்டுபவர்கள் புத்தகத்தை படித்து விடுங்கள்.

என் வாழ்நாளில் நான் காமத்துப்பால் அதிகாரத்தில் வரும் குறள் களை படித்ததே இல்லை.

அவ்வளவு நல்ல பெண் எல்லாம் இல்லை. சந்தர்ப்பம் அமையவில்லை என்பதே உண்மை. பாடப்புத்தகங்களில் அனுமதியில்லை என்று தெரியும்.

நான் ஏன் இவ்வளவு நாட்களாக இதை படிக்காமல் இருந்தேன் எனத் தெரியவில்லை.

ஒவ்வொரு கவிதையும் என்  பதின்மவயது கொண்டாட்டங்களை நினைவூட்டிக்கொண்டே இருந்தன.

இருட்டில் நின்று கொண்டு மற்றவர்களிடம் சொல்வது போல் போயிட்டு வர்றேன் என்று சொல்லி கண்ணடித்த சீனியர்.  

அப்போது இரண்டு நாட்களுக்கு ஜிவ்வென்று இருந்தது.

இரண்டே நாட்களில் டியூசன் மாஸ்டர் அந்த பையனை கூப்பிட்டு வேறு இடத்தில் உட்கார வைத்ததன் மூலம் பேஸ்மண்ட் போடப்பட்ட எங்கள் தாஜ்மகாலை இழுத்து மூடினார்.   இப்படி நிறைய நிகழ்வுகள்.  ஆனால் சொல்வதற்கு தைரியமில்லை.  

மிச்சத்தை தேவதை புராணத்தில் சொல்கிறேன்.

.
மேலும்