எழுதியவர் : ஓஷோ (குறிப்பு: இது 100 நாள் 100 புத்தகம் பதிவில் 50-வது புத்தகம். இதுவரை எந்தப் புத்தகத்தையும் இதற்கடுத்து இதுதான் என வரிசைப்படுத்தி எழுதவில்லை. நான் படித்த புத்தககங்களில் அப்பொழுது தோன்றிதைப் பற்றி எழுதினேன். ஆனால் 50-வது மற்றும் 100-வது புத்தகம் நான் வாசித்ததில் சிறந்த புத்தகமாக இருக்க வேண்டும். அதேசமயம் மற்றவர்களுக்கு அது மாற்றத்தைத் தர வேண்டும் என நினைத்தேன். அதன்படி இப்புத்தகம் உங்களுக்கானது)
புத்தகத்தின் தலைப்பைப் படித்ததுமே அடச்சீ!! என்னது இந்த மாதிரி புத்தகத்தை படித்தால் நம்மை என்ன நினைப்பார்கள்' என பெரும்பாலானோர் கடந்து சென்று விடுவார்கள். உண்மையில் இந்தப் புத்தகம் ஒரு 'நெற்றிக்கண்' போன்றது.அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
நான் சிறுவனாக இருந்தபோது அப்பாவின் புத்தக அலமாரியில் இருந்த இந்தப் புத்தகத்தை ஏதோ படிக்கக் கூடாத புத்தகம் போல என நினைத்து எடுக்காமல் தவிர்த்து வந்தேன். பொறியியல் படிக்கும்போது கல்லூரியில் நண்பர்கள் மூலம் ஓஷோ பற்றி பேச ஆரம்பித்தோம். அப்போதுதான் 'காமத்திலிருந்து கடவுளுக்கு' புத்தகம் ஒரு பொக்கிஷம் என தெரிய வந்தது.
அதன் பிறகு தைரியம் வந்து இப்புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். புத்தகத்தை படிக்கப் படிக்கத்தான் உணர்ந்தேன் இதைப் படிக்காமல் விட்டது பெரும் பிழை என. இந்தப் புத்தகத்தை படிக்கும் வரையில் காமம் என்ற சொல் தீண்டத்தகாததாக, சொல்லத் தயங்கக் கூடிய, அருவருப்பாக, தனிமையில் மனத்திற்குள் மட்டும் சொல்லக் கூடிய சொல்லாக இருந்தது. புத்தகத்தை படித்த பிறகு புரிதலே வேற இருந்தது.
இப்புத்தகத்தை வாசிக்கத் துவங்கும் முன் எந்தவொரு மதத்தின் மீதும் தீவிர பற்றுள்ளவராக கொள்கையாளராக இருந்தால் அவற்றை மறந்துவிட்டோ சற்று தள்ளிவைத்துவிட்டோ துவங்குங்கள்! இல்லையெனில் உங்களது அச்சிந்தனைகள் தகர்த்து எறியப்படும். உங்களுக்கு எதிரானவராக நீங்களே மாறக்கூடும். உங்களை நோக்கி வீசப்படும் கேள்விகளிலிருந்தும் ஒரு புதிய பாதை பிறக்கும்! அதுவே உங்களை கடவுளை நோக்கி நகர்த்திச் செல்லும்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து கல் தோன்றி மண் தோன்றி தாவரங்கள் தோன்றி பிற உயிர்கள் தோன்றி மனிதன் தோன்றிய முதல் உலகின் அடிப்படையான விசயம் காமம் அதாவது செக்ஸ். உலகின் முதல் பெண்ணும் முதல் ஆணும் இணைந்ததாலேயே மனித உயிர்கள் தோன்றின. நீங்களும் நானும் பிறரும் விலங்குகளும் எல்லோருமே காமத்தால் பிறந்தவர்களே!
காமத்தால் மட்டுமே உயிர்கள் பிறக்கும் என்னும் நிலையில் 'காமத்தை துறந்தால் மட்டுமே கடவுளை நோக்கி மனிதன் செல்ல முடியும்' என்பது எப்படி சரி என்கிறார் ஓஷோ. பிறப்பின் அடிப்படையே தவறு தீண்டத்தகாதது என சொல்லும் மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளே தவறானது என்கிறார்.
அப்படி எல்லோருமே காமத்தை துறந்து கடவுளை நோக்கி பயணிக்கத் துவங்கினால் மனித குலத்தின் நிலைமை என்ன? சில ஆண்டுகளின் மனிதே இல்லாமல் அல்லவா! போகும். மனிதனே இல்லாத உலகில் கடவுளின் சிருஷ்டிக்கு என்ன வேலை? ஆக மதத்தின் போக்கிலோ அதை போதிப்பவர்களின் அடிப்படையே தவறானது என்கிறார். உங்களையும் என்னையும் படைத்தது எப்படி தவறாகும்!
காமம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதனாலேயே இந்த உலகம் தொடர்ந்து இயக்கத்தில் இருந்து கொண்டேயிருக்கிறது. இங்கே காமம் என்று குறிப்பிடப்படுவது முறையற்ற அல்லது கட்டற்ற உடலுறவை அல்ல!. காமத்தினால் உடலில் உண்டாகும் வேதியியல் மாற்றத்தையும் அதனால் உண்டாகும் இறைநிலை உணர்வுமே இங்கு பேசப்படுகிறது. இறைநிலையை கடவுளை அடைவதற்கான எளிய வழிமுறையாக காமத்தை பயன்படுத்தலாம் என்கிறார் ஓஷோ!
"சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக ஏற்படுத்தியுள்ளார். கடவுளேகூட பாவச் செயல் என்று கருதாத ஒன்றை மிகப்பெரும் மனிதர்கள் பாவச்செயல் என்றழைக்கின்றனர். கடவுள் காமத்தை ஒரு பாவச்செயலாக கருதியிருப்பாரேயாகில் இந்த உலகில் கடவுளைத் தவிர மிகப்பெரிய பாவி வேறு யாரும் இருக்க முடியாது: இந்து பிரபஞ்சத்திலிலேயே அவரைவிட மிகப்பெரிய பாவி இருக்க முடியாது..." என்கிறார் ஓஷோ.
"காமத்திலிருந்து கடவுளுக்கு" புத்தகம். உங்களுக்கு கடவுள் பற்றிய புரிதலை மேலும் விஸ்தீரனப்படுத்தும். செக்ஸ் என்ற சொல்லை உங்கள் மன அகராதியில் புதிய சொல்லாக பதிவேற்றும். காம உணர்வு மனிதனின் இயல்பான உணர்வே! அது தீண்டாமை அல்ல! அதைக் குறித்து குற்றவுணர்வு அவசியமற்றது! காமத்திலிருந்து அன்பும் அன்பிலிருந்து கடவுளை நோக்கிய பயணத்தை துவங்கலாம்!
-சி.பூபதி கண்ணதாசன் -