பாலியல் தொழிலில் இருந்து மீண்டு வந்த பெண்ணின்?

By saravanan

 நூல்: இதய ராணிகளும் இஸ்பேட் ராஜாக்களும்  ஆசிரியர்: ஜெயகாந்தன்  பதிப்பகம்: அமேசான் மின்நூல்

பாலியல் தொழிலில் இருந்து மீண்டு வந்த பெண்ணின் அகவெளியையும் அவளது சமூகப் பார்வையும் பேசும் குறுநாவல். பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்கான காரணங்கள் அச்சமயத்தில் அவள் சந்தித்த ஆண்களின் மனநிலை, அதிலிருந்து அவளை மீட்ட காவல்துறை அதிகாரி, மனம் புரிந்த பத்திரிக்கையாளர் என்று பல்வேறு தரப்பட்ட ஆண்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய நாவல்.

இதயமேரி பெண்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் வாழும் பெண், தான் விட்ட கல்லூரி படிப்பை அங்கிருந்து தொடர்ந்து படித்து, அந்த இல்லத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து இல்லத்தை வழி நடத்தி வருகிறாள். மறுவாழ்வு இல்லங்களை பற்றியப் பேட்டிக்காக ஆல் இந்தியா ரேடியோவில் இருந்து வரும் பத்திரிக்கையாளர் சோமநாதன். இருவருக்கும் ஆன உரையாடல் என்று கதை தொடர்கிறது.

அத்தகைய பேட்டி அவரது வாழ்வில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. பேட்டியின் பொழுது அங்கு வாழும் பெண்களின் மன நிலைகள் அவர்கள் அங்கிருந்து சென்று வாழும் திருமண வாழ்வு ,அவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் என்று பலதரப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். தங்களுக்கு அவ்வாறு திருமணம் செய்யும் எண்ணம் உள்ளதா என்று சோமநாதனை கேட்கிறாள்.தாங்கள் விரும்பும் படி கற்புள்ள ஒரு பெண் இங்கு இருப்பதாகவும் அவள் கூறுகிறாள்.

அவ்வாறான பெண்களை மட்டுமே ஆண்கள் விரும்புவதாகவும் அதற்காகவே அவ்வாறு கூறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சோமநாதனுக்கு இதய மேரியின் மீது விருப்பம் ஏற்பட்டு அவளை திருமணம் செய்வதற்காக இல்ல தலைவியை நாடுகிறார். திருமணத்திற்கு பின்னும் தான் தொடர்ந்து இல்லத்தில் பணிபுரிவதாகக் கூறி இருவருக்கும் திருமணமும் நடைபெறுகிறது. இருவரது திருமண வாழ்வு தொடர்கிறது.

திருமணத்திற்கு பின் அவளிடம் பாலியல் தொழிலுக்கு வந்ததுக்கு காரணம் கேட்கிறார் சோமநாதன். மனதிற்குப் பிடிக்காமல் இத்தொழில் செய்திருப்பார் என்று அவர் மனதில்  எண்ணம் தோன்றுகிறது. அத்தகைய பதிலையே அவளிடம் அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் அவள் சூழ்நிலையில் காரணமாக இத்தொழிலுக்கு வந்தாலும் எந்த இடத்திலும் தனக்கு பிடிக்காமல் இல்லை என்று கூறுகிறாள். வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அத்தகைய பெண்களின் மன ஓட்டத்தை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

தான் சந்தித்த ஆண்கள் அதிலிருந்து வெளியேற காதல் நாடகம் என்று பல்வேறு விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொள்கிறாள். அதிலிருந்து வெளியேறுவதற்கு அவளுக்கு உதவி புரிந்த காவல்துறை அதிகாரி. காவல்துறை அதிகாரியின் மனோபாவம் இரு பெண் குழந்தைகளின் தந்தையான அவர் இவளை  வெளியேற்ற முனைகிறார்.  இதயம் மேரியின் கடந்த கால வாழ்வை அறிந்த பின்னும் அவளது கணவரின் எண்ணங்கள் எவ்வாறு இருந்தது என்பதே கதையின் முடிவு.

ஜெயகாந்தனின் அருமையான எழுத்து நடையில் வழக்கம் போலவே நாவல் சுவாரசியமாகவே அமைந்தது. பாலியல் தொழிலாளியின் மனஓட்டங்களை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளார். சோமநாதன் இதயமேரி  உரையாடல் சுவாரசியமாக அமைந்தது. அவசியம் வசிக்க வேண்டிய புத்தகம்.

.
மேலும்