ஆடி அமாவாசை சிறப்புகள்

By News Room

இந்த நாளில் வசுருத்ர ஆதித்யர்கள் எனப் படும் மூன்று தலைமுறை பித்ருக்களின் பெயரைச் சொல்லி வார்க்கும் எள்ளும் தண்ணீரும் நம் சந்ததிக்குப் புண்ணியத்தைத் தேடித் தரும். பித்ருக்களின் ஆசி கிட்டும்.

? ஆடி மாதத்துக்கு அப்படி என்ன சிறப்பு?

நம் மனத்துள் இருக்கிற கவலைகளையெல்லாம் போக்கி, மகிழ்ச்சியைத் தரக்கூடிய அற்புதமான மாதம்- ஆடி மாதம்! ‘ஆடிப் பாடிக் கொண்டாடுதல்’ என நாம் நம் மகிழ்ச்சியை வெளிப் படுத்துவோம்தானே... அதேபோல, இந்த ஒரு வருடம் முழுவதும் முழுமையான இன்பத்துடனும் நிம்மதியுடனும் அமைவதற்கு, ஆடி மாதத்தில் நாம் செய்கிற பூஜைகளும் விரதங்களும் ஆணிவேராக, அஸ்திவாரமாக இருக்கும் என்றால், அது மிகையில்லை.

காலையில் இருந்து கடுமையாக உழைத்து, மாலையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தாருடன் குதூகலித்து, மறுபடியும் மறுநாள் எழுந்து வேலைக்குச் செல்வதுதான், மனித வாழ்வின் அன்றாட நடைமுறை.

மாலைப்பொழுதின் களிப்பும் இரவின் ஓய்வும் மறுநாள் உழைப்ப தற்கான உடல் தெம்பையும் மனோதிடத்தையும் உற்சாகத்தையும் தரும். அந்த வகையில், தேவர்களுக்கு மாலைப் பொழுதாக விளங்கக் கூடிய இந்த ஆடி மாதம் தொடங்கி ஆறு மாதங்கள் வரையிலான காலத்தில், பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்திருக்கின்றன. அவற்றை அனுஷ்டிப்பவர்களுக்குச் சகல சௌபாக்கியங்களும் தேடி வரும்.

ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலம் என்று போற்றுவார்கள். நவகிரகங்களின் நாயகரான சூரிய பகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குச் செல்கிறார். அதாவது, பித்ரு காரகனான சூரிய பகவான், மாத்ருகாரகனான சந்திரனின் வீட்டில் அமர்கிற காலம். ஆடிமாதச் சிறப்புக்கு இதுவும் காரணம் எனலாம்.

? ஆடி அமாவாசை மற்ற அமாவாசை தினங்களைவிட அதீத முக்கியத்துவம் பெறுவது ஏன்?

சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளையே அமாவாசை தினம் என்கிறோம். மாதம்தோறும் அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. குறிப்பாக தை அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாள்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். மற்ற மாதங்களிலும் மாதந்தோறும் அமாவாசை தினம் உண்டு என்பது நமக்குத் தெரியும். அதுபோன்ற அமாவாசை நாள்களில், பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களுக்கு உரிய கடனைச் செய்ய தவறியவர்கள், ஆடி அமாவாசை தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடலாம். இதனால், முன்னோரின் ஆசி கிடைக்கும்; அவர்களின் ஆசியினால் சகல சௌபாக்கியங்களும் நம் இல்லங்களில் பெருகும் என்பது உறுதி.

? ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர் தர்ப்பணம் எதற்காக?

ஆடி அமாவாசை நாள், முன்னோர்களுக்குக் கடன் அளிப்பதற்கும் தெய்வ வழிபாட்டுக்கும் சிறந்ததொரு தினம். இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, அவரவர் வழக்கப்படி காலைப் பொழுதின் வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுதல் சிறப்பு. அன்றைய தினம் எப்பாடு பட்டேனும் மிகுந்த நம்பிக்கையுடனும் தூய்மையுடனும் தர்ப்பணத்தைச் செய்யுங்கள். இந்த உடலானது கடவுளாலும் தாய்- தந்தையாலும் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. நம் உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் பலமாக அடிபட்டிருந்தால், நம்மால் எந்தவொரு செயலையும் செவ்வனே செய்யமுடியாது. அப்படியிருக்க, இந்த உடலே இல்லாது போனால், நம் கர்மவினைகளை எவ்விதம் போக்கிக் கொள்வது என்று சிந்தியுங்கள். ஆக, கடவுளாலும் பெற்றோர்களாலும் நமக்குக் கிடைத்த இந்தப் பிறவிக்கு நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது அவசியம் அல்லவா?

ரிஷி பெருமக்களால் வழங்கப்பட்டுள்ள இந்தக் கிரியைகளால், நம்மால் நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. நம் முன்னோர்களுக்கான கடனைச் செய்து அவர்களைத் திருப்திப்படுத்தினால், நமக்கு மட்டுமன்றி நம் சந்ததியினருக்கும் மிகப் பெரிய நன்மைகளும் பலமும் கிடைக்கும் என்பது உறுதி.

? யார் யாருக்கெல்லாம் தர்ப்பணம் அளிக்கலாம்?

யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. மறைந்துவிட்ட தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

? முன்னோர் தர்ப்பணம் செய்துவைப்பவர்களுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும்?

பித்ருக்களுக்குக் கடன் அளிப்பது போலான காரியங்களில், தர்ப்பணம் செய்து வைக்கும் புரோகிதருக்கு தாம்பாளம் ஒன்றில் அரிசி, பயத்தம்பருப்பு, வெல்லம், வாழைக்காய், வெற்றிலை- பாக்கு, தட்சணை என நம்மால் இயன்றதை வழங்கி, அவர்களை நமஸ்கரிக்க வேண்டும். நம் முன்னோர்களின் பிரதிநிதிகளாக நம் வீட்டுக்கு வந்திருக்கும் அவர்களைத் திருப்திப்படுத்தினால், நம் பித்ருக்கள் மகிழ்வர் என்கின்றன சாஸ்திர நூல்கள்.

ஆடி அமாவாசை எனப்படும் புனித நாளில், அலுவலக வேலை இருந்தாலும், அரை நாளேனும் விடுமுறை எடுத்துக்கொண்டு, ஆற அமர பித்ருக்களுக்கான வழிபாட்டில் இறங்குங்கள். முழு ஈடுபாட்டுடன் பித்ருக்கடனை நிறைவேற்றுங்கள்.

முக்கியமாக, ஏழை எளியோருக்குத் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யுங்கள். உங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்துச் சிறக்கும்.

? ஆடி அமாவாசை நாளில் வீட்டில் வைத்து தர்ப்பணம் கொடுக்கலாமா?

ராமேஸ்வரம், கங்கை, காவிரி, பவானி கூடுதுறை முதலான நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள், புண்ணிய நதிகளுக் குச் சென்று நீராடி, புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட்டால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறலாம்.

‘அடடா! அப்படி நதிகள் எதுவும் எங்கள் ஊரிலோ ஊருக்கு அருகிலோ இல்லையே..?’ என்று எவரும் வருந்தத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே, முன்னோர்களை நினைத்துத் தர்ப்பணம் செய்யலாம்; தவறே இல்லை.

NANDRI  : ஷண்முக சிவாசார்யர் – ANANDA VIKATAN

.
மேலும்