ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்த திருசெந்தூர் முருகன்

By saravanan

திருச்செந்தூரில் ஆதிசங்கரர் முருகனை தரிசனம் இடையூன்றி கிட்டவும், ஒரு எதிர் மதத்தைச் சேர்ந்த மாந்த்ரீகர் அபிசாரம் (செய்வினை) மூலம் தனக்கு உண்டாக்கிய சரீர உபாதையை நீக்கும்படியும் முருகனை அருள்புரியுமாறு வேண்டினார். கந்தன் தரிசனமும் கண் குளிரக் கிடைத்து உபாதையும் நீங்கப் பெற்றார்.

முதலில் கணேசனைத் துதித்து பின் குகனைப்பற்றி மழை பொழிவது போல் தாரை தாரையாக சுலோகங்களைப் பொழிந்து விட்டார். இதுவே ஸப்ரஹ்மண்ய புஜங்கம் என்ற அழகான ஸ்தோத்திரம் ஆகும். இது புஜங்க மெட்டில் அமைந்த துதிப்பாடல், கந்தன் சர்ப்ப உருவில் கர்ப்பக்கரகத்திலிருந்து காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஏதோ ஒரு சக்தி கிருதயத்திலிருந்து வெளிப்பட்டு ஸ்தோத்திர வடிவில் வருவதாக ஆதிசங்கரர் இரண்டாவது சுலோகத்தில் தெரிவிக்கிறார்.

மூன்றாவது சுலோகத்தில் ஹே குமாரரே உமது வாகனமோ மயில், நீரோ மகா வாக்கியங்களின் உட்பொருளாவீர். உம் உடலின் அழகோ மன்மதனையும் வெட்கித் தலை குனியுமாறு செய்விக்கிறது. உன் இருப்பிடமோ மகான்களின் இருதயம், பூதேவர்களான வேத வித்துக்களோ உம்மையே சதா உபாசிக்கின்றனர். உமது தந்தையோ பரமசிவன் ஆவார். நீரோ எல்லா உலகங்களையும் காப்பவர். உம்மை புஜிக்கிறேன். என வேண்டுகிறார்.

ஓ முருகா, நீ கடற்கரையில் குடி கொண்டிருப்பதன் ரகசியம் புரிந்து விட்டது. எங்கனம் பெரிய பெரிய அலைகளாயினும் உன் கோவில் வாயிற்படி வந்ததும் அழிந்து விடுகின்றனவோ, அங்கனம் உன் பக்தர்களை எதிர்த்து வரும் பெரிய பெரிய ஆபத்துக்களும் உன் சந்நிதியை அடைந்த மாத்திரத்தில் அழிந்து விடுகின்றன என்பதைக் குறிப்பால் உணர்த்தவே இங்கு கடற்கரையில் நீ வசிக்கிறாய், இத்தகைய கருணைக் கடலான உம்மை என் இதய கமலத்தில் தியானம் செய்கிறேன்.

பின்னர் முருகனின் சரண கமலம். இடுப்பு, மார்பு, நீண்ட புஜங்கள், சரத்கால சந்திர மண்டலம் போல் பிரகாசிக்கும் முகங்கள் பன்னிரு கண்களின் கடாச மகிமை. சிரஸ் முதலியவற்றை பாதாதிகேச வர்ணனை செய்த பின், பதினேழாவது சுலோகத்தில் திரிபுரசம்காரம் செய்த பரமேச்சவரனின் செல்வக்குமாரனும், ஜ்வலிக்கும் ரத்னமயமான தோள்வளை உயைவரும், முக்தாகாரம் அணிந்தவரும், அசையும் போது குண்டலங்களின் ஒளியால் பிரகாசிக்கும் கன்னங்களை உடையவரும், இடுப்பில் பீதாம்பரம் அணிந்தவரும், கையில் வேல தரித்தவருமான குகன் என் முன்பு காட்சியளிக்கட்டும் என்றார். என்ன விந்தை உடனே முருகன் சங்கரருக்கு அவர் வர்ணித்தபடியே காட்சியளித்தாராம்.

.
மேலும்