5 ஆண்டுக்கு ஒரு முறை வெளியே வந்து அருள் பாலிக்கும் அம்மன்!

By saravanan

திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளி அம்மன் கோயில் என்பது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலாகும்.

 

இந்த ஆயிரங்காளியம்மனுக்குப் படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரமாகப் படைக்கப்படுவதால் அம்மனின் இந்த அம்மன் ஆயிரங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

 

ஒரு காலத்தில் கலிங்கத்தை ஆண்டுவந்த அரசன் ஒருவன் அன்னைக் காளிதேவியை உருவாக்கி நாளும் அவளுக்கு ஆயிரமாயிரம் பொருட்களும் பழங்களும் மலர்களும் சித்திரான்னமும் செய்து பூஜை செய்து வழிபட்டுவந்தான். அந்த மன்னனின் இறுதிக்காலத்தில் அவன் கனவில் தோன்றிய காளி, “தன்னை ஒரு பேழையில் வைத்துக் கடலில் விட்டு விடுமாறும், தான் வேறு இடம் சென்று கோயில் கொண்டு தங்குவதாகவும்” என்று கூறினாள். மன்னனும் அவ்வாறே செய்தான்.

 

கடலில் மிதந்து வந்த பெட்டி திருமலைராயன்பட்டினக் கரையோரம் வந்து சேர்ந்தது. அந்நகரில் வசித்துவரும் செங்குந்தமரபைச் சேர்ந்த பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய அன்னை, கலிங்க மன்னனின் குலதெய்வமான தான் இப்போது கடலில் தவழ்ந்து கொண்டிருப்பதாகவும்’ கடலில் மிதக்கும் இந்த அன்னையை நீயே கரை சேர்ப்பாய்..’ என்றொரு குரல் வரவே விடிந்ததும் அந்தப் பெரியவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்று அன்னை இருந்த பேழையை எடுத்துக் கொண்டு வந்தார்.

 

பேழையைத் திறந்துபார்த்தால் உள்ளே காளியம்மன் புன்னகைப் பூத்திடக் காட்சியளித்தாள். கூடவே ஒரு ஓலைச் சுவடி .. ‘என்னைப் பெட்டியை விட்டு வெளியே வைத்து ஆயிரம் பழங்கள், ஆயிரம் பட்சணங்கள் இவைகளுடன் தான் வணங்க வேண்டும் என்று இருந்தது. ஒவ்வொரு நாளும் படையலுக்கு வகைக்கு ஆயிரம் படைக்க முடியாத காரணத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூஜை செய்திட முடிவெடுத்து, அதன் படி தற்போதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அம்மன் சிலைக்கு பூசைகள் நடைபெற்று வருகின்றன. அதுவரை பேழையை மட்டுமே வழிபடுகின்றனர்.

 

ஓலையில்

"அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்

இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள், அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்

எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்

ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை

திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!" என்று இருந்தது.

 

அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் கலீர் என்று கேட்கும். அதன் பின்பே பேழை திறக்கப்படும். ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும். 

 

அன்னையை வெளியே எடுக்கும் நாள் இரவு வெளியே எடுத்து அலங்கரிக்கபடுவாள். பின் அடுத்த நாள் காலை முதல் தரிசனம் தருவாள். அடுத்த நாள் விடிவதற்குள் பெட்டிக்குள் வைக்கப்படுகிறாள்.

 

இவளிடம் என்ன வரம் கேட்டாளும் வாரி வழங்குகிறாள். தங்களால் இயன்றதை ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை ஆக்குகின்றனர். தனது பக்தர்கள் துயர் தீர்க்கும் கற்பக விருட்சமாக அன்னை ஆயிரங்காளி கோவில் கொண்டுள்ளாள்.

 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில், இரண்டு நாள்கள் மட்டுமே அம்மனை தரிசிக்க முடியும். வைகாசி மாத வளர்பிறையில் இரவு பெட்டி திறக்கப்பட்டு பூசைகள் நடக்கும் இவ்வாறு 2017 ஜூன் 5 அன்று இரவு பேழையிலிருந்து அம்மனை பக்கர்கள் எழுந்தருளச் செய்தனர். ஆறாம் தேதியன்று அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரர் கோயிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பூஜைப் பொருட்கள், பழங்கள் உள்பட சீர்வரிசைப் பொருட்கள் ஒவ்வொன்றும் 1,000 வீதம் ஆயிரங்காளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து ஏழாம் தேதி ஆயிரங்காளியம்மனுக்கு சோடச உபச்சார தீபாராதனை காட்டப்பட்டது. அன்றும் மறுநாளும் பக்தர்கள் அம்மனைத் தரிசித்தனர். 

 

பின்னர் 9 ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக அம்மன் மீண்டும் பேழைக்குள் வைக்கப்பட்டாள். இதற்கு அடுத்து 2022-ம் ஆண்டில் அம்மன் மீண்டும் பேழையிலிருந்து எடுக்கப்பட்டுப் பூஜை நடைபெற்றது.

.
மேலும்