தயாநிதீஸ்வரர் கோயில்,. வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர்

By nandha

திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் வாலியால் வழிபடப்பட்ட இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியில் திருவிடைமருதூருக்கு அருகாமையில் சுக்ரீவனால் வழிபடப்பட்ட ஆடுதுறை என்ற பெயரிலேயே இன்னொரு தலம் இருப்பதாலும், இந்தத் தலத்துக்கு அருகில் பெருமாள்கோவில் என்றோர் ஊர் இருப்பதாலும், இரண்டையும் வேறுபடுத்துவதற்கு, வடகுரங்காடுதுறை என்ற இந்த தேவாரத் தலம் இன்று ஆடுதுறை பெருமாள்கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிறிய ஊர். சாலையோரத்திலேயே, சற்றே உள்ளடங்கினாற் போல் கோயில் தென்படுகிறது. ஐந்து நிலை கிழக்கு ராஜ கோபுரமும் இரண்டு பிரகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், வலப் பக்கம் பழைய வாகன மண்டபம். அதற்கு மேற்காக, நவக்கிரகச் சந்நிதி. சமீபகாலப் பிரதிஷ்டை. அதற்கும் மேற்காக, அம்பாள் சந்நிதி. மூலவர் கோயிலுக்குப் போகும் உள் வாயிலுக்கு எதிரே பிரதோஷ நந்தியைக் காணலாம். இவற்றைத் தவிர, இந்த வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. வெளிப் பிராகாரத்தின் ஒரு பகுதியில் பசு மடம் உள்ளது. உள் வாயில் வழியே நுழைந்து உள் பிராகாரத்தை அடையலாம். வாலி இராவணனுடன் போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டான். வாலி வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இறைவன் கருவறை வலம் வரும்போது மூலவர் சந்நிதியின் தெற்குச் சுற்றுச் சுவரும் மேற்குச் சுற்றுச் சுவரும் சந்திக்கிற இடத்தில், வாலி சிவபெருமானை வழிபடுவதைக் காட்டும் சிறிய சிற்பம் உள்ளது. மூலவர் பின்புறக் கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருப்பதற்கு பதில் இங்கு அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவம் மிகமிக அழகாகவுள்ளது. தென்மேற்குப் பகுதியில், மஹா கணபதி சந்நிதி உள்ளது. அடுத்து வள்ளி- தேவசேனா சமேத சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்கு முருகப்பெருமான் ஒரு திரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமான் மீது 3 பாடல்கள் உள்ளன. அடுத்து காசிவிஸ்வநாதரும் கஜலட்சுமியும் உள்ளனர். வடக்குச் சுற்றில் வடகிழக்கு மூலையில், தெற்குப் பார்த்த நடராஜர் சபை உள்ளது. இங்கே எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற நடராஜப் பெருமான் மூலவராக, சிலாரூபமாக (கற்சிலை) காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மையும் நடராஜரும் மூலவர்களாக இங்கு தரிசனம் தருவது வெகு விசேஷம். கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர், தேவாரம் பாடிய மூவர் மற்றும் . அவர்களை அடுத்து எந்தப் பெண்ணுக்காகத் தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அந்தச் செட்டிப் பெண் சிலையும் உள்ளன.

கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.

தல வரலாறு: இத்தலத்தில் நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.

இறைவன் சந்நிதி முன் உள்ள முக மண்டபத் தூண் ஒன்றில் சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்சநேயரைக் காணலாம். அனுமன் சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில் வடகுரங்காடுதுறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர் ஒரு பிரார்த்தனா மூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பார். கருவறையைச் சுற்றி வரும்போது காணப்படும் தட்சினாமூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷமுடையதாகும். இவரை மனமாற பிரார்த்திதால் குருபலம் பெருகும். மேலும் இவ்வாலயத்தில் இறைவன் கருவறை வடக்கு கோஷ்டத்தில் காணப்படும் விஷ்னு துர்க்கை மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும். இத்தலத்தில் துர்க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் கூடிய சந்நிதியில் அருள்மிகு அழகுசடைமுடியம்மை எனும் பெயருடன் அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி, கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாட்களில், மடியில் பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு சித்திக்கும். அம்மனுக்கு மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும் எனபது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. வாலி இத்தல இறைவனை வழிபட்டுள்ளதை சம்பந்தர் தனது பதிகத்தின் 6 வது பாடல் மற்றும் 8-வது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில்,. வடகுரங்காடுதுறை – 614 202. தஞ்சாவூர் மாவட்டம்.

.
மேலும்