கங்கம்மா ஜாத்ரா - திருப்பதி

By News Room

 திருப்பதி அருகிலுள்ள  ஸ்ரீநிவாச மங்காபுரம்  கிராமத்தில் கங்கம்மா என்ற மூதாட்டி சுண்டல் விற்று, அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை. "ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள்.

அந்தக் காலத்தில்  திருமலைக்கு  வாகன பாதை கிடையாது.  திருமலைக்கு  நடந்து செல்ல இரு பாதைகள் உள்ளன. 

1 . அலிபிரி - திருப்பதிக்கு அருகில் உள்ளது. நெடுநாட்களாக பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வருவது. 9 கிமீ நீளமுள்ள இந்த மலைப்பாதையில் ஐந்து கோபுரங்களுடன் மொத்தம் 3550 படிக்கட்டுகள் உள்ளன. 

2 . ஸ்ரீவாரி மெட்டு - திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ளது.  செங்குத்தான  படிக்கட்டுகளுடன் குறைந்த  நீளமுள்ள  மலைப்பாதை.  இந்த பாதையின்  திருமலை  உச்சியில்  இருந்து  பார்த்தால்  கீழே  உள்ள ஸ்ரீநிவாச மங்காபுரம்  ஊர்  தெரியும்.    பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து சமீப ஆண்டுகளில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது. 

               அந்தக் காலத்தில், ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள்;  இன்றும்  இந்த  பாதையில்   மக்கள் கூட்டம் கூட்டமாக தான் திருமலைக்குச் செல்வார்கள்.  வழியில்  மிருகங்கள்  அல்லது  வழிப்பறி  கும்பலால்  ஆபத்து  ஏற்பட்டால்,  ஒதுங்க  இடமில்லாமலும்,  ஓட  முடியாத  செங்குத்தான  படிக்கட்டுகள்  கொண்ட  பாதை இதுவாகும்.  

               அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட கங்கம்மா பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள். அவளுடைய அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள்  "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர். உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.                  இதைக் கேட்டவுடன்  சுண்டல் கூடையோடு திருமலைக்கு படி ஏறி  சென்று  ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் வேண்டினாள்.                ♥ தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள். அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு  பணம்  தராமல்   நடையைக் கட்டினார்.  கங்கம்மாபாட்டி  "ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் .  ஏழுமலையானும்  "அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார்.                  கெஞ்சலாக. தன் முன்னால் வந்து நிற்பது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதை அறியாத கங்கம்மா "சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள். மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள். பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன்.                  மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்த அவர் பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!,  இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார். 

               இந்த நிகழ்வுக்கு பின்பு, கடந்த சில நூற்றாண்டுகளாக கீழ்த் திருப்பதியில் மட்டும் "கங்கம்மா ஜாத்ரா" என்னும் திருநாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா, கோவிந்த கடவுளின் தமக்கையாக கருதப்படுகிறார்.

.
மேலும்