முருக கடவுளுக்கு உகந்த விரதங்கள் என்ன?

By saravanan

இந்து கடவுளில் அதிகமானவர்களால் விரும்பப்படும் தெய்வம் முருகப்பெருமான் ஆவார்.

முருகப்பெருமானுக்கு என மூன்று விரதங்கள் முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. அவை வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் என்பதாகும். செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டிப்பது வார விரதம், கிருத்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது நட்சத்திர விரதம், சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது திதி விரதம் எனப்படும்.

இதில் தேய்பிறை சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் மகத்தான பல நன்மைகள் நடக்கும்.

சஷ்டி விரதம் :

சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஒரு நாளை குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

தேய்பிறை சஷ்டி ஏன் முருகனுக்கு உகந்தது?

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. தேய்பிறை சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

இந்த தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால்முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.

வீட்டில் வழிபடும் முறை :

முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நினைத்து சஷ்டியில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும் என்பது நம்பிக்கை. தேய்பிறை சஷ்டி அன்று காலை குளித்து விட்டு சுவாமி படத்திற்கு மாலை அல்லது பூக்கள் அணிவித்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, பால், பழம் நெய்வேத்தியம் செய்து கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தகுரு கவசம்பாராயணம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம்.

அவல் நெய்வேத்தியம் படைக்க மிகவும் நல்லது. இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்கு நாவல் பழமானது மிகவும் இஷ்டமான ஒரு பழம் ஆகும். நாள் முழுவதும் மாமிசம் உண்ணக்கூடாது.

எந்தவொரு விவாதமும் செய்யக்கூடாது. அன்றைய தினம் முழுவதும் மௌனவிரதம் இருப்பதால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.

.
மேலும்