அனுமன் சாலிசா பிறந்த கதை?

By saravanan

துளசிதாசர் வனத்தில் வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர்ப்பித்தார். இந்த செய்தி முகலாய அரசர் அக்பர் செவிக்கும் எட்டியது. இதனால் அக்பருக்கு துளசிதாசரை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எவ்வாறேனும் துளசிதாசரை தனது தர்பாருக்கு அழைத்து வந்து நேரடியாக அவர் செய்யும் அற்புதத்தைக் காண வேண்டும் என்று அவருக்கு ஆசை ஏற்பட்டது. அரசவைக்கு அழைத்து வரப்பட்ட துளசிதாசரிடம், “ராமனின் அருளாலும் உங்களின் பக்திலும் இறந்தவரின் உயிரை மீட்டது போல, என்னுடைய அரசவையிலும் ஒரு அற்புதத்தை நீங்கள் நிகழ்த்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் அக்பர்.

அதற்கு துளசிதாசர், “நான் மாயாஜாலக்காரனல்ல. ஸ்ரீ ராமனின் பக்தன் மட்டுமே” என்று துளசிதாசர் சொல்ல, அதைக்கேட்டு கோபப்பட்ட அக்பர், அவரை சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர் தினமும் ஆஞ்சனேயர் மீது ஒரு போற்றி பாடல் இயற்றி வழிபட்டார். இப்படி தினம் ஒரு பாடலாக சிறையில் இருந்தபோது நாற்பது நாட்கள் அவர் எழுதிய நாற்பது பாடல்கள்தான் ‘அனுமன் சாலிசா.’

அனுமன் சாலிசாவை துளசிதாசர் எழுதி முடிக்கும் தருவாயில் ஒரு அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது நகரம் முழுவதும் பெரிய குரங்கு கூட்டம் புகுந்தது அந்த குரங்குகளின் சேட்டைகள் அரண்மனை, அந்தப்புரம், கடைவீதிகள், தோட்டம் , தெருக்கள் என எல்லா இடங்களிலும் தங்கள் சேட்டைகளை செய்யத் தொடங்கின. இதைக் கண்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனைக் கண்டு அக்பர் செய்வதறியாது குழப்பமடைந்தார்.

அப்போது ஒரு பெரியவர் மன்னரிடம் சென்று “துளசிதாசரிடம் நீங்கள் கேட்ட அற்புதம் நிகழ்ந்துவிட்டது. ராமதூதனுடைய அவதாரமான குரங்குகள் படை எடுப்பின் மூலம் ஒவ்வொரு மக்களுக்கும் ராம தரிசனம் கிடைத்துவிட்டது. எனவே, துளசிதாசரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார். துளசிதாசரை விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார். அதோடு துளசிதாசரிடம், “குரங்குகள் தொல்லையினால் நகர மக்கள் அவதிப்படுகிறார்கள். குரங்குகளை இங்கிருந்து மீண்டும் காட்டுக்குச் செல்ல தாங்கள்தான் உதவி செய்ய வேண்டும்” என்று அக்பர் கேட்டுக் கொண்டார்.

உடனே துளசிதாசர் அனுமனிடம் மக்களின் துயரத்தை நீக்குமாறு வேண்டிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார். துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது நகரத்தில் ஆங்காங்கே சேட்டை செய்து கொண்டிருந்த குரங்குகள் மாயமாய் மறைந்தன. இதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். குரங்குகள் மறைந்ததை எண்ணி துளசிதாசரின் மகிமையை அக்பர் உணர்ந்தார். ஸ்ரீராமரின் பெருமையையும் அறிந்தார். நமக்கு அற்புதமான ‘அனுமன் சாலிசா’வும் இப்படித்தான் கிடைத்தது.

.
மேலும்